AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரூ.1,020 கோடி ஊழல்.. “அமைச்சர் கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. விஜய் வலியுறுத்தல்

நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது.

ரூ.1,020 கோடி ஊழல்.. “அமைச்சர் கே.என்.நேருவை பதவி நீக்கம் செய்ய வேண்டும்”.. விஜய் வலியுறுத்தல்
கே.என்.நேரு, விஜய்
esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 21 Feb 2026 06:41 AM IST

சென்னை, பிப்ரவரி 21: ரூ.1,020 கோடி ஊழல் குற்றச்சாட்டில் உள்ள சிக்கியுள்ள அமைச்சர் கே.என்.நேருவை பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் வலியுறுத்தியுள்ளார். நகராட்சி நிர்வாகத் துறையில் நடைபெற்ற பணிநியமனங்கள் மற்றும் டெண்டர் ஒதுக்கீடுகளில் பெரும் முறைகேடுகள் இடம்பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது. இதனை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குகள் தாக்கல் செய்யப்பட்ட நிலையில், கே.என்.நேரு மீது தமிழக லஞ்ச ஒழிப்பு போலீசார் உடனடியாக வழக்குப்பதிவு செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும் படிக்க: பதற்றமான வாக்குச்சாவடிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை… தேர்தல் அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு!

வெற்று விளம்பர மாடல் திமுக அரசு:

இந்த நிலையில், அமைச்சர் கே.என்.நேருவை உடனடியாக பதவியில் இருந்து நீக்க வேண்டும் என தவெக தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். இதுகுறித்து விஜய் தனது எக்ஸ் பக்கத்தில், கபட நாடகத் திமுக அரசின் நகராட்சித் துறை அமைச்சரின் ரூ.1020 கோடி ஊழலை அமலாக்கத் துறை எப்போதோ வெளிக்கொண்டு வந்தது. அப்போதே சம்பந்தப்பட்ட அமைச்சர் மீது வழக்கு தொடுக்கவும் சொன்னது. ஆனால், ஊழலின் ஊற்றுக்கண்ணை விசாலப்படுத்திக்கொண்டே செல்வதில் இந்த வெற்று விளம்பர மாடல் திமுக அரசு கைதேர்ந்தது. ஆகவே, அமலாக்கத் துறை தந்த ஊழலுக்கான ஆதாரங்களைக் கண்டுகொள்ளவே இல்லை.

வழக்குபதிவு செய்ய வேண்டும்:

2026 தேர்தலில் வெல்லவே முடியாது என்று தெரிந்தும் தேர்தலுக்காக ஏதாவது தில்லுமுல்லுகளையும் கூட்டணிக்காகத் தகிடுதத்தங்களையும் தாராளமாகவும் ஏராளமாகவும் செய்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கும் திமுக அரசின் உச்சியைப் பிடித்து உயர்நீதிமன்றம் உலுக்கியுள்ளது. நகராட்சித் துறை அமைச்சரின் ஊழல் குறித்து அமலாக்கத் துறையின் குற்றச்சாட்டுகளுக்காகத் தந்துள்ள ஆதாரங்களில் முகாந்திரம் உள்ளது. எனவே, உடனடியாக அவர் மீது வழக்குப் பதிவு செய்ய வேண்டும் எனத் தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.

பதவி நீக்கம் செய்ய வேண்டும்:

ஊழல் மலிந்த மு.க.ஸ்டாலின் அரசுக்கு நேர்ந்து வரும் துடைக்கவே முடியாத ஆகப் பெரிய அவமானங்களில் இதுவும் ஒன்று. இதுவரை தனது அரசின் ஊழல்களுக்குப் பரிகாரமே தேடாத திமுக அரசு, ஊழல் குற்றச்சாட்டுகளுக்கு ஆளாகி உள்ள நகராட்சித் துறை அமைச்சரைத் தானாகவே ராஜினாமா செய்யச் சொல்ல வேண்டும். இல்லையேல் அவரைப் பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மேலும் படிக்க: விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ.25,000 ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..

விசிலடித்து கொண்டாட காத்திருக்கும் மக்கள்:

ஏற்கெனவே டாஸ்மாக்கில் 1000 கோடி அளவிலான ஊழல். இப்போது நகராட்சித் துறையில் 1020 கோடி ஊழல். அமலாக்கத் துறை அவிழ்த்துவிடும் திமுக அரசின் ஊழல்கள் எல்லாமே ஆயிரக்கணக்கான கோடிகளிலேயே உள்ளன. மன்னிக்க முடியாத அளவிற்கு ஊழல் மலிந்த திமுக அரசை, வருகிற தேர்தலில் தூக்கி எறிந்து விசிலடித்துக் கொண்டாட மக்கள் காத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.