நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு அனுமதி தருவதில் என்ன தவறு? தவெகவிற்கு நீதிமன்றம் கேள்வி
High Court Questions TVK : ரோடு ஷோக்களுக்கான வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தவெக சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு அனுமதி தருவதில் என்ன தவறு என கேள்வி எழுப்பியுள்ளனர்.
சென்னை, பிப்ரவரி 26 : கட்சி ரோடு ஷோக்களுக்கான அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்ய கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கு பிப்ரவரி 26, 2026 அன்று விசாரணைக்கு வந்த நிலையில், பொதுக்கூட்டங்கள் நடத்த நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை கொடுப்பதில் என்ன தவறு என நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர். கடந்த 2025 ஆம் ஆண்டு கரூரில் தவெக சார்பில் நடைபெற்ற பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயரிழந்தனர். பலர் படுகாயமைடந்தனர். இதனையடுத்து தமிழக அரசு சார்பில் அரசியல் கட்சிகள் ரோடு ஷோ நடத்துவற்கான நெறிமுறைகளை வகுத்து கடந்த ஜனவரி 5, 2026 அன்று வெளியிட்டது.
தவெக சார்பில் தொடரப்பட்ட வழக்கு
இந்த நிலையில் ரோடு ஷோ நடத்துவதற்காக அரசு வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை ரத்து செய்யக்கோரி தவெக துணை பொதுச்செயலாளர் சி.டி.ஆர்.நிர்மல்குமார் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த வழக்கு மீதான விசாரணை நீதிபதிகள் எம்.எம்.ஸ்ரீவஸ்தவா மற்றும் ஜி.அருள் முருகன் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது தவெக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் பொதுக்கூட்டங்கள் நடத்துவதற்கு அனுமதி பெற 30 நாட்கள் முன்பே விண்ணப்பிக்க வேண்டும் என்ற விதி தன்னிச்சையானது. அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரை அளிப்பது பாரபட்சமானது. நிகழ்ச்சியின் பாதுகாப்பு தொடர்பாக அரசு மேற்கொள்ள வேண்டிய நடைமுறைகள் கட்சிகள் மீது திணிக்கப்படுகின்றன வாதிடப்பட்டது.
இதையும் படிக்க : தவெகவினர் முன் அனுமதி பெறாமல் இதை செய்யக்கூடாது… கட்சி தலைமை போட்ட புதிய ரூல்ஸ்!




இதனையடுத்து பேசிய நீதிபதிகள், இந்த விதிகளில் என்ன தவறு? கரூரில் நடந்த வேதனைக்குரிய சம்பவத்தை தொடர்ந்து உயர்நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் தான் இந்த விதிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன. வருமான வரி விலக்கு பெறுவதற்காக பல கட்சிகள் காளான்கள் போல துவங்கப்படுகின்றன. அவை தேர்தல்களில் போட்டியிடுவதில்லை. ஆனால் பல தேர்தல்களில் போட்டியிட்டு எம்பி மற்றும் எம்எல்ஏக்களை கொண்ட நீண்ட வரலாறு கொண்ட கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்குவதில் என்ன தவறு ? மேலும் தவெக இதுவரை எத்தனை தேர்தல்களில் போட்டியிட்டுள்ளது? என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிக்க : தவெக நிர்வாகி மீது கொடி கம்பம் சாய்ந்து விபத்து.. கரூரில் பரபர சம்பவம்..
மேலும் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி 2 தேர்தல்களை நடத்தியுள்ளனர். இதில் 5,000 பேருக்கு மேல் பங்கேற்கும் பொதுக்கூட்டங்களுக்கு விதிகள் வகுக்கப்பட்டுள்ளதால் அதனை தவிர்க்க 4,998 பேர் கலந்துகொள்வார்கள் என கூறி விண்ணப்பிக்கின்றனர். ஒரே நாளில் ஒரே இடத்துக்கு பல கட்சிகள் விண்ணப்பிக்கும்போது அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது. மேலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுகிறது என விளக்கமளிக்கப்பட்டது. இந்த வழக்கு அரசியல் பொதுக்கூட்டங்களுக்கு வழங்கப்படும் அனுமதி குறித்து மக்களிடையே கேள்வி எழுப்பியுள்ளது.