தீபாவளி, பொங்கல் ஆஃபர் போல்.. ஆஃபர் அறிவித்து காத்திருக்கிறார் விஜய்.. திருமாவளவன் விமர்சனம்!
விஜய் அரசியல் சக்தியாக உருவாகி இருப்பதாக காங்கிரஸை சேர்ந்த பரிவீன் சக்கரவர்த்தி சொல்வதால் திமுக கூட்டணிக்குள் எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் ஒரு கூட்டணி என்ற வடிவத்தை முழுமையாக எட்டியுள்ளது. அதிமுக - பாஜக கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்த்தாலும் திமுக வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றார்.
திருவள்ளூர், ஜனவரி 09: தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல் ஆட்சியில் பங்கு என்று ஆஃபர் அறிவித்து கூட்டணிக்காக விஜய் காத்திருப்பதாக விசிக தலைவர் திருமாவளவன் விமர்ச்சித்துள்ளார். தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அரசியல் கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தை தொடங்கியோடு, தங்களது கூட்டணியை உறுதி செய்வது, வேட்பாளரை இறுதி செய்வது என மும்மூரமாக இயங்கி வருகின்றனர். கண்டிப்பாக இம்மாத இறுதிக்குள் பெரும்பாலான கட்சிகள் தங்களது கூட்டணியை உறுதி செய்துவிடும். ஏற்கெனவே, முதல் ஆளாக அதிமுக, பாஜக, பாமக கூட்டணியை அறிவித்துள்ளன. தொடர்ந்து, அவர்கள் டிடிவி தினரனுக்கும் அழைப்பு விடுத்து வருகின்றனர். இன்று தேமுதிக தனது கூட்டணி முடிவை அறிவிக்க உள்ளது. இப்படி, தமிழக அரசியல் களம் பரபரப்பாக காணப்படுகிறது.
மேலும் படிக்க: விஜய்க்கு ஆதரவு குரல் எழுப்பிய காங்., தலைவர்கள்.. ‘ஜனநாயகன்’ பட வழக்கில் இன்று தீர்ப்பு!!
அதிமுக கூட்டணியில் புதிதாக ஒரு கட்சி கூட இணையவில்லை:
இந்தநிலையில், திருவள்ளூரில் செய்தியாளர்களை சந்தித்த விசிக தலைவர் திருமாவளவன், திமுக கூட்டணியை எதிர்ப்பவர்கள் இன்னும் சிதறியே உள்ளனர் என்றார். பாமக ஏற்கனவே தேசிய ஜனநாயக கூட்டணியில்தான் இருந்தது. பாமகவுக்கு உள்ளேயே இன்னும் உட்கட்சி முரண் தீர்ந்த பாடில்லை. ஆனால், அதிமுக கூட்டணியில் பாமக வந்துவிட்டதாக அதிமுக மார்தட்டிக் கொள்கிறது. அதிகவுடன் கூட்டணியில் இருந்தவர்கள், மீண்டும் கூட்டணியில் இணைவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். ஏற்கனவே கூட்டணியில் இருந்தவர்கள் தான் சேர்ந்துள்ளார்கள் தவிர, அதிமுக – பாஜக கூட்டணியில் புதிதாக எந்த ஒரு கட்சியும் சேரவில்லை.
ஆஃபர் கொடுத்து காத்திருக்கும் விஜய்:
தீபாவளி, பொங்கலுக்கு ஆஃபர் கொடுப்பதுபோல், சட்டமன்ற தேர்தலுக்காக ஆட்சியில் பங்கு தருகிறோம் என ஆஃபர் கொடுக்கும் கட்சியாக விஜய் கட்சி உள்ளது. மிகப்பெரிய மக்கள் செல்வாக்கு உடைய நடிகர் விஜய் தனித்தே ஆட்சியை பிடிக்கும் என நம்பக்கூடியவர். ஆனால், அவர் தேர்தலுக்கு ஆஃபர் போட்டு காத்துக் கொண்டிருக்கிறார். அவரது இந்த ஆஃபர் திட்டம் வெற்றி பெறாது. அரசியலில் விஜய் ஒரு பால்வாடி தலைவர். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொண்டர்களிடமிருந்து அவர் அரசியலை கற்றுக்கொள்ள வேண்டும்” இவ்வாறு விமர்சனம் செய்தார்.
மேலும் படிக்க: அதிமுகவில் ஓபிஎஸ், சசிகலாவுக்கு நோ.. கூட்டணியில் டிடிவி? மறுக்காத இபிஎஸ்!!
திமுக கூட்டணி பலமான கூட்டணி:
அதேபோல், விஜய் அரசியல் சக்தியாக உருவாகி இருப்பதாக காங்கிரஸை சேர்ந்த பரிவீன் சக்கரவர்த்தி சொல்வதால் திமுக கூட்டணிக்குள் எந்த பாதிப்பும் ஏற்படாது. திமுக மதசார்பற்ற முற்போக்கு கூட்டணி தான் ஒரு கூட்டணி என்ற வடிவத்தை முழுமையாக எட்டியுள்ளது. அதிமுக – பாஜக கூட்டணியில் எத்தனை கட்சிகள் சேர்த்தாலும் திமுகவின் வெற்றியை யாராலும் தடுக்க முடியாது என்றும் அவர் நம்பிக்கை கூறினார்.