திமுகவுக்கு மீண்டும் மீண்டும் அழுத்தம்…ஆட்சியில் அதிகார பகிர்வு…காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர்!
Congress MP Manickam Thakur: திமுக கூட்டணியில் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கோரி காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த மாணிக்கம் தாகூர் எம். பி. மீண்டும் மீண்டும் வலியுறுத்தி வருகிறார். இதனால், திராவிட முன்னேற்றக் கழகத்துக்கு மேலும் மேலும் அழுத்தம் ஏற்பட்டுள்ளது .
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், திராவிட முன்னேற்றக் கழக கூட்டணியில் கூடுதல் தொகுதிகள் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்று தோழமை கட்சிகள் குரல் எழுப்பி வருகின்றன. இதில், காங்கிரஸ் கட்சி தீவிரமாக இறங்கி உள்ளது. இந்த நிலையில், கூட்டணி ஆட்சி தொடர்பாக நாடாளுமன்ற காங்கிரஸ் கொறடா மாணிக்கம் தாகூர் எம். பி. தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது: தமிழ்நாட்டில் கூட்டணியே அரசியல் உண்மையாகும். தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு கட்சிக்கும் தங்களுக்கென வாக்கு வங்கியை வைத்துள்ளது. இதில், காங்கிரஸ் மட்டும் இன்றி மற்ற கட்சிகளின் எண்ணிக்கைகளை முழுமையாக பிரதிபலிக்கப்படவில்லை. ஆனால், கூட்டணி அமைக்காமல் தமிழகத்தில் எந்த கட்சியும் வெற்றி பெற முடியாது. தற்போது, அதிகாரம் மட்டுமின்றி, அதிகார பகிர்வு குறித்தும் விவாதிக்க கூடிய நேரம் வந்து விட்டது.
அரசியல் கட்சிகளின் வாக்கு வங்கி
இது தொடர்பாக ஐ. பி. டி. எஸ். மேற்கொண்ட வாக்கு வங்கி தரவுகளின் அடிப்படையில், திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு 17.05 சதவீதம், அதிமுகவுக்கு 15.03 சதவீதம், தமிழக வெற்றி கழகத்துக்கு 14.20 சதவீதம், நாம் தமிழர் கட்சிக்கு 7.50 சதவீதம் வாக்கு வங்கி உள்ளது. இதே போல, பாட்டாளி மக்கள் கட்சிக்கு 4.09 சதவீதம், காங்கிரஸ் கட்சிக்கு 3.10 சதவீதம், பாரதீய ஜனதா கட்சிக்கு 2.50 சதவீதம், விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு 2 சதவீதம், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 1.40 சதவீதம், தேசிய திராவிட முன்னேற்ற கழகத்துக்கு 1.05 சதவீதம் வாக்கு வங்கிகள் உள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் படிக்க: கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்துக்கு செந்தில் பாலாஜி தான் காரணம்… நயினார் நாகேந்திரன் பகீர் குற்றச்சாட்டு




கூட்டணி ஆட்சிக்கான அதிகாரம் பகிரிந்தளிப்பு
இதனை மேற்கோள் காட்டி தமிழகத்தில் கூட்டணி ஆட்சிக்கான அதிகாரம் பகிர்ந்த அளிக்கப்பட வேண்டிய நேரம் வந்துள்ளது. எனவே, இது தொடர்பாக விவாதிக்கப்பட வேண்டும். அண்மையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் ஆட்சி அதிகாரம், கூடுதல் தொகுதிகள் வேண்டும் என்று வெளிப்படையாக கோரிக்கை வைத்திருந்தார்.
காங்கிரஸ் எழுப்பி வரும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு
இதே போல, கடந்த 6 மாதங்களாக காங்கிரஸ் கட்சியில் உள்ள இரண்டாம் கட்ட தலைவர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கருத்தை முன் வைத்து வருகின்றனர். 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணி அல்லது தமிழக வெற்றிக் கழகத்துடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது.
கூட்டணி ஆட்சி கருத்து மீண்டும் முன்வைப்பு
இந்த நிலையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு தமிழகத்தின் கடன் சுமை குறித்து காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரவீன் சக்கரவர்த்தி பேசியிருந்தது சர்ச்சையாகி இருந்தது. இவருக்கு ஆதரவாக மாணிக்கம் தாகூர் எம்பியும் கருத்து தெரிவித்திருந்தார். தற்போது, மீண்டும் கூட்டணி ஆட்சி என்ற கருத்தை மாணிக்கம் தாகூர் எம் பி முன் வைத்துள்ளார்.
மேலும் படிக்க: அழிவின் விழிம்பில் அரசு மருத்துவமனைகள்…மருத்துவர் அன்புமணி ஆவேசம்!