ஐபிஎல் சூதாட்ட வழக்கு: தோனி ரூ.10 செலுத்த நீதிமன்றம் உத்தரவு – என்ன நடந்தது?
Dhoni Defamation Case : ஐபிஎல் சூதாட்டம் தொடர்பாக தன்னைப் பற்றி அவதூறு பரப்பியதாக முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார் மீது எம்.எஸ்.தோனி தொடர்ந்த மான நஷ்ட வழக்கில் ரூ.10 லட்சம் செலுத்த சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதுகுறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, பிப்ரவரி 12 : கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் (IPL) தொடரில் சூதாட்டம் தொடர்பாக பேசிய ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமாருக்கு எதிராக கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனி (Mahendra Singh Dhoni) தொடர்ந்த வழக்கில், அவர் ரூ. 10 லட்சம் செலுத்த வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 2013 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது சூதாட்டம் நடைபெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதுகுறித்த நடைபெற்ற விசாரணையில் விசாரணை அதிகாரிகளில் ஒருவராக இருந்தவர் ஐபிஎஸ் அதிகாரி சம்பத் குமார். இவர் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஐபிஎல் சூதாட்டத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக இருந்த எம்.எஸ்.தோனியும் சூதாட்டத்தில் தொடர்புடையவர் என கூறியது சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஐபிஎல் சூதாட்ட வழக்கு
இந்த நிலையில் இந்த ருத்து தனது மதிப்பை களங்கப்படுத்துவதாக கூறி சம்பத் குமார் மற்றும் தனியார் தொலைக்காட்சி நிறுவனம் மீது ரூ.100 கோடி இழப்பீடு கேட்டு எம்.எஸ்.தோனி கடந்த 2014 ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட சிடி ஆவணங்களை எழுத்துப்பூர்வமாக மாற்ற உயர்நீதிமன்றம் ஏற்கனவே உத்தரவிட்டிருந்தது. மேலும் அதற்கு உரிய கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் நீதிமன்றம் தரப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையும் படிக்க : நாளை சேலத்தில் விஜய் பிரசாரம்.. இவர்களுக்கு மட்டுமே அனுமதி.. தவெக வெளியிட்ட அறிவிப்பு!!




இந்த நிலையில் இந்த வழக்கு பிப்ரவரி 12, 2026 அன்று நீதிபதி ஆர்.என்.மஞ்சுளா தலைமையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிடி பதிவுகளை முழுமையாக எழுத்துப்பூர்வமாக மாற்ற மொழிபெயர்ப்பாளர் மற்றும் தட்டச்சர் மற்றும் இதற்காக மூன்று முதல் 4 மாதங்கள் முழு நேரம் பணியாற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. மேலும், மொழிபெயர்க்கப்பட்ட ஆவணங்களை நகல் எடுக்கவும் கூடுதல் செலவு ஏற்படும் என்றும் கூறப்பட்டது.
எம்.எஸ்.தோனி ரூ.10 லட்சம் செலுத்த நீதிமன்றம் உத்தரவு
இந்த நிலையில் இந்த வழக்கின் மனுதாரரான எம்.எஸ்.தோனி மொழி பெயர்ப்பு கட்டணமாக ரூ.10 லட்சத்தை தலைமை நீதிபதி நிவாரண நிதிக்காக வருகிற மார்ச் 12, 2026 அன்றுக்குள் செலுத்த வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டார். மேலும் மொழிபெயர்ப்பு பணியை வருகிற மார்ச் மாதம் 3 வாரத்திற்குள் முடிக்கவும் கூறி, வழக்கு விசாரணையை மார்ச் 12, ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டார்.
இதையும் படிக்க : ரூ.14 லட்சம் கடன் பெற்று சொகுசு கார்.. சென்னையில் நூதன மோசடியில் ஈடுபட்ட தம்பதி..
கடந்த 12 ஆண்டுகளாக நீடித்து வரும் இந்த வழக்கில் இன்று வழங்கப்பட்ட உத்தரவு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. மொழிபெயர்ப்பு பணிகள் முடிந்ததும். இரு தரப்புக்கும் ஆவணங்கள் வழங்கப்பட்டு வழக்கின் இறுதிகட்ட விசாரணை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.