AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ரயில் பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து..

20.02.2026 முதல் 05.04.2026 வரை இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண் E18-இல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண் 18A-இல் 28 பேருந்துகளும், மொத்தம் 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

ரயில் பயணிகள் கவனத்திற்கு… இன்று முதல் சென்னை கடற்கரை – தாம்பரம் செல்லும் 44 மின்சார ரயில்கள் ரத்து..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 20 Feb 2026 08:03 AM IST

சென்னை, பிப்ரவரி 20, 2026: சென்னையில் பிப்ரவரி 20 ஆம் தேதி முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை எழும்பூர் ரயில் நிலையத்தில் மறுசீரமைப்பு பணிகள் நடைபெறுவதால், சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இயக்கப்படும் 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சென்னையில் வேலைக்கு செல்லும் மக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அநேகர் அன்றாடப் போக்குவரத்திற்காக மின்சார ரயில் சேவையை நம்பி உள்ளனர். தினசரி ஆயிரக்கணக்கான மக்கள் இந்த மின்சார ரயில்களில் பயணம் செய்கின்றனர். சென்னை கடற்கரையிலிருந்து செங்கல்பட்டு வரை தினமும் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. குறைந்த கட்டணத்தில் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளுக்கும், புறநகர் பகுதிகளுக்கும் பயணிக்க இந்த சேவை உதவுகிறது.

44 மின்சார ரயில்கள் ரத்து:

இந்நிலையில், சென்னை கடற்கரை முதல் தாம்பரம் வரையிலான புறநகர் ரயில் சேவையில் இன்று காலை முதல் ஏப்ரல் 5 ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னை எழும்பூரில் மேற்கொள்ளப்படும் மறுசீரமைப்பு பணிகளின் காரணமாக புறநகர் மின்சார ரயில் சேவையில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், அரக்கோணம் வரை செல்லும் ரயில்கள் நடைமேடை 6-இலிருந்து புறப்படும். அதேபோல், அரக்கோணம், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, தாம்பரம் வழியாக சென்னை கடற்கரை வரும் ரயில்கள் அனைத்தும் நடைமேடை 5-இல் வந்து செல்லும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: வீடு தேடி வந்த விபரீதம்.. வாடகைக்கு குடியேறிய போலி மருத்துவர் நூதன மோசடி.. நகை, பணத்தை இழந்த குடும்பம்..

இந்த மறுசீரமைப்பு பணி பிப்ரவரி 20 ஆம் தேதி தொடங்கி ஏப்ரல் 5 ஆம் தேதி வரை நடைபெறும். இந்த காலகட்டத்தில், சென்னை கடற்கரை முதல் தாம்பரம், செங்கல்பட்டு, அரக்கோணம் வரை செல்லும் சில ரயில்கள் ரத்து செய்யப்பட்டு, புதிய அட்டவணைப்படி இயக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

கூடுதல் பேருந்துகள் இயக்கம்:

ரயில் சேவை குறைக்கப்பட்டுள்ளதால், இன்று முதல் மாநகரப் போக்குவரத்து கழகம் (மா.போ.கழகம்) கூடுதலாக பேருந்துகளை இயக்குவதாக அறிவித்துள்ளது. இதுகுறித்து மா.போ.கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், எழும்பூர் ரயில் நிலைய மறுசீரமைப்பு பணிகள் காரணமாக சென்னை கடற்கரை – தாம்பரம் – செங்கல்பட்டு மார்க்கத்தில் இயக்கப்படும் புறநகர் மின்சார ரயில் சேவையில் பிப்ரவரி 20, 2026 முதல் ஏப்ரல் 5, 2026 வரை 45 நாட்களுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது என கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: கோடை காலத்தில் பெண்களுக்கு குளிர்ச்சியான அறிவிப்பு.. அமைச்சரின் அற்புதமான அறிவிப்பு!

இதனைத் தொடர்ந்து, 20.02.2026 முதல் 05.04.2026 வரை இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து தாம்பரம், கிளாம்பாக்கம் வழியாக கூடுவாஞ்சேரி வரை இயக்கப்படும் தடம் எண் E18-இல் 16 பேருந்துகளும், கிளாம்பாக்கம் வரை இயக்கப்படும் தடம் எண் 18A-இல் 28 பேருந்துகளும், மொத்தம் 44 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், கூடுதலாக இராயபுரம் தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து கிளாம்பாக்கம் வரை 35 பேருந்துகள் மற்றும் பல்லாவரத்திலிருந்து தாம்பரம் வழியாக செங்கல்பட்டு வரை 15 பேருந்துகள் என மொத்தம் 50 பேருந்துகள் வழக்கமான சேவைக்கு கூடுதலாக இயக்கப்பட உள்ளன.

பயணிகளின் தேவைக்கேற்ப மேலும் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்கள் நியமிக்கப்பட்டு சேவையை கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.