ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் ரொக்கப்பரிசு ரூ.3,000.. அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின்..
Pongal Cash prize: பொங்கல் பரிசு தொகுப்புடன் ரூ.3,000 ரொக்க பணம் வழங்கும் திட்டத்தை வரும் ஜனவரி 8ம் தேதி முதல்வர் தொடங்கி வைப்பார் என்று தெரிகிறது. அதற்கு முன்னதாக வீடு வீடாக டோக்கன் வழங்கும் பணி நடைபெற உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை, ஜனவரி 04: இந்த ஆண்டு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, 2.2 கோடி அரசி குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ.3000 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதோடு, இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கும் ரூ.3000 வழங்கப்பட உள்ளது. அத்துடன், பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகியவை வழங்க உள்ளது. மேலும், வேட்டி, சேலைகள் வழங்குவதற்கான அனைத்து ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இதையும் படிக்க: இலவச AI வசதியுடன் கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப்.. நாளை தொடங்கி வைக்கிறார் ஸ்டாலின்..
பரிசுத் தொகுப்புக்கு நிதி ஒதுக்கீடு:
முன்னதாக, பொங்கல் பண்டிகைக்கு தமிழக அரசு 1 கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் முழு கரும்பு ஆகிய பரிசுத் தொகுப்புகளை கொள்முதல் செய்வதற்கு ரூ.248 கோடி நிதியை ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டது. ஆனால், இதனுடன் ரொக்கப் பணம் குறித்த எந்த தகவலும் வெளிவராமல் இருந்தது. இதனால், இந்த ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு மட்டும்தானா? ரொக்கப் பணம் கிடையாதா? என்ற கேள்வி எழுந்தது.
அதேசமயம், எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பொங்கல் பரிசுத்தொகுப்புடன் ரூ.5000 ரொக்கம் வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார். இதன் மூலம், தமிழக அரசு எவ்வளவு தொகை வழங்கும் என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது.
தேர்தல் நெருங்குவதால் ரொக்கம்?
அதோடு, ஏப்ரல் மாதத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், இந்த ரொக்கப்பரிசு குறித்து மக்கள் பெரிய எதிர்பார்ப்பில் இருந்தனர். ஏனெனில், 2021 தேர்தல் காலத்தில் அதிமுக அரசு ரூ.2,500 வழங்கியது. எனவே இந்த முறை அதைவிட அதிகம் வழங்கப்படலாம் என்ற தகவலும் சமூக வலைதளங்களில் பரவியது.
தற்போது தமிழகத்தில் 2 கோடி 27 லட்சத்து 22 ஆயிரத்து 582 ரேஷன் கார்டுகள் உள்ளன. ரேஷன் கார்டுக்கு தலா ரூ.3,000 வழங்கப்பட்டால் ரூ.6,817 கோடியும், தலா ரூ.5,000 வழங்கப்பட்டால் ரூ.11,361 கோடியும் அரசுக்கு செலவாகும் என கணக்கிடப்பட்டது.
மேலும் படிக்க: “ஆசிரியர்களை கைவிடமாட்டோம்”.. போராட்டம் நியாமானது.. அமைச்சர் அன்பில் மகேஷ்!!
ரூ.3000 அறிவித்தார் முதல்வர்:
இந்நிலையில், கடும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று, பொங்கல் தொகுப்புடன் அரிசி அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அந்தவகையில், 2.2 கோடி அரசி குடும்ப அட்டைதாரர்கள் ரூ.3000 பெற உள்ளனர். தொடர்ந்து, பொங்கல் திருநாளுக்கு முன்பாக ரொக்கப் பரிசும், பொங்கல் பரிசுத் தொகுப்பும், வேட்டி சேலைகளும் அனைத்து நியாயவிலைக் கடைகள் வழியாக வழங்கிட அனைத்து ஏற்பாடுகளும் செய்ய முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.