விதியை மீறும் வாகனங்களுக்கு ரூ.25,000 ஸ்பாட் ஃபைன்.. சென்னை மாநகராட்சி அதிரடி..
இந்த நிலையில், சென்னையின் பல்வேறு பகுதிகளில் நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கட்டிடக் கழிவுகளை கண்டறிந்து அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, கட்டுமான விதிகளைப் பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை, பிப்ரவரி 20, 2026: சென்னையில் கட்டுமான விதிகளைப் பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணிகளில் ஈடுபடும் வாகனங்கள் விதிமுறைகளை முறையாகப் பின்பற்ற வேண்டும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிக அளவில் கட்டிடங்கள் கட்டுமானத்தில் உள்ளன. வீடுகளில் உருவாகும் குப்பைகளை தினசரி சென்னை மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் தரத்திற்கு ஏற்ப பிரித்து அகற்றி வருகின்றனர். ஆனால், கட்டுமானப் பணிகளின் போது வெளியேற்றப்படும் கட்டிடக் கழிவுகளை அகற்றுவது பெரிய சவாலாக இருந்து வருகிறது.
சில சமயங்களில் சாலையோர நீர்நிலைகள் மற்றும் ஏரிகளில் கட்டிடக் கழிவுகள் கொட்டப்படுவதாகவும் புகார்கள் எழுந்துள்ளன. இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.
மேலும் படிக்க: ரேஷன் கடைகளில் அரிசி மூட்டை மூலம் நூதன முறைகேடு? கடிவாளம் இட்ட கூட்டுறவு பதிவாளர்!
விதிமீறலில் ஈடுபடும் வாகனங்களுக்கு அபராதம்:
மேலும், கட்டிடக் கழிவுகள் தேங்கிக் கிடப்பதால் அப்பகுதிகளில் அதிகப்படியான காற்று மாசு ஏற்படுகிறது. மழைக்காலங்களில் இந்த கழிவுகளில் உள்ள ஆணி, இரும்புக் கம்பி போன்ற பொருட்கள் சாலைகளில் அடித்துச் செல்லப்பட்டு விபத்து அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இதனால் பொதுமக்கள் பல்வேறு பிரச்சனைகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில், நீண்ட காலமாக தேங்கிக் கிடக்கும் கட்டிடக் கழிவுகளை கண்டறிந்து அகற்ற சென்னை மாநகராட்சி நடவடிக்கை எடுத்துள்ளது. குறிப்பாக, கட்டுமான விதிகளைப் பின்பற்றாமல் காற்று மாசு ஏற்படுத்தும் வாகனங்களுக்கு ரூ.25,000 வரை அபராதம் விதிக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதிகளில் அதிகரித்து வரும் காற்று மாசினை கட்டுப்படுத்தவும், பொதுமக்களின் சுகாதாரத்தை பாதுகாக்கவும் “தூய்மையான மற்றும் பாதுகாப்பான கட்டுமானத்திற்கான வழிகாட்டுதல்கள் – 2025” நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன.
கூடுதல் முக்கிய அம்சங்கள்:
-
கட்டுமானத் தளங்களில் தூசி பரவாமல் இருக்க, இடையிடையே தண்ணீர் தெளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தப்பட்டுள்ளது.
-
கட்டுமானப் பொருட்கள் சாலையோரம் குவிக்கப்படக் கூடாது; அவை பாதுகாப்பான முறையில் வேலியிட்டு மூடப்பட்ட இடங்களில் மட்டுமே வைக்க வேண்டும்.
-
கட்டிடக் கழிவுகளை அகற்ற தனி அனுமதி பெற வேண்டும்; அனுமதி இல்லாமல் கழிவுகளை மாற்றினால் அபராதம் விதிக்கப்படும்.
-
பெரிய கட்டுமானத் திட்டங்களுக்கு சுற்றுச்சூழல் பாதுகாப்பு திட்டம் (Environmental Management Plan) தயாரித்து செயல்படுத்த வேண்டும்.
-
விதிமுறைகளை மீறும் கட்டுமான நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்பட வாய்ப்பு உள்ளது.
-
பொதுமக்கள் புகார் அளிக்க சிறப்பு ஹெல்ப்லைன் எண் மற்றும் மொபைல் செயலி வழியாக கண்காணிப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
-
காற்று மாசு அளவைக் கண்காணிக்க முக்கிய பகுதிகளில் கூடுதல் கண்காணிப்பு கருவிகள் நிறுவப்படும்.
-
கட்டுமானத் தளங்களில் பாதுகாப்பு வலை (Safety Net) மற்றும் தூசி தடுப்பு திரைகள் அமைக்க வேண்டும்.
-
விதிமுறைகளை மீண்டும் மீண்டும் மீறும் வாகனங்களுக்கு அதிகபட்ச அபராதம் மற்றும் நிரந்தர பறிமுதல் நடவடிக்கையும் எடுக்கப்படும்.
கட்டுமானப் பணிகள் மற்றும் கட்டிடக் கழிவுகளை ஏற்றிச் செல்லும் வாகனங்கள் விதிமுறைகளை கட்டாயமாகப் பின்பற்ற வேண்டும். குறிப்பாக, வாகனங்களின் மேல்புறம் தார்பாயால் மூடப்பட்டிருக்க வேண்டும்; திறந்தவெளியில் கட்டிடக் கழிவுகளை எடுத்துச் செல்லக் கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த விதிமுறைகளை மீறினால் உடனடி அபராதம் (Spot Fine) விதிக்கப்படும். தேவையான பட்சத்தில் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் சென்னை மாநகராட்சி எச்சரித்துள்ளது.