நடைபயணத்தை இன்று தொடங்கும் அன்புமணி.. ராமதாஸ் கடும் எதிர்ப்பு.. பாமகவில் பரபரப்பு!
PMK Anbumani Padayatra : பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று தனது நடைபயணத்தை தொடங்குகிறார். செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கும் இந்த பயணத்தை, 2025 நவம்பர் 1ஆம் தேதி தருமபுரியில் நிறைவு செய்கிறார். இந்த நடைபயணத்திற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 25 : தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணத்தை பாமக (PMK) தலைவர் அன்புமணி (Anbumani) 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று தொடங்குகிறார். இந்த நடைபயணத்தை (Anbumani Padayatra) பாமக நிறுவனர் ராமதாஸ் (Ramadoss) எதிர்ப்பு தெரிவித்திருக்கும் நிலையில், திட்டமிட்டப்படி இன்று நடைபயணத்தை அன்புமணி தொடங்குகிறார். பாட்டாளி மக்கள் கட்சியில் உட்கட்சி பிரச்னை விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில மாதங்களாகவே, அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே அதிகார மோதல் நீடித்து வருகிறது . ஒருவரைக்கொருவர் மாறி மாறி விமர்சித்து வருகின்றனர். குறிப்பாக, நானே கட்சியின் தலைவர் நிறுவனர் என ராமதாஸ் கூறி வருகின்றனர். அதோடு, அன்புமணி தனது பெயரை பயன்படுத்தவே கூடாது என திட்டவட்டமாக ராமதாஸ் கூறியிருக்கிறார். அதோடு இல்லாமல், இருவரும் நிர்வாகிகளை நீக்குவது, நியமிப்பதுமாக இருந்து வருகின்றனர்.
பொதுக்குழுவை கூட்டி கட்சியை கைப்பற்றும் முயற்சியில் இருவரும் ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக அன்புமணி மாவட்ட அளவில் ஆதரவாளர்களை திரட்டி வருகின்றனர். மேலும், இருவரும் தனித்தனியாக ஆலோசனை கூட்டங்களை நடத்தி வருகின்றனர். இப்படியாக கட்சிக்குள் பிளவு ஏற்பட்டு இருக்கும் நிலையில், அன்புமணி ராமதாஸ் 2025 ஜூலை 25ஆம் தேதியான இன்று முதல் நடைபயணத்தை தொடங்குகிறார். தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணத்தை ராமதாஸ் பிறந்தநாளான இன்று முதல் 2025 நவம்பர் 1ஆம் தேதி வரை மேற்கொள்ள உள்ளார்.
Also Read : 10 உரிமைகளை மீட்பதே நோக்கம்.. 100 நாள் நடைப்பயணத்தை அறிவித்த அன்புமணி..




அன்புமணி இன்று நடைபயணம்
செங்கல்பட்டில் இருந்து தொடங்கும் நடைபயணம், தருமபுரியில் நிறைவடைய உள்ளது. இந்த நடைபயணத்திற்கு ராமதாஸ் கடும் எதிர்ப்பை தெரிவித்துள்ளது. தைலாபுரம் இல்லத்தில் செய்தியாளர்களிடம் பேசிய ராமதாஸ், “ஜூலை 25 முதல் மாநிலம் முழுவதும் அன்புமணி பாதயாத்திரை மேற்கொள்வதை காவல்துறை தடுக்க வேண்டும்.
அன்புமணியின் நடைபயணம் வட தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்” என தெரிவித்துள்ளார். கட்சி நிறுவனரின் அனுமதி இல்லாமல், கட்சி கொடி, நிர்வாகிகளை சந்திக்கும் பிரச்சார பயணம் மேற்கொள்வதாகவும் அவர் குற்றச்சாட்டியுள்ளார். இது தொடர்பாக ராமதாஸ் தரப்பில் டிஜிபியிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது.
Also Read : தீராத உட்கட்சி பூசல்.. பாமகவில் 3 எம்எல்ஏக்கள் சஸ்பெண்ட்.. ராமதாஸ் எடுத்த முடிவு!
மேலும், கட்சி அலுவலக இடத்தை அன்புமணி மாற்றியது குறித்து பேசிய ராமதாஸ், “தைலாபுரம் தான் கட்சியின் அலுவலகம் என்றும், வேறு எங்கும் அதற்கு கிளைகள் கிடையாது. அப்படி இருந்தாலும் அது சட்டவிரோதம்” என தெரிவித்தார். இப்படி கடுமையான எதிர்ப்புகளுக்கு மத்தியில் அன்புமணி தனது நடைபயணத்தை திருப்போரூரில் தொடங்குகிறார். இவரது நடைபயணம் பெரிதும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.