“பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்க இன்னும் காலம் இருக்கிறது”.. அமைச்சர் நிர்மல் குமார் மழுப்பல் பதில்!!
PM Candidate Debate: பிரதமர் வேட்பாளர் குறித்து முடிவு எடுக்க இன்னும் காலம் இருக்கிறது என்று அமைச்சர் நிர்மல்குமார் தெரிவித்துள்ளார். ராகுல் காந்தி அல்லது விஜய் என பிரதமர் வேட்பாளர் தேர்வில் எழும் கேள்விகள் குறித்த செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர், இது குறித்து விவாதிக்க இன்னும் போதுமான நேரமிருப்பதாகக் கூறி மழுப்பலான பதில அளித்தார்.
சென்னை, செப்டம்பர் 05: தேசிய அரசியலிலும் மாநில அரசியலிலும் அடுத்தடுத்த கூட்டணிக் கணக்குகளும், பிரதமர் வேட்பாளர் யார் என்பது குறித்த விவாதங்களும் தீவிரமடைந்து வருகின்றன. குறிப்பாக, காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ராகுல் காந்தியா அல்லது தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய்யா என்பதில் கூட்டணிகளுக்குள்ளும் பல்வேறு கருத்து வேறுபாடுகள் மற்றும் கேள்விகள் எழுந்து வருகின்றன. இத்தகைய சூழலில், பிரதமர் வேட்பாளர் தேர்வு குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல்குமார் நேரடியாகப் பதிலளிக்காமல், முடிவு எடுக்க இன்னும் காலம் உள்ளது என்று கூறி மழுப்பலான பதிலை அளித்துள்ளார்.
இதையும் படிக்க: கேரளாவில் நடந்த கோர விபத்து – அப்பளம் போல் நொறுங்கிய கார்.. தமிழகத்தை சேர்ந்த 8 மாணவர்கள் உயிரிழப்பு..
கேள்விகளுக்கு அமைச்சரின் பதில்:
செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் நிர்மல்குமாரிடம், பிரதமர் வேட்பாளராக ராகுல் காந்தியை ஏற்பதில் தயக்கம் உள்ளதா அல்லது விஜய் குறித்த நிலைப்பாடு என்ன என்பது போன்ற கேள்விகள் எழுப்பப்பட்டன. அதற்குப் பதிலளித்த அவர், “பிரதமர் வேட்பாளர் குறித்து தற்போது வரை யாரும் எந்தவொரு விவாதத்தையும் அல்லது பேச்சையும் தொடங்கத் தேவையில்லை. அதற்கு இன்னும் போதுமான கால அவகாசமும் நேரமும் இருக்கிறது. பத்திரிகையாளர்களாகிய நீங்கள்தான் இந்த விவகாரத்தை ஒரு கேள்வியாக மாற்றி எல்லாரிடமும் மாற்றி மாற்றி கேட்டுக்கொண்டிருக்கிறீர்கள்” என்று தெரிவித்தார்.
மாறுபட்ட நிலைகளும் தொடரும் விவாதங்களும்:
சமீபகாலமாகத் தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) சட்டமன்ற உறுப்பினர்களும் நிர்வாகிகளும் தங்களது கட்சித் தலைவர் விஜய்யை தேசிய அளவிலான தலைவராகவும், அடுத்த பிரதமர் வேட்பாளராகவும் முன்னிறுத்திப் பேசி வருகின்றனர். மறுபுறம், காங்கிரஸ் மூத்த தலைவர்கள் மற்றும் சட்டமன்றக் கட்சித் தலைவர்கள் ராகுல் காந்தியே தங்களின் முதன்மை பிரதமர் வேட்பாளர் என்பதில் உறுதியாக உள்ளதாகத் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர். தோழமைக் கட்சிகளுக்கு இடையே நிலவும் இந்த முன்னெடுப்புகள் அரசியல் களத்தில் புதிய காரசார விவாதங்களை உருவாக்கியுள்ள சூழலில்தான், அமைச்சரின் இந்தச் சமரசப் பேச்சு முக்கியத்துவம் பெறுகிறது.
இதையும் படிக்க: உணவுப்படி உயர்வு முதல் புதிய வாகனம் வரை.. நிறைவேற்றப்பட்ட உடனடி வாக்குறுதிகள்.. ஒத்திவைக்கப்பட்ட தூய்மை பணியாளர்கள் போராட்டம்..
முடிவு எடுக்க இன்னும் காலம் இருக்கிறது:
கூட்டணிக்குள் முரண்பாடுகள் இருப்பதாகக் கூறப்படும் கருத்துகளை மறுத்த அமைச்சர், இது குறித்து இப்போதே எந்தவொரு அவசர முடிவும் எடுக்க வேண்டிய அவசியம் இல்லை என்பதை மீண்டும் வலியுறுத்தினார். பிரதமர் வேட்பாளர் யார் என்பதைத் தீர்மானிப்பதற்குத் தகுந்த காலம் வரும்போது முடிவுகள் எடுக்கப்படும் என்றும், அதுவரை இது குறித்த ஊகங்களுக்கும் விவாதங்களுக்கும் பதிலளிக்க வேண்டியதில்லை என்ற போக்கிலும் அவர் தனது பதிலை நிறைவு செய்தார்.