மின்சார வாகன உரிமையாளருக்கு புத்தாண்டு பரிசு…தமிழக அரசு வெளியிட்ட அசத்தல் அறிவிப்பு!
Tax Exemption For Electric Vehicles: தமிழகத்தில் மின்சார வாகனங்களுக்கான வரி விலக்கு மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே, 3 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது, நீட்டிக்கப்பட்டு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த அறிவிப்பு புத்தாண்டு பரிசாக அமைந்துள்ளது .
இந்தியாவில் சுற்றுச்சூழலை பேணிக் காக்கும் வகையில் பேட்டரி வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிப்பதற்கு மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன்படி, கடந்த 2019- ஆம் ஆண்டு தமிழகத்தில் மின்சார வாகன கொள்கையை மாநில அரசு வெளியிட்டது. இதில் கடந்த 2022- ஆம் ஆண்டு வரை மின்சார வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக 100% சாலை வரி விலக்கு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து, இந்தச் சலுகையானது 3 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. அதன்படி, இந்தச் சலுகையானது இன்று (புதன்கிழமை) 31 டிசம்பர் 2025- உடன் முடிவடைய இருந்தது. இதனிடையே, இந்த அவகாசத்தை மேலும் நீட்டிக்க வேண்டும் என்று வாகன உற்பத்தியாளர்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.
மின்சார வாகனங்களுக்கு வரி விலக்கு அவகாசம் நீட்டிப்பு
இந்த கோரிக்கையை தமிழக அரசு தற்போது ஏற்றுள்ளது. அதன்படி, 3 ஆண்டுகளுக்கு, அதாவது 2027 டிசம்பர் 31- ஆம் தேதி வரை மின்சார வாகனங்களுக்கான 100 சதவீத சாலை வரி விலக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தொழில்துறை அமைச்சர் டி. ஆர். பி. பி ராஜா கூறுகையில், மின்சார வாகனங்களுக்கான வரி விலக்கு மேலும் 2 ஆண்டுகள் நீட்டிக்கப்பட்டது தொழில் துறைக்கு தமிழக அரசு ஆதரவாக இருப்பதை அடிக்கோடிட்டு காண்பிக்கிறது.
மேலும் படிக்க: திருத்தணியை தொடர்ந்து கோவையிலும் வட மாநில இளைஞர்களுக்கு கத்திக்குத்து- சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு




பேட்டரி வாகனங்களின் எண்ணிக்கை 7.8 சதவீதமாக உயர்வு
தமிழகத்தில், தற்போது பேட்டரிகள் மூலம் இயங்கும் வாகனங்களின் எண்ணிக்கை 7.8 சதவீதமாக உயர்ந்துள்ளது. இதற்கான சார்ஜிங் மையங்களின் உள் கட்டமைப்பை விரிவு படுத்துவதிலும், இதனை சுற்றுச் சூழலுக்கு உகந்ததாக மாற்றுவதற்கு வெகு தூரம் பயணிக்க வேண்டி உள்ளது என்று தெரிவித்தார். நாட்டில் நாளுக்கு நாள் எரி பொருள்களின் மூலம் இயங்கும் வாகன பெருக்கத்தால் சுற்றுச்சூழல் மேலும் மேலும் பாதிப்படைந்து வருகிறது.
கிராம பகுதிகளில் பேட்டரி வாகனங்கள் பயன்பாடு
இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் பேட்டரிகள் மூலம் இயங்கும் இரு மற்றும் நான்கு சக்கர வாகனங்களை பொதுமக்கள் பயன்படுத்துவதற்கு மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டது. அதன்படி, நகரப் பகுதிகள் மட்டும் இன்றி கிராமப் பகுதிகள் வரையும் பேட்டரிகள் மூலம் இயங்கும் மின்சார வாகனங்கள் பெருமளவில் பயன்பாட்டுக்கு வந்துள்ளன. சாதாரண நபர் கூட பேட்டரி வாகனங்கள் பயன்படுத்துவதை பார்க்க முடிகிறது. இதனால், பெட்ரோல், டீசல் ஆகிய எரி பொருட்களின் தேவை குறைவதுடன், சுற்றுச்சூழல் மாசடைவதும் பெரிதளவில் தடுக்கப்படுகிறது.
மேலும் படிக்க: புத்தாண்டு கொண்டாட்டத்துக்கு செல்ல இலவச பேருந்து வசதி…புதுச்சேரியில் அசத்தல் அறிவிப்பு!