பொங்கல் பரிசுத் தொகுப்பு.. நாளைக்குள் டோக்கன்கள் தயார் நிலையில் இருக்க அறிவுறுத்தல்.. நியாய விலை கடைகளுக்கு என்னென்ன கட்டுப்பாடுகள்?
Pongal Gift: ஜனவரி 2, 2026 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை அச்சிட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து நியாய விலை கடைகளுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது.
ஜனவரி 1, 2026: 2026 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை இன்னும் சில நாட்களில் கொண்டாடப்பட இருக்கிறது. இதனை முன்னிட்டு, தமிழக அரசு தரப்பில் பொங்கல் பரிசு வழங்குவதற்காக ரூபாய் 248 கோடி நிதி ஒதுக்கீடு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகைக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனுடன் ஒரு வேட்டியும் சேலையும் வழங்கப்பட உள்ளது.
இந்தச் சூழலில், பொங்கல் பண்டிகைக்காக நியாய விலை கடைகளில் குடும்ப அட்டை வைத்திருக்கும் பொதுமக்கள் பொங்கல் பரிசுத் தொகுப்பு பெறுவதற்காக டோக்கன் வழங்கும் பணிகள் விரைவில் தொடங்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தமிழக அரசு தரப்பில் நியாய விலை கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: நெல்லை வந்தே பாரத் உள்பட 4 ரயில்களின் நேர அட்டவணையில் மாற்றம்.. தெற்கு ரயில்வே அறிவிப்பு
பொங்கல் பரிசுத் தொகுப்பு:
ஆனால், 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற இருக்கக்கூடிய சூழலில், அதனை மனதில் வைத்துக்கொண்டு இந்த முறை ரொக்கப் பணமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு குடும்ப அட்டைக்கு 3,000 ரூபாய் வரை வழங்கப்படும் என பேச்சுகள் அடிபடுகின்றன. இருப்பினும், தற்போது வரை அரசு தரப்பில் இது தொடர்பாக எந்தவொரு அதிகாரப்பூர்வ அறிவிப்பும் வெளியாகவில்லை.
டோக்கன்கள் விநியோகம் செய்யும் பணிகள்:
ஜனவரி 2, 2026 ஆம் தேதிக்குள் பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன்களை அச்சிட்டு தயாராக வைத்திருக்குமாறு அனைத்து நியாய விலை கடைகளுக்கும் தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. முறையான அரசாணை வெளியிடப்படுவதற்கு முன்னதாக, கூட்டுறவு, உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை மாநிலம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு விரிவான வழிமுறைகளை வெளியிட்டுள்ளது. அரிசி ரேஷன் அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு வீடு வீடாக டோக்கன்களை விநியோகிப்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா ஜனவரி 4-இல் தமிழகம் வருகை…அரசியல் பின்னணி என்ன!
நியாய விலை கடைகளுக்கு அறிவுறுத்தல்:
டோக்கன்களில் பரிசுத் தொகுப்பைப் பெறும் தேதி மற்றும் நேரம் தெளிவாக குறிப்பிடப்பட வேண்டும். சுமார் 2 கோடி பயனாளிகள் இதன் மூலம் பயனடைவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த உத்தரவை கூடுதல் பதிவாளர் எம். வீரப்பன், அனைத்து மண்டல அலுவலகங்களுக்கும் அனுப்பியுள்ளார்.
கூட்ட நெரிசலைத் தவிர்க்க, காலையிலும் மாலையிலும் ஒரு அமர்வுக்கு 100 பயனாளிகள் அனுமதிக்கப்படும் வகையில் ஏற்பாடு செய்ய வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. பெரிய வளாகங்களை கொண்ட கடைகளில், ஒரு அமர்வுக்கு 150 முதல் 200 பயனாளிகள் வரை அனுமதிக்கலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், பயனாளிகளின் விரிவான பட்டியல்கள் பராமரிக்கப்பட வேண்டும்.
ரேஷன் கடை ஊழியர்கள் மட்டுமே டோக்கன்களை வழங்க அனுமதிக்கப்படுகிறார்கள். காவல்துறையினர் இந்த செயல்முறையில் நேரடியாக ஈடுபட தடை விதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், சட்டம்-ஒழுங்கு பிரச்சினைகள் ஏற்படாமல் இருக்க பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்படும்.
1,500 ரேஷன் கார்டுகள் வரை கையாளும் கடைகள் இரண்டு ஊழியர்களை நியமிக்க வேண்டும். அதே நேரத்தில், 1,500 கார்டுகளுக்கு மேல் உள்ள கடைகள் மூன்று ஊழியர்களை நியமிக்க வேண்டும். பரிசுப் பொருட்கள் போதுமான அளவில் இருப்பில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.