பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன் விநியோகம் எப்போது..கூட்டுறவுத் துறை முக்கிய அறிவிப்பு!
Pongal Gift Set Tokens: பொங்கல் பண்டிகைக்கு வழங்கப்படும் பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் இரண்டு அல்லது மூன்று நாள்களில் விநியோகிக்கப்படுவதாக கூட்டுறவுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த டோக்கன் கிடைக்க பெறாதவர்களுக்கும் பொருள் கிடைக்க வழி வகை செய்யப்பட்டுள்ளது .
2026 பொங்கல் பண்டிகைக்கு பரிசு தொகுப்பு வழங்குவதற்காக தமிழக அரசு ரூ.242 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. அதன்படி, இந்த பொங்கல் பரிசு தொகுப்பில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ வெல்லம், உலர் திராட்சை, முந்திரி, ஏலக்காய் உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட உள்ளன. இந்த பரிசுத் தொகுப்புடன் ரொக்க பணமும் வழங்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது. இதில், ரூ. 2000 அல்லது ரூ. 3000 வழங்கப்படும் என்று தெரிகிறது. இதற்காக தமிழக அரசு கணக்கீடு செய்து வருவதாக தகவல்கள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில், இந்த பரிசுத் தொகுப்பு வழங்குவதற்கான டோக்கன்கள் அச்சிடப்பட்டு ( பொங்கல் பரிசு தொகுப்பு 2026 என்ற பெயரில்) அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
பொங்கல் பரிசு தொகுப்பு இரு நாள்களில் வரும்
இது தொடர்பாக, கூட்டுறவு துறை அதிகாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு ஜனவரி மாதம் வழங்கக் கூடிய அரிசி, சர்க்கரை, பாமாயில் உள்ளிட்ட பொருட்கள் வந்து விட்டன. இதை தவிர்த்து, பொங்கல் பரிசு தொகுப்புடன் வழங்க கூடிய பச்சரிசி, வெல்லம் உள்ளிட்ட பொருட்கள் இன்னும் 2 நாட்களுக்குள் வர உள்ளன. இதே போல, இலவச சேலை, வேஷ்டி உள்ளிட்டவையும் நியாய விலைக் கடைகளுக்கு வந்து இறங்கி விட்டன.
மேலும் படிக்க: பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?




பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்
இதே போல, பொங்கல் பரிசு தொகுப்புக்கான டோக்கன்களும் வந்துள்ளன. இந்த டோக்கன்களில் நியாய விலை கடையின் பெயர், கடையின் எண், டோக்கன் எண், குடும்ப அட்டை தாரரின் பெயர், நியாய விலை கடையின் எண், கிராமம், தெரு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் நாள் மற்றும் நேரம் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன.
இரு நாள்களில் விநியோகம் பொங்கல் பரிசு தொகுப்பு டோக்கன்
இந்த பரிசு தொகுப்புக்கான டோக்கன்கள் இன்னும் 2 அல்லது 3 நாட்களுக்குள் குடும்ப அட்டைதாரர்களின் வீடுகளுக்கு நேரடியாக வந்து வழங்கப்படும். அதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு வாங்க வரும் போது இந்த டோக்கனை உடன் எடுத்து வர வேண்டும். இந்த டோக்கன் பெறப்பட்டு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும்.
பரிசு தொகுப்பு டோக்கன் பெறாதவர்கள்
ஏதேனும் காரணங்களால் பரிசு தொகுப்புக்கான டோக்கன் கிடைக்கப் பெறாதவர்கள் ரேஷன் கடைகளில் அந்த டோக்கனை நிரப்பி கொடுத்து பொங்கல் பரிசுத் தொகுப்பை பெற்றுக் கொள்ளலாம். இதனால், அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு சென்றடையும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: பொங்கலுக்கு ரொக்க பணம் வழங்குவது உறுதி?கசிந்தது முக்கிய தகவல்!