7 மாவட்டங்களில் செஞ்சுரி அடித்த வெயில்.. 2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை.. வானிலை ரிப்போர்ட் இதோ..
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூன் 30, 2026: தமிழகத்தில் ஒரு சில பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வந்தாலும், பல்வேறு மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகி வருகிறது. அந்த வகையில், கடந்த 24 மணி நேரத்தில் கடலூரில் அதிகபட்சமாக 39 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. அதனைத் தொடர்ந்து வேலூரில் 38.9 டிகிரி செல்சியஸ், திருத்தணியில் 38.1 டிகிரி செல்சியஸ், நாகப்பட்டினத்தில் 38 டிகிரி செல்சியஸ், திருச்சியில் 37.7 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது.
100 டிகிரி கடந்த வெப்பநிலை:
சென்னையைப் பொறுத்தவரை, மீனம்பாக்கத்தில் 38 டிகிரி செல்சியஸ் மற்றும் நுங்கம்பாக்கத்தில் 37.9 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் மொத்தம் 7 மாவட்டங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை கடந்த வெப்பநிலை பதிவாகியுள்ளது. வரவிருக்கும் நாட்களிலும் வெப்பநிலையில் பெரிய அளவில் மாற்றம் இருக்காது; இயல்பை ஒட்டியே நீடிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
2 மாவட்டங்களுக்கு மஞ்சள் அலர்ட் எச்சரிக்கை:
இதற்கிடையில், தரையிலிருந்து சுமார் 0.9 கிலோமீட்டர் உயரம் வரை வட கடலோர தமிழகப் பகுதிகளில் இருந்து குமரிக்கடல் வரை வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதன் காரணமாக இன்று கோவை மற்றும் நீலகிரி மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. அதேசமயம், வட தமிழகத்தின் ஒரு சில இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: ஆவின் பாலில் இனி சலுகை கிடையாது.. லிட்டருக்கு ரூ.2 தள்ளுபடி திடீரென ரத்து.. வெளியான அதிர்ச்சி அறிவிப்பு!
நாளை மற்றும் நாளை மறுநாள் கோவை, திருப்பூர், நீலகிரி, திண்டுக்கல், தேனி மற்றும் சேலம் மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும், ஏனைய தமிழகப் பகுதிகளில் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜூலை 3-ஆம் தேதி, கோவை, நீலகிரி மற்றும் தேனி மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மதுரை, திண்டுக்கல் மற்றும் வட தமிழகத்தின் ஒரு சில மாவட்டங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மழைக்கு வாய்ப்பா?
ஜூலை 5-ஆம் தேதி வரை தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் லேசான முதல் மிதமான மழையும், கோவை, நீலகிரி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.
சென்னை மற்றும் புறநகர் பகுதிகளைப் பொறுத்தவரை, பகல் நேரங்களில் வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படலாம். மாலை அல்லது இரவு நேரங்களில் நகரின் ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.