இன்று வேப்பூரில் தேமுதிக உரிமை மீட்பு மாநாடு 2.0.. கூட்டணியை அறிவிக்கிறார் பிரேமதா..
DMDKs Rights Restoration Conference 2.0: சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், இன்று நடைபெறும் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்திருந்தனர்.
கடலூர், ஜனவரி 09: வேப்பூரில் இன்று மாலை நடைபெறும் தேமுதிக உரிமை மீட்பு மாநாட்டில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா சட்டப்பேரவை தேர்தலில் யாருடன் கூட்டணி என்பதை அறிவிக்க உள்ளார். கடலூர் மாவட்ட வேப்பூர் அருகே பாசார் கைக்காட்டி தேசிய நெடுஞ்சாலையில் இன்று (ஜனவரி 9) தேமுதிக சார்பில் மக்கள் உரிமை மீட்பு மாநாடு 2.0 மாபெரும் அளவில் நடைபெற இருக்கிறது. இதற்காக 150 ஏக்கர் பரப்பளவில் மாநாட்டு மேடை மற்றும் வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மாநாடு நடைபெறும் சாலை முழுவதும் கட்சி கொடிகள், பதாகைகள், தோரணங்கள், பேனர்கள் என விழா நிறமாக மின்னி வருகிறது.
மேலும் படிக்க: “அன்புமணி யாருடன் கூட்டணி சேர்ந்தாலும், யாரும் அவருக்க ஓட்டு போட மாட்டார்கள்”.. ராமதாஸ் பளார்!!
மாநாட்டிற்கு தடபுடல் ஏற்பாடு:
இந்த மாநாட்டிற்கு ஆயிரக்கணக்கானோர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதால் குடிநீர், கழிப்பிடம், மருத்துவ உதவி, வாகன நிறுத்தம் ஆகிய அனைத்து அடிப்படை வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இருசக்கர வாகனங்கள், கார்கள் மற்றும் வேன்கள் நிறுத்துவதற்காக தனித்தனியாக பெரிய நிறுத்துமிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. திரும்பும் திசையெல்லாம் தேமுதிக தோரணங்கள் கட்டி அலங்கரிக்கப்பட்டுள்ளதால், அப்பகுதியே விழாக்கோலம் ஆட்கொண்டு உள்ளது.
மாலை 6 மணிக்கு தொடங்கும் மாநாடு:
தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் இன்று பிற்பகல் 2.30 மணிக்கு மாநாட்டு திடலுக்கு வருகை தருகிறார். அதன்பின், கட்சி கொடி ஏற்றுதல், கலாசார நிகழ்ச்சிகள், பரதநாட்டியம், பாடல்கள், நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள், பட்டிமன்றம் என மாலை வரை பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தொடர்ந்து, மாலை 6 மணிக்கு மாநாடு தொடங்குகிறது, அதற்கு பிரேமலதா விஜயகாந்த் தலைமை ஏற்று உரையாற்றுகிறார்.
வெளியாகும் முக்கிய அறிவிப்பு:
அப்போது, அவர் சட்டமன்ற தேர்தலில் யாருடன் கூட்டணி என்பது உள்ளிட்ட பல்வேறு முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அக்கட்சியின் மூத்த நிர்வாகிகளும், இன்று நடைபெறும் மாநாட்டில் பிரேமலதா விஜயகாந்த் சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு பல முக்கிய அறிவிப்புகளை வெளியிடுவதாக தெரிவித்திருந்தனர்.
மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!
தேமுதிக யாருடன் கூட்டணி?
குறிப்பாக, கடந்த 2 மாதங்களாக பிரேமலதாவும் அனைத்து செய்தியாளர்கள் கூட்டத்திலும், கூட்டணி குறித்த கேள்விக்கு ஒரே பதிலாக ஜனவரி 9ம் தேதி மாநாட்டில் அறிவிப்போம் என்று கூறிவந்தார். இதன் காரணமாக இன்றைய மாநாடு மீது பெரும் அரசியல் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. ஏனெனில், அவர் மீண்டும் அதிமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவெடுக்கிறாரா? அல்லது திமுக பக்கம் செல்கிறாரா? இல்லை, இம்முறை புதிதாக களம் காணும் விஜய்யின் தவெகவுடன் கூட்டணி அமைக்க உள்ளாரா போன்ற எதிர்பார்ப்புகள் நிலவுகிறன்றன.