“அன்புமணி யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், யாரும் அவருக்க ஓட்டு போட மாட்டார்கள்”.. ராமதாஸ் பளார்!!
ramadoss on pmk issue: தந்தைக்கே துரோகம் செய்த, தந்தையிடம் இருந்து கட்சியை அபகரிக்க நினைத்தவருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். நேற்று நடந்தது ஒரு நாடகம். ஏன் தந்தைக்கு எதிராக அன்புமணி செயல்படுகிறார் என மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது.
விழுப்புரம், ஜனவரி 08: அன்புமணி யாருடன் சேர்ந்தாலும் அவர்களுக்கு பாமகவினர் உட்பட யாரும் ஓட்டு போட மாட்டார்கள் என ராமதாஸ் தெரிவித்துள்ளார். பாமக யாருக்கு சொந்தம் என்பதில் கட்சியின் நிறுவனர் ராமதாஸூக்கும், அவரது மகனும், கட்சியின் தலைவருமான அன்புமணி ராமதாஸூக்கும் இடையே மோதல் போக்கு உச்சகட்டத்தை எட்டியுள்ளது. இதுதொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. இதனிடையே, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்த அன்புமணி, அதிமுக-பாமக கூட்டணி அமைத்துள்ளதாக அறிவித்தார். தொடர்ந்து, அவருக்கு அதிமுக கூட்டணியில் 18+1 தொகுதி ஒதுக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, பாமக கட்சி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ள நிலையில், அன்புமணி தரப்பினர் அதிமுகவுடன் கூட்டணி வைத்தது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளானது.
மேலும் படிக்க:ரூ.3000 உடன் பொங்கல் பரிசுத் தொகுப்பு… ரேஷன் கடைகளில் இன்று விநியோகம் தொடக்கம்..
அன்புமணி வேட்டு வைப்பார் என்று எதிர்பார்க்கவில்லை:
இந்நிலையில், திமுக கூட்டணியில் அன்புமணி தரப்பு பாமக இணைந்த நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் இன்று விழுப்புரத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, அன்புமணி கூட்டணி ஒப்பந்தம் போட்டாரா, கையெழுத்து போட்டாரா என்பது எனக்குத் தெரியாது. ஒரு நபர் ஒரு கட்சியோடு பேசி கூட்டணி அமைத்துள்ளதாக கூறிய அவர், அன்புமணி எனக்கு வேட்டு வைப்பார் என்று எனக்கு முன்பே தெரியவில்லை. கடும் எதிர்ப்பை மீறித்தான் அன்புமணியை கட்சியில் சேர்த்து மத்திய அமைச்சராக்கினேன் என்றார்.




தொடர்ந்து, அன்புமணி செய்த தில்லு முல்லு காரணமாகவே பாமகவில் இருந்து நீக்கினேன் என்றார். வியர்வை சிந்தி, ரத்தம் சிந்தி இரவு பகல் பாராமல் ஓடி உழைத்து பாமகவை வளர்த்தேன். அப்படி, நான் ஆரம்பித்த கட்சியை யாரும் உரிமை கொண்டாட முடியாது. இந்திய அளவில் அங்கீகாரம் பெறும் அளவுக்கு பாமகவை வளர்த்திருக்கிறேன் என்றார்.
அன்புமணி ஒரு மோசடி பேர்வழி:
பாமக சார்பில் கூட்டணி பேச அன்புமணிக்கு தகுதியில்லை. அன்புமணி யாருடன் சேர்ந்தாலும் அவர்களுக்கு பாமகவினர் உட்பட யாரும் ஓட்டு போட மாட்டார்கள். ஏனெனில், தந்தைக்கே துரோகம் செய்த, தந்தையிடம் இருந்து கட்சியை அபகரிக்க நினைத்தவருக்கு மக்கள் ஓட்டு போட மாட்டார்கள். நேற்று நடந்தது ஒரு நாடகம். ஏன் தந்தைக்கு எதிராக அன்புமணி செயல்படுகிறார் என மக்கள் பேசுவதை கேட்க முடிகிறது. பாமக சார்பில் கூட்டணி பேசியது என்பது நேற்று நடந்த கூத்து. கூட்டணி பேச்சுவார்த்தை என்பது நீதிமன்ற அவமதிப்பு. என் தலைமையில்தான் கூட்டணி பேச முடியும். நான் அமைக்கின்ற கூட்டணிதான் வெற்றிபெறும். நான் சேரும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும் என்று அவர் கூறினார்.
மேலும் படிக்க: பொங்கலை முன்னிட்டு கூடுதல் சிறப்பு ரயில்கள் அறிவிப்பு – எந்தெந்த ஊர்களுக்கு? எப்போது?
யாருடன் கூட்டணி?
யாருடன் கூட்டணி அமைக்க உள்ளோம் என்பது குறித்து இரண்டு நாட்களில் அறிவிப்பதாக கூறிய அவர், கூட்டணி விவகாரம் குறித்து மூத்த தலைவர்களுடன் கலந்தாலோசித்து முடிவு எடுக்கப்படும் என்று கூறினார். மேலும், அரசியலில் என்ன மாற்றங்கள் வேண்டுமானாலும் நடக்கலாம் என்று கூறிய அவர், அதிமுக தரப்பில் இருந்து இதுவரை தன்னிடம் யாரும் கூட்டணி பேச்சுவாரத்தை நடத்தவில்லை என்றும் தெரிவித்தார்.