அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!
TTV dhinakaran in the NDA alliance: அதிமுக வலுவாக உள்ளதாகவும், கடந்த முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்தாகவும், அதனால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்தார். இந்த சந்திப்பில் கூட்டணி நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என்றும் தெரிவித்தார்.
டெல்லி, ஜனவரி 08: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை நேற்றிரவு டெல்லியில் உள்ள அவரது இல்லத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொண்டார். இந்த சந்திப்பை முடித்து இன்று காலை அவர் டெல்லியில் இருந்து சென்னை திரும்புகிறார். இதையொட்டி, டெல்லி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அமித் ஷாவுடன் பேசிய விஷயங்கள் குறித்து விளக்கினார். அப்போது, தமிழ்நாட்டு அரசியல் நிலவரம் குறித்து அமித்ஷா தன்னிடம் கேட்டறிந்தாக கூறினார். தமிழகத்தில் திமுக அரசு அகற்றப்பட வேண்டும் என்ற நோக்கத்தில், அதிமுக, பாஜக, பாமக கூட்டணி அமைந்துள்ளதாகவும், இன்னும் பல கட்சிகள் தங்களது கூட்டணிக்கு வரவுள்ளதாகவும் கூறினார்.
இதையும் படிக்க: பணிக்கு வராமல் போராட்டம்.. ஆசிரியர்களுக்கு சம்பளம் ‘கட்’.. அரசு அதிரடி உத்தரவு!!
ஓபிஎஸ், சசிகலாவுக்க இடமில்லை:
அதோடு, தங்களது கூட்டணி வெற்றி கூட்டணியாக அமையும். வரும் சட்டமன்றத் தேர்தலில் அதிமுக – பாஜக கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும், பேசிய அவரிடம், ஓ.பன்னீசெல்வம், டிடிவி தினகரன் இணைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், ஓ.பன்னீர்செல்வத்திற்கு அதிமுகவில் இடமில்லை என்று பலமுறை கூறிவிட்டேன் என்றார். தமிழ்நாட்டில் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு அதிமுக தலைமை தாங்கும் என்று கூறிய அவர், அதிமுக உட்கட்சி விவகாரத்தில் அமித்ஷா தலையிடவில்லை எனவும் அவ்வாறு உட்கட்சி விவகாரத்தில் தலையிட மாட்டோம் என்று கூட்டணி பேச்சுவார்த்தை தொடங்கிய போதே அமித் ஷா கூறிவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.




கூட்டணி நிலவரம் குறித்து பேசவில்லை:
அதோடு, இந்த சந்திப்பில் கூட்டணி நிலவரம் குறித்து எதுவும் பேசவில்லை என்று அவர் திட்டவட்டமாக கூறிவிட்டார். அதோடு, அமித் ஷா தமிழகம் வந்தபோது, தன்னால் அவரை சந்திக்க முடியவில்லை என்பதால், டெல்லி சென்று அவரை சந்தித்ததாக தெரிவித்தார். அதிமுக வலுவாக உள்ளதாகவும், கடந்த முறை 2 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் தான் தோல்வியை சந்தித்தாகவும், அதனால் சசிகலா, ஓ.பன்னீர்செல்வம் அதிமுகவில் இணைய வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
இதையும் படிக்க : ஜன.28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி?…தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்!
கூட்டணியில் டிடிவி தினகரன்?
அப்போது, அதிமுக – பாஜக கூட்டணியில் டிடிவி தினகரன் இணைவாரா? என்று கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு அவர், வெளிப்படையாக எதையும் கூற முடியாது என்றார். அதோடு, அரசியல் கட்சி என்பது ரகசியமாக இருந்தால் தான் அதற்கான அந்தஸ்து இருக்கும் என்றார். மேலும், கூட்டணியில் கட்சிகளை இணைப்பது குறித்து பேச்சுவார்த்தை நடந்து வருகிறது என்று மட்டும் அவர் மழுப்பலாக கூறினார். எங்களை குறைசொல்வதற்கு எதுவும் இல்லாததால், மதவாத கட்சியுடன் கூட்டணி அமைத்துள்ளதாக திமுக விமர்சித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார்.