Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அரசியல் கட்சிகள் கூட்டங்கள், ரோடுஷோ.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..

ரோடுஷோ செல்ல சாலையின் அரைப் பகுதி மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். அதோடு, ரோடுஷோ 3 மணி நேரத்தில் முடிக்கவேண்டும். ரோடுஷோ நடக்கும் போது பேசுவதற்கோ அல்லது பொதுக்கூட்டத்திற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. அனுமதிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நேரத்தில் மாற்றம் செய்ய முடியாது.

அரசியல் கட்சிகள் கூட்டங்கள், ரோடுஷோ.. வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு..
வழிகாட்டுதலில் உள்ள முக்கியம்சங்கள்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 07 Jan 2026 07:51 AM IST

சென்னை, ஜனவரி 07: கரூரில் விஜய் தலைமையில் நடந்த தவெக பொதுக்கூட்டத்தில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர்  உயிரிழந்த நிலையில், தமிழ்நாட்டில் எதிர்கால அரசியல் பொதுக்கூட்டங்கள் மற்றும் பேரணிகள் எப்படி நடத்தப்பட வேண்டும் என்ற தெளிவான வழிமுறைகளை தமிழக அரசு, உயர்நீதிமன்ற உத்தரவுக்கிணங்க வெளியிட்டுள்ளது. உள்துறை கூடுதல் தலைமைச் செயலாளர் தீரஜ் கையொப்பமிட்ட அரசாணையிலிருந்து அனுமதி, பாதுகாப்பு, ஒழுங்கு, பொறுப்பேற்பு, கண்காணித்தல் மற்றும் பிந்தைய நடவடிக்கைகள் என்ற ஆறு முக்கிய தளங்களை அடிப்படையாகக் கொண்டு வழிகாட்டல் உருவாக்கப்பட்டுள்ளது. என்னென்ன விதிமுறைகள் விதிக்கப்பட்டுள்ளது என்பது குறித்து இக்கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.

இதையும் படிக்க: ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்

வழிகாட்டுதலில் உள்ள முக்கியம்சங்கள்:

5,000 பேருக்கு மேல் பங்கேற்கும் அனைத்து பொதுக்கூட்டங்கள், பேரணிகள், ஊர்வலங்கள், சாலை நிகழ்ச்சிகள், ஆர்ப்பாட்டங்கள், அரசியல் கலாச்சார நிகழ்வுகள் போன்றவைகளுக்கு இந்த விதிமுறைகளைப் பின்பற்றவேண்டும். கோயில், தேவாலயம், மசூதி போன்ற மத நிகழ்ச்சிகளுக்கு இது பொருந்தாது. தேர்தல் காலத்தில் நடத்தை விதிகள் இருந்தாலும் கூட கூட்ட பாதுகாப்பு, குடிநீர் மற்றும் சுகாதாரம் போன்ற ஏற்பாடுகள் கட்டாயம்.

அனுமதி – முன்கூட்டியே அறிவிப்பு:

ஏற்பாட்டாளர்கள் தேவையான படிவங்களுடன் சம்பந்தப்பட்ட காவல் நிலையம்/போலீஸ் அலுவலகத்தில் எழுத்துப் பூர்வ விண்ணப்பம் அளிக்க வேண்டும். விண்ணப்பத்தில் தெளிவாக குறிப்பிடவேண்டியது, நிகழ்விடம், பரப்பளவு, தேதி, நேரம், எதிர்பார்க்கப்படும் கூட்ட அளவு, பங்கேற்கும் தலைவர்கள்/விருந்தினர்கள் விவரம் ஆகியவற்றை தெரிவிக்க வேண்டும். அதோடு, வாகன எண்ணிக்கை மற்றும் நிறுத்துமிடம், நுழைவு–வெளியேறும் இடங்கள், அவசர நுழைவு பாதை, வரைபடம் இணைப்பு ஆகியவற்றையும் கொடுக்க வேண்டும். 50,000 பேருக்கு மேல் பங்கேற்கும் மாநாடுகளுக்கு 30 நாட்களுக்கு முன் அனுமதி பெறுவது கட்டாயமாகும். அவசர ஆர்ப்பாட்டங்களுக்கு மாவட்ட ஆட்சியர் அல்லது சென்னை ஆணையர் விசேஷ அனுமதி வழங்கலாம்.

சேதத்திற்கு இழப்பீடு வழங்க வேண்டும்:

நேர அட்டவணையை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையை விட கூட்டம் அதிகரித்தால், அந்த கூட்டத்தை கலைப்பதும், ஒழுங்குப்படுத்துவதும் முழுக்க ஏற்பாட்டாளரின் பொறுப்பாகும். பொதுச் சொத்து அல்லது தனிச்சொத்துக்கு ஏற்படும் எந்த சேதத்திற்கும் ஏற்பாட்டாளர்கள் இழப்பீடு வழங்க வேண்டும். ஆம்புலன்ஸ், காவல் வாகனம், தீயணைப்பு வாகனங்கள் எப்போதும் தடையின்றி செல்லும் வகையில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்

ரோடுஷோ 3 மணி நேரத்தில் முடிக்கவேண்டும்:

ரோடுஷோ செல்ல சாலையின் அரைப் பகுதி மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்படும். அதோடு, ரோடுஷோ 3 மணி நேரத்தில் முடிக்கவேண்டும். ரோடுஷோ நடக்கும் போது பேசுவதற்கோ அல்லது பொதுக்கூட்டத்திற்கோ தடை விதிக்கப்பட்டுள்ளது. 50 பேருக்கு ஒரு தன்னார்வலர் நியமிக்கப்பட வேண்டும், அனுமதிக்கப்பட்ட வழித்தடம் மற்றும் நேரத்தில் மாற்றம் செய்ய முடியாது. விஐபி வாகனங்களுடன் கூட்டம் நகர்வதற்கு அனுமதி இல்லை.

இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்… மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு!

காத்திருக்க வைக்கக் கூடாது:

பொதுமக்களை முன்கூட்டியே, அதாவது நிகழ்ச்சி நடப்பதற்கு 2 மணி நேரத்துக்கு மேல் ஒரு இடத்தில் திரட்டக்கூடாது. நிகழ்ச்சி நேரத்தையும் ஏற்பாடுகளையும் தெளிவாக அறிவிக்க வேண்டும். அதேபோல், 500 பேருக்கு ஒரு கழிப்பறை, ஆண் – பெண் தனித்தனியாக அமைக்க வேண்டும். 100 மீட்டருக்கு ஒரு குடிநீர் மையம், மருத்துவ உதவி மற்றும் ஜெனரேட்டர் வசதி, கண்காணிப்பு கேமராக்கள் & வீடியோ பதிவு கட்டாயம். கர்ப்பிணிகள், முதியோர், மாற்றுத் திறனாளிகள், குழந்தைகள் நீண்ட நேரம் நிற்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.