Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ஜன.28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி?…தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்!

PM Narendra Modi Visit Tamil Nadu: பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 28- ஆம் தேதி தமிழகம் வர இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. அவர், கன்னியாகுமரியில் நடைபெறும் தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது .

ஜன.28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி?…தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்கிறார்!
பிரதமர் மோடி தமிழகம் வருகை
Gowtham Kannan
Gowtham Kannan | Updated On: 07 Jan 2026 15:05 PM IST

தமிழகத்தில் ஒவ்வொரு நாளும் தேர்தல் களம் சூடு பிடித்து வருகிறது. கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு என்பன உள்ளிட்ட பணிகளில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன. இதில், அதிமுக மிக தீவிரமாக களப்பணி ஆற்றி வருகிறது. அதன்படி, அண்மையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தமிழகம் வந்திருந்தார். அவருடன், அதிமுகவின் முன்னாள் அமைச்சர் எஸ். பி. வேலுமணி இருமுறை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். இதில், கூட்டணி விவகாரம், தொகுதி பங்கீடு குறித்து பேசப்பட்டதாக தகவல் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், இன்று புதன்கிழமை ( ஜனவரி 7) அதிமுக கூட்டணியில், பாட்டாளி மக்கள் கட்சி இணைவதாக கட்சியின் தலைவர் அன்புமணி அறிவித்தார். இந்த நிகழ்வில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் இருந்தார்.

ஜனவரி 28- இல் தமிழகம் வரும் பிரதமர் மோடி

இந்த நிலையில், பிரதமர் நரேந்திர மோடி வரும் ஜனவரி 28- ஆம் தேதி ( புதன்கிழமை) தமிழகம் வர உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அதன்படி, அவர் கன்னியாகுமரியில் நடைபெற உள்ள தாமரை மகளிர் மாநாட்டில் பங்கேற்க இருப்பதாகவும், அந்த நிகழ்வில் கூட்டணி கட்சித் தலைவர்களை ஒரே மேடையில் உரையாற்ற வைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. இதனால், தமிழக அரசியல் களம் மேலும் சூடு பிடிக்கத் தொடங்கி உள்ளது.

மேலும் படிக்க: அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18 + 1 தொகுதிகள் ஒதுக்கீடு? வெளியான தகவல்!!

அமித் ஷாவின் வருகையை தொடர்ந்து…

அண்மையில் தமிழகம் வந்திருந்த மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா கூட்டணி விவகாரத்தை விரைவில் முடிக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருந்ததாக கூறப்படுகிறது. அதன் பேரில், பிரதமர் மோடியின் வருகைக்கு முன்னதாக அதிமுக, பாஜக கூட்டணியில் மேலும் பல கட்சிகளை இணைத்து கூட்டணியை வலுப்படுத்தும் பணியில் கட்சியினர் இறங்கி செயல்பட்டு வருகின்றனர். தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்தும் வகையில் பாஜக தலைமையிலிருந்து முக்கிய தலைவர்கள் தமிழகத்துக்கு வந்து செல்கின்றனர்.

பாஜக தேர்தல் பொறுப்பாளர்கள்

மேலும், தமிழக பாஜக தேர்தல் பொறுப்பாளர்களாக மத்திய அமைச்சர் பியூஸ் கோயல் உள்ளிட்டோர் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பாஜகவை வலுப்படுத்தும் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். அண்மையில் அமித் ஷாவின் வருகையை தொடர்ந்து, தமிழக அரசியல் களம் சூடு பிடித்து இருந்தது. தற்போது, பிரதமர் மோடியும் தமிழகத்துக்கு வர இருப்பது அரசியல் களத்தில் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது. ஏற்கெனவே, பொங்கல் பண்டிகை அன்று பிரதமர் மோடி வர இருப்பதாகவும், பொங்கல் பண்டிகையில் பங்கேற்க இருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது. தற்போது, அந்த பயணத்தில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிகிறது.

மேலும் படிக்க: கூட்டணியில் ஓபிஎஸ், டிடிவி-யை இணைக்க ஆலோசனை? இபிஎஸ் டெல்லி பயணம்..