திமுக விருப்ப மனு நாளை முதல் விநியோகம்.. 23ம் தேதி முதல் வீடு, வீடாக பிராசாரம்.. பரபரக்கும் தேர்தல் களம்!!
திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து, பிப். 23 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை 'வெல்லும் தமிழ்ப் பெண்கள்' வீடு வீடாகப் பிரசாரத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
சென்னை, பிப்ரவரி 19: தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிட விரும்புவோர் வரும் பிப்.20 ஆம் தேதி முதல் விருப்ப மனு அளிக்கலாம் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார். தமிழக சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, பிரச்சார பொதுக்கூட்டம், தொகுதிப் பங்கீடு என தீவிரமாக செயல்பட்டு வருகின்றன. அதிமுக தலைமையிலான தே.ஜ. கூட்டணி தங்களது பலத்தை மேலும் உறுதியாக்க சூறாவளியாக சுழன்று வருகிறது.
மேலும் படிக்க: சென்னையில் அமைகிறது மிகப்பெரிய ஏஐ டேட்டா சென்டர் – இதனால் என்ன பலன்?
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை:
அதேசமயம், திமுக – காங்கிரஸ் இடையே நிலவும், ‘ஆட்சி அதிகாரத்தில் பங்கு’ என்ற கோரிக்கையால், கூட்டணி இன்னும் முடிவாகாமலே உள்ளது. இந்த சூழலில் திமுக கூட்டணியில் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தை பிப்ரவரி 22-ந் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சட்டப்பேரவை நிறைவு பெற்றதும் தேர்தல் பணிகளில் கவனம் செலுத்த திமுக முடிவு செய்துள்ளது. அந்தவகையில், இந்த பேச்சுவார்த்தையை எதிர்பார்த்து மற்ற கூட்டணி கட்சிகள் குழு அமைத்து காத்திருக்கின்றன. தாமதமாக தேர்தல் பணிகளை தொடங்கினாலும், அடுத்தடுத்து பணிகளில் வேகம் காட்டும் வகையில் திமுக திட்டமிட்டு வருகிறது.
மார்ச்.8ல் கூட்டணி கட்சியினருடன் மாநாடு:
இதுகுறித்து திமுக நிர்வாகிகள் கூறும்போது, திருச்சியில் மார்ச் 8-ம் தேதி நடைபெறும் திமுக மாநாட்டில் காங்கிரஸ், கம்யூனிஸ்ட்கள், விசிக உட்பட அனைத்து கூட்டணி கட்சிகளின் தலைவர்களும் கூட்டாக பங்கேற்க வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அதற்குள் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி பங்கீடு, வேட்பாளர் தேர்வு உள்ளிட்ட பணிகள் முடிக்கப்படும் என்றனர்.
வீடு வீடாக பிரசாரம்:
பிப். 23 முதல் மார்ச் 8 ஆம் தேதி வரை ‘வெல்லும் தமிழ்ப் பெண்கள்’ வீடு வீடாகப் பிரசாரத்தை சிறப்பாக நடத்திட வேண்டும் என்று திமுக தலைவரும் முதல்வருமான மு.க. ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘திராவிட மாடல் அரசு’ நிறைவேற்றியுள்ள நலத் திட்டங்களையும் – ‘பெண்களின் முன்னேற்றமே தமிழ்ச் சமூகத்தின் முன்னேற்றம்’ எனும் கொள்கை உறுதியுடன் பெண்களுக்கான எண்ணற்ற பல திட்டங்களையும் – சாதனைகளையும் ஒவ்வொரு வீட்டிலும் உள்ள மகளிரிடம் எடுத்து சென்று சேர்ப்பதே இந்த பிரசாரத்தின் நோக்கமாக இருக்க வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: வலுப்பெறும் காற்றழுத்த தாழ்வு பகுதி.. அடுத்த 4 நாட்களுக்கு கொட்டப்போகும் மழை.. வானிலை நிலவரம்!!
ரூ.2000 மகளிர் உரிமைத் தொகை:
தமிழ்நாட்டு பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை ரூ.5000 வழங்கிய திராவிட மாடல் அரசின் சாதனைகளையும் வீடு வீடாக எடுத்துச் சொல்ல வேண்டும். அதுமட்டுமின்றி, ‘திராவிடமாடல் 2.0’ ஆட்சியில் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை மாதம் ரூ.2,000மாக உயர்த்தி வழங்கப்படும் என்ற எனது உறுதிமொழியையும், கலைஞர் மகளிர் உரிமைத் தொகை தடையின்றி தொடர, கழக ஆட்சி தொடர்வது அவசியம் என்பதையும் மகளிர்க்கு உணர்த்திட வேண்டும் என்றும் கூறியுள்ளார்.