அழிவின் விழிம்பில் அரசு மருத்துவமனைகள்…மருத்துவர் அன்புமணி ஆவேசம்!
PMK Leader Anbumani Ramadoss: தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகள் அழிவின் விழிம்பில் இருப்பதாகவும், அங்கு, மருத்துவர்களால் முறையான சிகிச்சை வழங்கப்படுவதில்லை என்று பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார். இதில், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் நோயாளி ஒருவரின் காயத்துக்கு தூய்மை பணியாளர் தையல் போட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு பாட்டாளி மக்கள் கட்சி தலைவர் அன்புமணி ராமதாஸ் கண்டனம் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள கலவை அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய நபருக்கு தூய்மை பணியாளர் தையல் போட்டதாக வெளியான செய்தி அதிர்ச்சி அளிக்கிறது. தமிழகத்தில் அரசு மருத்துவமனைகள் அழிவின் விளிம்பில் உள்ளன என்பதற்கு இதுவே எடுத்துக்காட்டாகும். அரசு மருத்துவமனைகளில் அறுவை சிகிச்சைகளை மருத்துவர்கள் தான் மேற்கொள்ள வேண்டும். இதே போல, சின்னஞ்சிறு காயங்களுக்கு மருத்துவர்கள் வழிகாட்டுதலின் அடிப்படையில், துணை மருத்துவ பணியாளர்கள் அதனை மேற்கொள்வார்கள்.
மருத்துவத்துறையில் விதிமீறல்
இதுவே விதி ஆகும். ஆனால், இந்த விதியை மீறி மருந்துகளையும், மருத்துவ கருவிகளையும் கையாளும் உரிமையை தூய்மை பணியாளர்களுக்கு யார் வழங்கினார்கள். கலவை அரசு மருத்துவமனையில் விபத்தில் சிக்கிய அவருக்கு தூய்மை பணியாளர் தையல் போட்ட சம்பவத்தை விட இந்த விவகாரம் தொடர்பாக மருத்துவத் துறையின் மாவட்ட நிர்வாகம் அளித்த விளக்கம் மிக மிக கொடுமையானதாக உள்ளது.
மேலும் படிக்க: 10 லட்சம் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. இன்று தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. யாருக்கு இந்த லேப்டாப் கிடைக்கும்?




மருத்துவத்துறை அளித்த கொடுமையான விளக்கம்
அவர்கள் அளித்த விளக்கத்தில் மருத்துவர்களின் கண்காணிப்பில் தூய்மை பணியாளர் தையல் போட்டதாகவும், அதன் அடிப்படையில், தரமான சிகிச்சை அளிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த விளக்கமானது நோயாளிகளின் நலனில் அக்கறை இன்றி செயல்படும் மருத்துவத் துறையின் கவனக்குறைவை எடுத்துக் காண்பிக்கிறது. எனவே, தனது விருப்பம் போல மருத்துவ துறையினர் செயல்படக்கூடாது.
சம்பந்தப்பட்டவர்கள் மீது உரிய நடவடிக்கை
இந்த சம்பவம் தொடர்பாக சுகாதாரத்துறை உரிய விசாரணை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அதில் அன்புமணி ராமதாஸ் தெரிவிதுள்ளார். தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு மருத்துவர்களுக்கு பதிலாக தூய்மைப் பணியாளர்கள், காவலாளிகள் ஆகியோர் குளுகோஸ் ஏற்றுவது, ஊசி போடுவது என்பன உள்ளிட்ட சிகிச்சை அளிப்பதாக புகார் எழுந்து வருகிறது.
அரசு மருத்துவமனைகளில் அதிகரித்து வரும் நடைமுறைகள்
இது தொடர்பாக சம்பந்தப்பட்ட மருத்துவர்கள் மற்றும் சிகிச்சை அளித்த தூய்மைப் பணியாளர்கள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தாலும், இந்த நடமுறை சில அரசு மருத்துவமனைகளில் தொடர்ந்து நடைபெற்று தான் வருகிறது. இதே போல தான் ராணிப்பேட்டை மாவட்டத்திலும் நடந்துள்ளது. இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: இன்று பள்ளிகள் திறப்பு.. தொடரும் ஆசிரியர்கள் போராட்டம்.. அரசு நடவடிக்கை எடுக்குமா?