திருச்செந்தூர் போறீங்களா? நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல தடை – மீறினால் பறிமுதல்
புகழ்பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியா சுவாமி திருக்கோவிலில் ஜூலை 1, 2026 நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் படி பக்தர்கள் கடுமையான சோதனைகளுக்கு பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி, ஜூன் 30 : புகழ்பெற்ற முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூர் சுப்பிரமணியா சுவாமி திருக்கோவிலில் ஜூலை 1, 2026 நாளை முதல் செல்போன் கொண்டு செல்ல கடுமையான தடை விதிக்கப்பட்டிருக்கிறது. அதன் படி பக்தர்கள் கடுமையான சோதனைகளுக்கு பிறகே கோவிலுக்குள் செல்ல அனுமதிக்கப்படுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் எடுத்து சென்றால் உடனடியாக பறிமுதல் செய்யப்படும் எனவும் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது. பக்தர்களின் வசதிக்காக பாதுகாப்பு வைப்பகங்களும் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கின்றன.
சென்னை உயர் நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு
இது தொடர்பாகசென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை, கோயில்களின் புனிதத்தன்மையைப் பாதுகாக்கவும், மூலவர் மற்றும் உற்சவர் சிலைகளை அனுமதியின்றி படம் பிடிப்பதைத் தடுக்கவும் உத்தரவிட்டிருந்தது. இதனையடுத்து வழிபாட்டுத் தலங்களில் பக்தர்களின் கவனம் சிதறாமல் பாதுகாக்கவும் விஐபி முதல் சாதாரண பக்தர்கள் வரை அனைவரும் அமைதியான முறையில் கடவுளை வழிபடவும் இந்த நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டிருக்கிறது. அதன்படி, திருச்செந்தூர் கோயில் நிர்வாகம் இந்தத் தடையை ஜூலை 1, 2026 நாளை முதல் தீவிரமாக அமல்படுத்த முடிவு செய்து அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதையும் படிக்க : அரியலூர் – புதுக்கோட்டையில் லஞ்ச ஒழிப்பு சோதனை.. கட்டுக்கட்டாக சிக்கிய கணக்கில் வராத பணம்.. விசாரணை வளையத்தில் சார்-பதிவாளர்!




இதன் ஒரு பகுதியாக ஜூலை 1, 2026 நாளை முதல் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் தீவிர கண்காணிப்பு மற்றும் சோதனைக்கு பிறகே அனுமதிக்கப்படுவார்கள். கட்டணத் தரிசனம், விஐபி வரிசை, கட்டணமில்லா தரிசனம், மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வரிசை என அனைத்து நுழைவுப் பாதைகளிலும் பாதுகாப்புப் பணியாளர்கள் மூலம் மெட்டல் டிடெக்டர் சோதனைகள் நடத்தப்படும்.
சோதனையை மீறி யாராவது செல்போன்களை மறைத்து எடுத்துச் சென்றால், பாதுகாப்பு விதிகளின்படி அந்த செல்போன் உடனடியாக கோயில் நிர்வாகத்தால் பறிமுதல் செய்யப்படும். இந்த விதிகள் பக்தர்களுக்கு மட்டுமின்றி, கோவில் ஊழியர்கள், அர்ச்சகர்கள் ஆகியோருக்கும் முழுமையாகப் பொருந்தும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
பக்தர்களின் வசதிக்காகப் பாதுகாப்பு வைப்பகங்கள்
பக்தர்கள் தங்களின் செல்போன்களைப் பாதுகாப்பாக வைப்பதற்காகக் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு வைப்பகங்கள் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக நாழிக்கிணறு, பிரதான கோபுரம் மற்றும் முக்கிய நுழைவு வாயில்கள் உள்ளிட்ட பல இடங்களில் பாதுகாப்பான செல்போன் லாக்கர் கவுண்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன.
இதையும் படிக்க : தமிழகத்தில் மழை தொடரும்… ஜூலை 3 முதல் சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை!
இந்த கவுண்டர்களில் பக்தர்கள் தங்களின் கைபேசிகளை அங்கே ஒப்படைத்துவிட்டு, உரிய கட்டணம் செலுத்தி அதற்கான ரசீது பெற்றுக் கொள்ளலாம். பின்னர் தரிசனம் முடிந்து திரும்பும்போது டோக்கனைச் சமர்ப்பித்து போன்களை மீளப் பெற்றுக் கொள்ளலாம். தரிசன வரிசைகளில் தேவையற்ற தாமதங்கள் மற்றும் கூட்ட நெரிசலைத் தவிர்க்கும் பொருட்டு, பக்தர்கள் தங்களின் செல்போன்களை தாங்கள் தங்கியிருக்கும் விடுதிகளிலேயே அல்லது தங்களது சொந்த வாகனங்களிலேயே பாதுகாப்பாக வைத்துவிட்டு கோயிலுக்கு வருமாறு நிர்வாகத் தரப்பில் அன்புடன் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது.