இளையராஜாவின் இசை ஆராய்ச்சி மையம் – திறந்து வைக்கும் பிரதமர் மோடி
Ilaiyaraaja Music Research Centre : இசைஞானி இளையராஜாவின் பெயரில் சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11, 2026 அன்று திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, அக்டோபர் 2 : இந்திய சினிமாவின் பிரபல இசையமைப்பாளர்களில் ஒருவரான இசைஞானி இளையராஜாவின் பெயரில் சென்னை ஐஐடி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள இசை ஆராய்ச்சி மையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் அக்டோபர் 11, 2026 அன்று திறந்து வைக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பூந்தமல்லி – வடபழனி மெட்ரோ ரயில் சேவை தொடக்க விழாவுக்காக சென்னை வரும் பிரதமர் மோடி, அதே பயணத்தில் இந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்கிறார். பிரதமரின் சென்னை பயணத்துக்கான விரிவான நிகழ்ச்சி நிரல் தற்போது வெளியாகியுள்ளது.
இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை திறந்து வைக்கும் பிரதமர் மோடி
வருகிற அக்டோபர் 11, 2026 டெல்லியிலிருந்து விமானம் மூலம் சென்னை விமான நிலையம் வந்தடையும் பிரதமர் மோடி, அங்கிருந்து ஹெலிகாப்டரில் பூந்தமல்லிக்குச் செல்கிறார். அங்கு காலை சுமார் 11.30 மணியளவில்பூந்தமல்லியில் நிகழ்ச்சி நடைபெறும் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு செல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. அங்கு பூந்தமல்லி – வடபழனி இடையிலான மெட்ரோ ரயில் சேவையைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைக்கிறார். இந்த விழாவில் முதல்வர் விஜய்யும் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிக்க : ராமேஸ்வரத்தில் பரபரப்பு.. இலங்கைக்கு ரூ.75 லட்சம் வலி நிவாரண மாத்திரைகள் கடத்த முயற்சி.. ஒருவர் அதிரடி கைது!




மெட்ரோ ரயில் துவக்க விழா முடிந்ததும், புதிய மெட்ரோ ரயிலில் பயணித்து போரூர் வரை செல்கிறார். அங்கிருந்து சாலை மார்க்கமாக சென்னை ஐஐடி வளாகத்துக்கு வருகிறார். ஐஐடி வளாகத்தில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்துகொள்கிறார். வளாகத்துக்குள் அமைந்துள்ள ஜலகண்டேஸ்வரர் கோயிலுக்கும் சென்று சாமி தரிசனம் செய்கிறார். அதனைத் தொடர்ந்து, இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்தை அவர் திறந்து வைக்கிறார். இதையடுத்து சென்னை பயணத்தை நிறைவு செய்துகொண்டு டெல்லி புறப்படுகிறார்.
சென்னை ஐஐடி ஆராய்ச்சி மையத்தின் சார்பில் கடந்த 2024 ஆம் ஆண்டு இசையமைப்பாளர் இளையராஜா இசை ஆராய்ச்சி மையத்துக்கான அடிக்கல், நாட்டப்பட்டது. இதற்காக இளையராஜாவின் இசை நிறுவனத்துக்கும் சென்னை ஐஐடி-க்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது. அடிக்கல் நாட்டப்பட்டு சுமார் 2 ஆண்டுகளுக்குப் பிறகு, பிரதமர் மோடியின் கைகளால் இந்த மையம் திறந்துவைக்கப்படவுள்ளது.
தமிழ் மட்டுமல்லாமல் இந்திய சினிமாவில் தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கியவர் இசைஞானி இளையராஜா. அவரது பெயரில், நாட்டின் முன்னணி தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் ஒன்றான ஐஐடியில் இசை ஆராய்ச்சி மையம் அமைவது இசை ஆர்வலர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிக்க : Tamil Nadu Weather forecast: நாளை இந்த 8 மாவட்டங்களுக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
வடபழனியில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை வரையிலான சுமார் 14.6 கி.மீ நீளமுள்ள இந்த வழித்தடத்தில் மொத்தம் 14 ரயில் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. கட்டுமானப் பணிகள் அனைத்தும் நிறைவடைந்த நிலையில், இப்பாதையில் ரயில்களை இயக்கலாம் என ரயில்வே பாதுகாப்பு ஆணையம் கடந்த 2026 பிப்ரவரி மாதமே ஒப்புதல் அளித்துவிட்டது. இந்த நிலையில் சட்டமன்ற தேர்தல் உள்ளிட்ட காரணங்களால் இந்த மெட்ரோ ரயில் சேவை தொடங்கப்படாமலே இருந்ததது. இந்த நிலையில் வருகிற அக்டோபர் 11, 2026 முதல் இந்த சேவை தொடங்கப்படவுள்ளது.