தேமுதிக யாருடன் கூட்டணி அமைக்கும்…மா.செக்கள் கூறியது என்ன…பிரேமலதா திட்டவட்ட பதில்!
DMDK Premalatha Vijayakanth Pressmeet: தேசிய முற்போக்கு திராவிட முன்னேற்றக் கழகம் எந்தக் கட்சியுடன் கூட்டணி அமைக்கும் என்பது தொடர்பாக மாவட்ட செயலாளர்கள் கருத்தின் அடிப்படையில் முடிவு எடுத்து அறிவிக்கப்படும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்தார் .
தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் சென்னை கோயம்பேட்டில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று திங்கள்கிழமை ( ஜனவரி 5) நடைபெற்றது. இந்த கூட்டத்துக்கு தே. மு. தி. க பொதுச் செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமை வகித்து கூட்டணி தொடர்பாக மாவட்ட செயலாளர்களிடமும், மாவட்டங்களில் உள்ள மக்களின் கருத்துக்களையும் கேட்டறிந்தார். பின்னர், இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: தமிழகத்தில் தொடர் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. தமிழக அரசு சார்பில் தற்போது அறிவித்துள்ள திட்டங்கள் அனைத்தும் தேர்தலுக்காகவே அறிவிக்கப்பட்டுள்ளன. பொங்கல் பரிசு தொகை ரூ. 3000 அறிவித்துள்ள நிலையில், இந்த பரிசுத் தொகை அனைத்து ரேஷன் கார்டுதாரர்களுக்கும் சென்றடைய வேண்டும். தூய்மை பணியாளர்கள், செவிலியர்கள், இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும்.
தேமுதிக பொதுக் கூட்டத்துக்கான முன்னேற்பாடுகள்
வருகிற ஜனவரி 9-ஆம் தேதி கடலூரில் நடைபெற உள்ள தேமுதிக பொதுக் கூட்டத்துக்கான அனைத்து முன்னேற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த பொதுக்கூட்டத்தில் பங்கேற்பவர்களுக்கு உணவு, ஸ்னாக்ஸ், டீ உள்ளிட்டவை வழங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தமிழகத்தில் தி. மு. க., அ. தி. மு. க., த. வெ. க., நாம் தமிழர் கட்சி ஆகிய கூட்டணிகள் உள்ளன.
மேலும் படிக்க: அழிவின் விழிம்பில் அரசு மருத்துவமனைகள்…மருத்துவர் அன்புமணி ஆவேசம்!




தேமுதிக கூட்டணி குறித்த மா.செக்கள் நிலைப்பாடு
தேமுதிக கூட்டணி நிலைபாடு குறித்த தங்களது கருத்துக்களை கட்சியின் மாவட்ட செயலாளர்கள் தெரிவித்துள்ளனர். அதன் அடிப்படையில் கூட்டணி தொடர்பான முடிவு எடுக்கப்பட்டு அதனை கடலூர் மாநாட்டில் அறிவிக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் தேமுதிகவுக்கு தோழமைக் கட்சிகள் தான். தேமுதிகவுடன் கூட்டணி வைப்பதற்கு அனைத்து கட்சிகளும் விரும்புகின்றன.
திமுகவின் 50% வாக்குறுதிகள் மட்டுமே நிறைவேற்றம்
திமுக அரசு அளித்த வாக்குறுதிகளில் 50 சதவீதம் மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. சட்டம் ஒழுங்கு கேள்விக்குறியாகி உள்ளது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் விற்பனை நடைபெற்று வருகின்றன. தொடர் போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்கள் உள்ளிட்டவை நடைபெற்று வருவதே இதற்கு சாட்சி ஆகும். தேமுதிகவின் 4- ஆம் கட்ட சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட உள்ளது.
ஓங்கி ஓலிக்கும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு
பொங்கலுக்கு பிறகு தேமுதிகவின் விருப்ப மனு பெரும் முகாம் குறித்த அறிவிப்பு வெளியாகும். தமிழகத்தில் ஆட்சியில் பங்கு என்கின்ற குரல் ஓங்கி ஒலிக்கிறது. இதற்கு 2026 சட்டமன்ற தேர்தலில் அதிக வாய்ப்பு உள்ளது. தற்போதைய நிலவரப்படி எந்த கட்சியிலும் கூட்டணி உறுதி செய்யப்படவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தல் தமிழக மக்களுக்கு திருப்புமுனையாக அமையும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: திமுகவுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம்…ஆட்சியில் அதிகார பகிர்வு…காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்!