எடப்பாடியுடன் சந்திப்பு…உறுதி செய்யப்பட்டதா அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு…நயினார் கூறுவது என்ன!
Nainar Nagendran- Edappadi K Palaniswami meeting: அ. தி. மு.க பாெதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை, தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று சந்தித்துள்ள நிலையில், இந்த சந்திப்புக்கான காரணத்தை நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார் .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தேசிய ஜனநாயக கூட்டணியை வலுப்படுத்தும் பணிகளில் அதிமுக மற்றும் பாஜகவினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமியை சென்னை பசுமை வழி சாலையில் உள்ள அவரது வீட்டில் தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் இன்று வெள்ளிக்கிழமை ( ஜனவரி 9) காலை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பின்போது, அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு குறித்தும், தேசிய ஜனநாயக கூட்டணியில் மேலும் சில கட்சிகளை சேர்ப்பது குறித்தும் ஆலோசனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. மேலும், கடந்த தேர்தல்களில் போட்டியிட்ட தொகுதிகளை விட கூடுதல் தொகுதிகளை அதிமுக இடம் பாஜக கேட்டதாக கூறப்படுகிறது. அதாவது, கடந்த மக்களவைத் தேர்தலில் பாஜகவுக்கு கிடைத்த வாக்கு சதவீதத்தின் அடிப்படையில், கூடுதல் தொகுதிகள் ஒதுக்க வேண்டும் என்று பழனிசாமியிடம், நயினார் நாகேந்திரன் வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
எடப்பாடியுடன் சந்திப்பு குறித்து நயினார் பதில்
இந்த சந்திப்பை முடித்துவிட்டு காரில் புறப்பட்ட நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுக- பாஜக தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி உடனான சந்திப்பு சுமூகமாக நடைபெற்றது. பிரதமர் மோடி வருகை தொடர்பாகவும், தேசிய ஜனநாயக கூட்டணி தொடர்பான கூட்டத்தை சென்னை அல்லது மதுரையில் நடத்தலாமா என்பது தொடர்பாக ஆலோசனை மேற்கொண்டோம். பாஜக எத்தனை தொகுதிகளில் போட்டியிடும் என்பதை பின்னர் தெரிவிக்கிறேன். பிரதமர் மோடி இந்த மாத இறுதியில் வர உள்ளார். ஆனால், இன்னும் தேதி முடிவு செய்யப்படவில்லை என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!




பாஜகவுக்கு 56 தொகுதிகள்-3 அமைச்சர் பதவி
கடந்த சில நாட்களுக்கு முன்பு டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை, அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி சந்தித்திருந்தார். இந்த சந்திப்பின்போது, பாஜகவுக்கு 56 சட்டமன்ற தொகுதிகளும், 3 அமைச்சர் பதவிகளும் வழங்க வேண்டும் என்று அமித்ஷா வலியுறுத்தியதாக தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, பாஜக அதிக தொகுதிகளை கேட்டு வரும் நிலையில், அவ்வளவு தொகுதிகளை அதிமுக அளிக்குமா என்ற கேள்வி எழுகிறது.
அதிமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு
இதே நேரத்தில், அதிமுக 170-க்கும் மேற்பட்ட தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அமித்ஷாவை, எடப்பாடி பழனிசாமி சந்தித்திருந்த நிலையில், அவரை தமிழக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் சந்தித்திருப்பது தொகுதி பங்கீடு தொடர்பான பேச்சுவார்த்தை இறுதி கட்டத்தை எட்டி உள்ளதாக தெரிகிறது. எனவே, இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு இந்த மாத இறதியில் வெளியாகும் என்று தெரிகிறது.
மேலும் படிக்க: “கடைசி காலத்தில் நல்ல மனசு வந்துவிட்டது”.. திமுக அரசை பாராட்டிய அதிமுக முன்னாள் அமைச்சர்!!