ஆட்சி அதிகாரத்தில் பங்கு – எங்கள் உரிமை .. பாமக 37 ஆம் ஆண்டு விழாவில் அன்புமணி திட்டவட்டம்..
Anbumani Ramdoss: அன்புமணி தமிழகத்தில் அமையும் ஆளும் அரசியலில் பங்கு வேண்டும் என்றும் அது தங்களது உரிமை என்றும் பேசியுள்ளார். அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம் என குறிப்பிட்டுள்ளார்.

சென்னை, ஜூலை 16, 2025: ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என அன்புமணி ராமதாஸ் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாவட்டமாக இருக்க வேண்டும் என்றும், உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும் அது நமது உரிமையும் கூட என குறிப்பிட்டு உள்ளார். 2026 சட்டமன்றத் தேர்தல் நடக்க இன்னும் 10 மாத காலங்கள் இருக்கக்கூடிய நிலையில் அரசியல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தமிழகத்தின் பிரதான கட்சிகளான அதிமுக மற்றும் திமுக தேர்தல் பணிகளை மும்மரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
சூடு பிடிக்கும் தேர்தல் களம்:
அதிமுக தரப்பில் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சார பயணத்தை தொடங்கி நடத்தி வருகிறார். அதேபோல் திமுக தரப்பில் உடன்பிறப்பே வா, ஓரணியில் தமிழ்நாடு என பல்வேறு திட்டங்கள் மூலம் தேர்தல் பணிகள் மேற்கொண்டு முதலமைச்சர் ஸ்டாலின் மாவட்டம் தோறும் சென்று சாலை வளம் நடத்தி வருகிறார். இந்த சூழலில் பாட்டாளி மக்கள் கட்சி யாருடன் கூட்டணி வைக்கும் என்பது தொடர்பாக கேள்வி எழுந்துள்ளது. ஆனால் பாமகவில் தந்தை மகன் இடையில் இருக்கக்கூடிய அதிகார போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் கட்சி நிறுவனர் ராமதாஸ் விரைவில் நல்ல செய்தி வரும் என்றும் பிரச்சனை முடிவடையும் எனவும் குறிப்பிட்டு பேசியுள்ளார்.




பாமக உட்கட்சி விவகாரம் முடிவுக்கு வரும் – அன்புமணி:
அதாவது தனக்கும் அன்புமணிக்கும் இடையே இருக்கக்கூடியது தீர்க்க முடியாத கருத்து வேறுபாடு இல்லை என தெளிவுபடுத்தியுள்ளார். அதேபோல் கூட்டணி தொடர்பாக தற்போது முடிவெடுக்க முடியாது என்றும் செயற்குழு பொதுக் குழு கூட்டி நிர்வாகிகளிடம் கலந்தாலோசித்து முடிவெடுக்கப்படும் எனவும் கட்சி நிறுவனர் ராமதாஸ் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் இடையே இருக்கக்கூடிய பிரச்சனை விரைவில் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல் பாமகவின் 37-வது ஆண்டு விழா மாநாட்டில் அன்புமணிக்கு அழைப்பு விடுக்கப்படும் எனவும் அவர் அதில் கலந்து கொள்வார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆட்சியில் பங்கு என்பது உரிமை – அன்புமணி:
பாட்டாளி மக்கள் கட்சி 37-ஆம் ஆண்டு விழா : வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்டுவோம்- ஆட்சி அதிகாரத்தில் நமது உரிமையை வெல்வோம்!
மாபெரும் மக்கள் இயக்கமான பாட்டாளி மக்கள் கட்சி இந்த மண்ணில் உதித்த நாள் இன்று. சமூகநீதிக்காகவும், மக்கள் உரிமைகளுக்காகவும் போராடுவதில் பாட்டாளி மக்கள்… pic.twitter.com/YZUT7xIjCd
— Dr ANBUMANI RAMADOSS (@draramadoss) July 16, 2025
இப்படிப்பட்ட சூழலில் அன்புமணி தமிழகத்தில் அமையும் ஆளும் அரசியலில் பங்கு வேண்டும் என்றும் அது தங்களது உரிமை என்றும் பேசியுள்ளார் இது தொடர்பான அவரது பக்கத்தில், “ தமிழ் மொழி, இனம், தமிழ்நாட்டு மக்கள், இயற்கை வளம், சுற்றுச்சூழல் ஆகியவை பாதுகாக்கபட வேண்டும் என்றால் பாட்டாளி மக்கள் கட்சி வலிமையுடன் பயணிக்க வேண்டும். தமிழ்நாடு இந்தியாவின் முதன்மை மாநிலமாக மட்டுமின்றி, உலகின் முன்னணி நாடுகளுடன் போட்டியிடும் அளவுக்கு உயர வேண்டும் என்றால் அதற்கு தமிழ்நாட்டை ஆளும் அரசில் பாட்டாளி மக்கள் கட்சியும் பங்கேற்க வேண்டும்.
அது நமது உரிமையும் கூட. அந்த உரிமையை வென்றெடுப்பதற்கான வெற்றிப் பயணத்தின் வேகத்தைக் கூட்ட நமது இயக்கம் மருத்துவர் அய்யா அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட இந்த நாளில் நாம் அனைவரும் உறுதி ஏற்றுக் கொள்வோம்” என தெரிவித்துள்ளார்.