திருப்பூரில் 4 ஆண்டுகளாக டெலிவரி செய்யப்படாத தபால்கள்.. 7 மூட்டைகளில் பறிமுதல்.. தபால்காரர் செய்த சம்பவம்!
Tirupur Postman Suspended: திருப்பூர் மாவட்டத்தில் கடந்த 4 ஆண்டுகளா முக்கிய ஆவணங்கள் உள்ளிட்ட தபால்களை டெலிவரி செய்யாமல் வீட்டில் 6 மூட்டைகளில் பதுக்கி வைத்திருந்த தபால் காரர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இந்த தபால்கள் பறிமுதல் செய்யப்பட்டு உரியவர்களுக்கு வழங்கப்பட உள்ளன.
திருப்பூர் மாவட்டம், பல்லடம் அருகே உள்ள காரணம்பேட்டை பகுதியில் கிளை தபால் நிலையம் செயல்பட்டு வருகிறது. இந்த தபால் நிலையத்தில் ஏராளமான ஊழியர்கள் வேலை பார்த்து வருகின்றனர். இதில், செந்தில்குமார் என்பவர் தபால்காரராக பணியாற்றி வந்தார். இவரது பிரதான பணி என்பது தபால் நிலையங்களுக்கு வரும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பொதுமக்களுக்கு வழங்குவது ஆகும். இந்த நிலையில், காரணம்பேட்டை கிளை தபால் நிலையம் எல்லைக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொது மக்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக வர வேண்டிய முக்கியமான அரசு கடிதங்கள், வங்கி கணக்கு ஆவணங்கள், ஏடிஎம் கார்டுகள் உள்ளிட்டவை நீண்ட நாட்களாக சம்பந்தப்பட்ட நபர்களுக்கு வராமல் இருந்துள்ளது. இதனால், சம்பந்தப்பட்ட பொதுமக்கள் தொடர்புடைய அலுவலகங்களில் புகார் அளித்தனர். அதன்படி, இது தொடர்பான புகார் திருப்பூர் கோட்ட தபால் துறை அதிகாரிகளுக்கு சென்றது.
தபால் நிலையத்தில் அதிகாரிகள் அதிரடி ஆய்வு
அந்த புகாரின் அடிப்படையில், தபால் துறை அதிகாரிகள் காரணம்பேட்டை கிளை தபால் நிலையத்தில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில், பல்வேறு அரசு, தனியார் அலுவலகங்கள், தனி நபர்களிடம் இருந்து ஏராளமான கடிதங்கள் வரப்பெற்றுள்ளன. அந்த கடிதங்களும், இந்த தபால் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட நபர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது தெரியவந்தது. ஆனால், தபால் நிலையத்தில் இருந்து வெளியே கொண்டு செல்லப்பட்ட தபால்கள் சம்பந்தப்பட்ட நபர்களை சென்றடையவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது.
மேலும் படிக்க: “முதல்வர் விஜய் கரூர் செல்வதற்குள் செந்தில் பாலாஜியை கைது செய்ய சதி”.. முன்னாள் அமைச்சர் ரகுபதி பகீர் குற்றச்சாட்டு!!




தபால்காரர் வீட்டில் 7 மூட்டை தபால்கள் பறிமுதல்
அதன்படி, காரணம்பேட்டை தபால் நிலையத்தில் தபால்காரராக பணிபுரிந்து வரும் செந்தில்குமாரிடம் துறை அதிகாரிகள் அதிரடி விசாரணை மேற்கொண்டனர். இதில், செந்தில் குமார் அதிர்ச்சிகரமான தகவலை அதிகாரிகளிடம் தெரிவித்தார். அதன்படி, அவரது வீட்டில் தபால் துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில், பல்வேறு பொதுமக்களுக்கு வழங்க வேண்டிய கடிதங்கள் வழங்காமல் வீட்டில் 7 பெரிய சாக்கு மூட்டைகளில் கட்டி வைத்துள்ளது தெரியவந்தது. இதை பார்த்து அதிகாரிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
தபால் காரர் சஸ்பெண்ட்
இதைத் தொடர்ந்து, 7 சாக்கு மூட்டைகளையும் அதிகாரிகள் பறிமுதல் செய்து தபால் நிலையத்துக்கு எடுத்துச் சென்றனர். தொடர்ந்து, அரசு ஆவணங்களை பொறுப்பெற்ற முறையில் பதுக்கு வைத்தது மற்றும் பொதுமக்களுக்கு சேவை குறைபாடு ஏற்படுத்திய குற்றத்துக்காக தபால்காரர் செந்தில் குமாரை உடனடியாக சஸ்பெண்ட் செய்து திருப்பூர் கோட்ட தலைமை தபால் கண்காணிப்பாளர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும், பதுக்கி வைக்கப்பட்டிருந்த கடிதங்களை உரியவர்களிடம் ஒப்படைக்க தபால் துறை நடவடிக்கை எடுத்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி