பொங்கலுக்கு சிறப்பு பேருந்து.. ஜனவரி 9-14 வரை இயக்கம்.. வெளியான தமிழக அரசின் அறிவிப்பு!!
Pongal special bus: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தமாக 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து மட்டும் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. மொத்தமாக சென்னையில் இருந்து 22,797 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.
சென்னை, ஜனவரி 06: பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 9 முதல் 14 வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அறிவித்துள்ளார். தமிழர்களின் திருநாளாம் பொங்கல் பண்டிகையை கொண்டாட மக்கள் தயாராகி வருகிறார்கள். ஜன.15ம் தேதி பொங்கல் கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தொடர் விடுமுறை வரும் என்பதால், வெளியூரில் தங்கி படித்து வருபவர்கள், வேலை பார்த்து வருபவர்கள் என ஏராளமானோர் தங்கள் சொந்த ஊருக்கு செல்வார்கள். அந்த வகையில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை கொண்டாட சென்னையில் இருந்து மட்டும் அரசு பேருந்துகள் மூலம் 10 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் வெளியூர் பயணம் செய்வார்கள். இதற்காக அரசு சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும்.
இதையும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!
11 சிறப்பு முன்பதிவு மையங்கள்:
அந்தவகையில், இந்த ஆண்டு வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சர் சிவசங்கர் கூறியுள்ளார். சென்னையில் கிளாம்பாக்கம், மாதவரம், கோயம்பேடு பேருந்து நிலையங்களில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்றும் தெரிவித்துள்ள அவர், கிளாம்பாக்கத்தில் 10 முன்பதிவு மையங்கள், கோயம்பேட்டில் ஒரு முன்பதிவு மையம் என மொத்தமாக 11 முன்பதிவு மையங்கள் செயல்படும் என்றும், இணையதளம் மூலமாகவும் முன்பதிவு செய்துக்கொள்ளலாம் எனவும் கூறியுள்ளார்.




பொங்கலுக்கு 34,087 சிறப்பு பேருந்துகள்:
பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மொத்தமாக 34,087 பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக கூறிய அவர், ஜன.9 முதல் 14 வரை சென்னையில் இருந்து மட்டும் 10,245 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக தெரிவித்தார். மொத்தமாக பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து மொத்தம் 22,797 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இதையொட்டி, சென்னையில் இருந்து 11.35 லட்சம் பேர் சொந்த ஊர்களுக்கு செல்வார்கள் என்று கணிக்கப்பட்டுள்ளது
பொங்கல் முடிந்த பின் 25,008 சிறப்பு பேருந்துகள்:
பயணிகள் வசதிக்காக 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்படும். பொங்கல் முடிந்த சென்னை திரும்பும் பயணிகள் வசதிக்காக 15,188 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்தவகையில், ஜன.16 முதல் 19ம் தேதி வரை மொத்தமாக 25,008 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று கூறியுள்ளார்.
இதையும் படிக்க: ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்
காரில் செல்வோர் கவனத்திற்கு:
பொங்கல் பண்டிகைக்கு காரில் சொந்த ஊர் செல்வோர் போக்குவரத்தை நெரிசலை தவிர்க்க ஓஎம்ஆர், வண்டலூர் வெளிவட்ட சாலையை பயன்படுத்துமாறு அறிவுறுத்திய அவர், தாம்பரம், பெங்களத்தூர் வழியாக செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார். மேலும், ஆம்னி பேருந்துகளில் கட்டண புகார்களுக்கு 044-24749002, 26280445, 26281611 எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.