ஜன.9ல் “உங்க கனவை சொல்லுங்க” புதிய திட்டம் தொடக்கம்.. அமைச்சர் அன்பில் மகேஷ்
Unga kanavai sollunga scheme: தமிழகத்தில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம் அமலாகிறது. உங்கள் குடும்பத்தினுடைய கனவாக என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது தான் இந்த "உங்க கனவை சொல்லுங்க" திட்டம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.
சென்னை, ஜனவரி 06: வரும் ஜன.9ம் தேதி திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரியில் UKS எனப்படும் “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். பரபரப்பான அரசியல் சூழ்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழக அமைச்சரவை கூட்டம் இன்று காலை நடைபெற்றது. சுமார் ஒன்றரை மணி நேரம் நடந்த இந்த ஆலோசனையில், பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. பொதுவாக அமைச்சரவை கூட்டத்திற்கு பின் அமைச்சர்கள் செய்தியாளர்களை சந்திக்கும் வழக்கம் கிடையாது. ஆனால், இன்று அமைச்சர் அன்பில் மகேஷ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, “உங்க கனவை சொல்லுங்க” என்ற புதிய திட்டத்திற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியதாக அவர் தெரிவித்தார்.
இதையும் படிக்க: திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றலாம்… மதுரை அமர்வு பரபரப்பு தீர்ப்பு!
“உங்க கனவை சொல்லுங்க” திட்டம் என்றால் என்ன?
தொடர்ந்து, பேசிய அவர், தமிழகத்தில் பொதுமக்கள் ஒவ்வொருவரும் தங்களது குடும்பம் சார்ந்த கனவை சொல்வதற்கான புதிய திட்டம் அமலாகிறது. உங்கள் குடும்பத்தினுடைய கனவாக என்ன இருக்கிறது என்பதை தெரிந்துகொள்வது தான் இந்த “உங்க கனவை சொல்லுங்க” திட்டம். இதில், முத்தாய்ப்பான மூன்று கனவுகளை சொல்லுங்கள் என்று கேட்போம். இத்திட்டத்தில் குடும்பங்கள் மட்டுமின்றி இளம் தலைமுறையினரின் கனவுகளையும் கேட்டறிந்து நிறைவேற்ற உள்ளதாக கூறினார்.




உங்க கனவே கேட்கும் பணியில் 50,000 தன்னார்வலர்கள்:
இதற்காக, வீடு வீடாக சென்று 50,000 தன்னார்வலர்கள் குடும்பங்களின் கனவை கேட்டறிய உள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, தன்னார்வலர்கள் வீடு வீடாக சென்று முதலில் பொதுமக்களிடன் (கனவு அட்டை) படிவத்தை கொடுத்து விடுவார்கள். பின்னர் 2 நாட்களுக்கு பிறகு நிரப்பபட்டட படிவத்தை பெற்று பிரத்யேக செயலியில் பதிவேற்றம் செய்வோம் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க: “திமுக ஆட்சியில் 4 ஆண்டுகளில் 4 லட்சம் கோடி ஊழல்”.. ஆளுநரிடம் இபிஎஸ் பரபரப்பு புகார்!!
ஜன.11ம் தேதி முதல் இணையதளம்:
இதற்காக வடிவமைக்கப்பட்ட இணையதளத்தை ஜன.11ம் தேதி முதல் பொதுமக்கள் பயன்படுத்தலாம் என்று கூறிய அவர், இந்த இணையதளம் மூலம் ஒவ்வொரு இளைஞரும் தங்களது, கனவு, இலக்குகள் என 3 யோசனைகளை வழங்கலாம். அதோடு, 2030ல் தமிழ்நாடு எப்படி இருக்க வேண்டும் என்ற யோசனையை அளிப்பதாக இருக்கலாம் என்றார். இதில், அயலகத் தமிழர்களின் கனவுகளையும் கேட்டறிய உள்ளதாக கூறிய அவர், தொலைநோக்கு பார்வையில் தமிழகத்தை முன்னேற்றும் வகையில் ”உங்க கனவை சொல்லுங்க” திட்டம் அமையும் என்று தெரிவித்தார்.ஜனவரி 9ஆம் தேதி அன்று திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் முதல்வர் ஸ்டாலின் இந்தத் திட்டத்தைத் தொடங்கி வைக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.