பிரச்சனை முடிவுக்கு வரும்.. பாமக மாநாட்டில் அன்புமணி இருப்பார் – ராமதாஸ் விளக்கம்..
PMK Internal Issue: அன்புமணி மற்றும் ராமதாஸ் இடையே இருக்கும் பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும், மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தற்போது முடிவு செய்ய முடியாது, செயற்குழு பொதுக்குழுவைக் கூட்டி அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்.

சென்னை, ஜூலை 16, 2025: பாட்டாளி மக்கள் கட்சியில் இருக்கக்கூடிய உட்கட்சி விவகாரம் விரைவில் முடிவுக்கு வரும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். மேலும் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையே இருக்கக்கூடியது பேசி தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு கிடையாது. விரைவில் நல்ல செய்தி வரும் எனவும் குறிப்பிட்டுள்ளார். பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை மகன் இடையே இருக்கக்கூடிய அதிகாரப்போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனால் இருவருமே தனித்தனியாக கட்சியின் செயல்பாடுகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கட்சித் தொண்டர்கள் பெரும் குழப்பத்திற்கு ஆளாகியுள்ளனர்.
அன்புமணி – ராமதாஸ் இடையே முற்றிய மோதல்:
கடந்த சில மாதங்களுக்கு முன் தொடங்கிய இந்த உட்கட்சி விவகாரம் என்பது நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே வருகிறது. சமீபத்தில் கட்சியின் நிர்வாக குழுவில் இருந்து அன்புமணி அதிரடியாக நீக்கி கட்சி நிறுவனர் ராமதாஸ் அறிவிப்பை வெளியிட்டிருந்தார். அதேபோல அன்புமணி ஆதரவாளர்களை நீக்கி புதிய உறுப்பினர்களையும் நியமித்து புது நிர்வாகக் குழுவை அறிவித்திருந்தார். அதோடு தனது பெயரை அன்புமணி பயன்படுத்தக்கூடாது என்றும் இனிஷியல் வேண்டுமானால் பயன்படுத்திக் கொள்ளலாம் எனவும் குறிப்பிட்டிருந்தார் ராமதாஸ்.
விரைவில் பிரச்சனை முடிவுக்கு வந்து நல்ல செய்தி வரும் – ராமதாஸ்:
இந்த அதிரடி அறிவிப்புகள் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பாமக இரண்டாக பிரியும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் பலர் கருத்துக்கள் தெரிவித்தனர். இதற்கிடையில் அன்புமணி ராமதாஸ் தைலாபுரத்திற்கு சென்று தனது தாயை சந்தித்து வந்தார். பின்னர் ஜூலை 15 2025 தேதியான நேற்று அன்புமணி தனது குடும்பத்தினருடன் சென்று தனது தாய் சரஸ்வதி இடம் ஆசிர்வாதம் பெற்றார். இப்படிப்பட்ட சூழலில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடுகள் விரைவில் சரியாகும் என கட்சி நிறுவனர் ராமதாஸ் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.




Also Read: சென்னையில் கனமழைக்கு வாய்ப்பு.. வெதர் விவரம்!
இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடு என்பது முகுந்தன் நியமனத்தின் போது தான் தொடங்கியதாக அவர் முக்கியமாக தெரிவித்துள்ளார். இது தொடர்பாக பேசியாக, “ எங்கள் இருவருக்கும் இடையே இருக்கக்கூடிய கருத்து வேறுபாடு என்பது யாராலும் தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு கிடையாது. யாராவது தலையிட்டு என்ன கருத்து வேறுபாடு என்று கேட்டால் அது தீர்ந்துவிடும் எனவே விரைவில் நல்ல செய்தி வரும். இந்த பிரச்சனை ஒரு முடிவுக்கு வரும். பாமகவின் மாநாட்டில் நிச்சயமாக அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும். அதேபோல் அன்புமணியும் அந்த மாநாட்டில் கலந்து கொள்வார்” என பேசியுள்ளார்.
சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் ராமதாஸ்:
மேலும் 2026 சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது தற்போது முடிவு செய்ய முடியாது, செயற்குழு பொதுக்குழுவைக் கூட்டி அனைவரிடமும் கலந்து ஆலோசித்து அதன் பின்னர் தான் முடிவெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார். அதே போல் நிச்சயமாக 2026 சட்டமன்ற தேர்தலில் பாமக தரப்பில் ராமதாஸ் போட்டியிடுவார் எனவும் தெளிவுபடுத்தியுள்ளார்.