தவெகவில் இணைந்த காமராஜர் பேத்தி? தங்கை வழி அசல் பேரன் கூறுவதென்ன!
Kamaraj Grand Daughter Join TVK: தமிழக வெற்றிக் கழகத்தில் திமுக, அதிமுக ஆகிய கட்சிகளைச் சேர்ந்தவர்கள் விஜய் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், முன்னாள் முதல்வர் காமராஜரின் பேத்தியான மயூரியும் தவெகவில் இணைந்துள்ளார். இவர்களுக்கு விரைவில் பொறுப்பு வழங்கப்பட உள்ளது.
தமிழக வெற்றிக் கழகத்தில் மறைந்த முன்னாள் முதல்வர் காமராஜரின் பேத்தி மயூரி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளை சேர்ந்த 50-க்கும் மேற்பட்டோர் கட்சியின் தலைவர் விஜய் முன்னிலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். இதில், முன்னாள் மத்திய அமைச்சர் தலித் எழில் மலையின் 3- ஆவது மகள் கேத்தரின் மற்றும் பிரபல எழுத்தாளரும், நடிகருமான வேல் ராமமூர்த்தியின் மகன் ராஜ்மோகன் ஆகியோரும் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளனர். இவர், முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அணியில் இருந்தவர் ஆவார். இவர்களுக்கு பெண்கள் மற்றும் இளைஞர்கள் பிரிவுகளில் பொறுப்புகள் வழங்கப்படும் என்று தமிழக வெற்றிக் கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
திமுக-அதிமுகவைச் சேர்ந்தவர்கள்
இதே போல, தஞ்சாவூர் மத்திய மாவட்ட திமுக வர்த்தக பிரிவின் அமைப்பாளர் சி. சுந்தரபாண்டியன், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரத்தை சேர்ந்த திமுக இளைஞர் பிரிவின் துணை அமைப்பாளர் கண்ணாயிரம், திருவள்ளுவரை சேர்ந்த அதிமுக முன்னாள் நகராட்சி தலைவர் பாஸ்கரன், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தை சேர்ந்த அதிமுக முன்னாள் எம் எல் ஏ பெரியசாமி, சென்னை பெருநகர மாநகராட்சியின் 23- ஆவது வார்டு கவுன்சிலர் பி. ராஜன் ஆகியோர் இணைந்துள்ளனர்.
மேலும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூண் விவகாரம்…மேல்முறையீட்டு மனு வழக்கில் இன்று தீர்ப்பு!




சென்னை மாநகராட்சி கவுன்சிலர்
பி. ராஜன் சுயேட்சையாக கவுன்சிலராக வெற்றி பெற்று பின்னர் காங்கிரஸ் ஆதரவாளராக செயல்பட்டு வந்தார். இவர், தற்போது தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இது தொடர்பாக, தவெக பொதுச் செயலாளர் சி டி ஆர் நிர்மல் குமார் கூறுகையில், தமிழக அரசின் டி ஏ பி எஸ் ஓதிய கொள்கை குறித்து கேள்வி எழுப்பினார். அறிவித்த பிறகு, ஊழியர்களின் சம்பளத்தில் இருந்து 10 % கழிப்பது தவறானது என்று குற்றம் சாட்டினார்.
தொழிலாளர்கள் சங்கம் விலைக்கு வாங்கப்படுகிறது
மேலும், தொழிலாளர் சங்கங்கள் விலைக்கு வாங்கப்பட்டதாகவும், தேர்தல் வாக்குறுதிகள் இருந்த போதிலும் பழைய ஓய்வூதியத் திட்டத்தை செயல்படுத்துவது தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். மேலும், ஜனநாயகன் படத்துக்கு சென்சார் சான்றிதழ் வழங்குவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து வேண்டுமென்று சில கட்சிகள் சூழ்ச்சி செய்வதாக குற்றம் சாட்டினார்.
காமராஜரின் அசல் பேரன் பரபரப்பு பேட்டி
இந்த நிலையில், காமராஜரின் உடன் பிறந்த சகோதரி நாகம்மாளின் பேரன் காமராஜ் கூறியதாவது: நான் விருதுநகரில் வசித்து வருகிறேன். தற்போது, காமராஜரின் பேத்தி என்று கூறி வரும் மயூரி என்பவர் காமராஜருக்கு நேரடி வாரிசோ, ரத்த சொந்தமோ கிடையாது. மயூரி எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணையலாம். ஆனால், காமராஜரின் பெயரை தவறாக பயன்படுத்தி வருகிறார். காமராஜரின் தந்தை குமாரசாமியை சிறுவயதில் வாரிசு இல்லாத குடும்பம் ஒன்று தத்தெடுத்து வளர்த்து வந்தது. குமாரசாமியை தத்துப் பிள்ளையாக வளர்த்து வந்தவரின் சகோதரர் அண்ணாமலை.
மயூரி- கமலிகா என்பவர்கள் யார்
அவரது மகள் சந்திரா என்பவருக்கு பிறந்த இரு மகள்களில் ஒருவர் மயூரி மற்றொருவர் கமலிகா ஆவர். எனவே, இனிவரும் காலங்களில் அவர்கள் காமராஜரின் பெயரை பயன்படுத்தக் கூடாது. குமாரசாமியின் வளர்ப்பு தாய் பார்வதி காமராஜர் சிறையில் இருந்த போது உயிரிழந்து விட்டார். அதன் பின்னர் அந்த குடும்பத்துடன் எங்கள் குடும்பத்துக்கு எந்த தொடர்பும் இல்லாமல் ஆகிவிட்டது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: ரேசன் கடை விடுமுறையில் மாற்றம்..பொங்கல் பரிசுக்காக புது உத்தரவு.. முழு விவரம் இதோ!