அரியலூரில் சோகம்.. செப்டிக் டேங்குக்குள் காத்திருந்த எமன்.. அடுத்தடுத்து 3 தொழிலாளர்களுக்கு நேர்ந்த பரிதாபம்!
Ariyalur 3 Workers Dies : அரியலூர் மாவட்டத்தில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீட்டு செப்டிக் டேங்கில் இறங்கிய வேலை பார்த்த 3 கட்டட தொழிலாளர்கள் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக உயிரிழந்தனர். இது தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
அரியலூர் மாவட்டம், செந்துறை வட்டாட்சியர் அலுவலக பகுதியை சேர்ந்தவர் சுப்ரமணியன். இவர், இந்த பகுதியில் புதிதாக வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார். இந்த பணியில் கட்டிடத் தொழிலாளர்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதில், வீடு கட்டுமான பணியின் ஒரு பகுதியாக செப்டிக் டேங்க் அமைக்கப்பட்டு, அதில் போடப்பட்டிருந்த பலகைகளை அகற்றும் பணியில் 3 கட்டிட தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். அப்போது, எதிர்பாராத விதமாக திடீரென 3 தொழிலாளர்களுக்கும் மூச்சு திணறல் ஏற்பட்டது. இதன் காரணமாக அவர்கள் தொட்டியில் உள்ளேயே மயங்கி விழுந்தனர். இதை அறிந்த சக தொழிலாளர்கள் அவர்களை மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, இது தொடர்பாக அருகில் உள்ள காவல் நிலையம் மற்றும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
மூச்சு திணறல் ஏற்பட்டு 3 கட்டட தொழிலாளர்கள் பலி
அதன் அடிப்படையில், தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செப்டிக் டேங்கில் மயங்கிடந்த 3 தொழிலாளர்களையும் மீட்டு அவசர ஆம்புலன்ஸ் மூலமாக செந்துறை அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர். அங்கு, 3 பேரையும் மருத்துவர்கள் பரிசோதித்த நிலையில் அவர்கள் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். தொடர்ந்து, அவர்களது சடலம் பிரேத பரிசோதனை மேற்கொள்வதற்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
மேலும் படிக்க: போளூரில் பெருஞ்சோகம்.. கிணறு தோண்டியபோது மண் சரிந்து விபத்து.. இருவர் மண்ணோடு மண்ணாக புதைந்து உயிரிழப்பு!




புதிய செப்டிக் டேங்கில் மூச்சு திணறல் ஏற்பட்டதா
இது தொடர்பாக கிடைக்கப்பெற்ற புகாரின் அடிப்படையில் செந்துறை பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இதில், உயிரிழந்தவர்கள் திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த தினகரன், பாஸ்கரன் மற்றும் நக்கம்பாடி கிராமத்தைச் சேர்ந்த ராமச்சந்திரன் என்பது தெரியவந்தது. மேலும், புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கில் எப்படி மூச்சு திணறல் ஏற்பட்டது. இதற்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்பது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
செந்துறை பகுதியில் பெரும் பரபரப்பு – சோகம்
அத்துடன், அவர்களுடன் பணிபுரிந்து வரும் சக கட்டட தொழிலாளர்களிடமும் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். செந்துறை பகுதியில் புதிதாக கட்டப்பட்டு வரும் வீடு கட்டுமான பணியில் புதிதாக கட்டப்பட்ட செப்டிக் டேங்கில் மூச்சுத் திணறல் ஏற்பட்டு 3 கட்டிட தொழிலாளர்கள் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை யும், பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: தஞ்சாவூர் அருகே பேருந்துகள் நேருக்கு நேர் மோதி கோர விபத்து – ஒருவர் பலி – 25 பேர் படுகாயம்