சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி.. எதிர்க்கட்சிகள் மீது அமைச்சர் ரமேஷ் குற்றச்சாட்டு!
Minister Ramesh Criticized Opposition Parties : தமிழக சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்றும் முயற்சியில் எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் ஈடுபட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டி உள்ளார். அவர் கூறியவற்றை இந்தப் பதிவில் பார்க்கலாம் .
தமிழக சட்டப்பேரவையை சண்டைக்களமாக மாற்றுவதற்கு எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்கள் முயற்சி செய்து வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் குற்றம் சாட்டியுள்ளார். இது தொடர்பாக திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களிடம் மேலும் கூறியதாவது: தமிழக சட்டப்பேரவையில் சட்டமன்ற உறுப்பினர் கே. என். நேரு ரேஷன் அரிசி தான் சாப்பிடுகிறேன் என்று கூறுவது மகிழ்ச்சியாக இருந்தாலும், தமிழகத்தில் பல்வேறு இடங்களில் பொதுமக்கள் ரேஷன் அரிசியை பயன்படுத்த முடியாத நிலையில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டும் இருந்து வருகிறது. அவற்றையெல்லாம் சரி செய்யப்பட்டு தரமான ரேஷன் பொருட்கள் வழங்க முதல் அமைச்சர் ஜோசப் விஜய் நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். திராவிட முன்னேற்றக் கழகத்தினர் பக்கம் கேமரா திருப்பட்டால் எப்படி ரூல்ஸ் போட முடியும் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும்.
தகாத வார்த்தையில் பேசும் முன்னாள் அமைச்சர்கள்
முதல் முறை சட்டப்பேரவைக்கு வந்த எம்எல்ஏக்கள் நாங்கள் மாண்புடன் கருத்துக்களை முன்வைத்து வருகிறோம். மக்கள் பிரச்சினைகள் தொடர்பாகவும் கருத்துக்களை முன் வைக்கிறோம். இதே போல, எதிர்க்கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களுக்கும் பதில் தெரிவித்து வருகிறோம். ஆனால், சட்டப்பேரவையில் சிலர் எழுந்து நின்று கூச்சல் போடுவதும், வரிக்கு வரி கூச்சல் போடுவதும், கத்துவதும் ஓடுவதும் மற்றும் அமைச்சர்கள் பேசும்போது முன்னாள் அமைச்சர்கள் பின் வரிசையில் அமர்ந்து கொண்டு தகாத வார்த்தைகளில் பேசுவதும் என ஏற்றுக்கொள்ள முடியாத நிலை உள்ளது.
மேலும் படிக்க: செங்கல்பட்டு இளைஞர் கொடூர கொலை.. தவெகவில் இருந்து தந்தை- மகன் நீக்கம்!




சட்டப்பேரவையை சண்டை களமாக மாற்ற முயற்சி
இவர்கள் சட்டப்பேரவையை சண்டை போடும் இடமாக மாற்ற செயல்பட்டு வருகின்றனர். எனவே, அவர்களுக்கு மாண்பு இருக்கிறதா என்று முதலில் தெரிய வேண்டும். சட்டமன்றத்தில் எப்படியாவது மோதல் நடக்க வேண்டும் என்று எதிர்க் கட்சிகள் முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர். தமிழக வெற்றிக் கழகத்தை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் ஏதேனும் தவறான வார்த்தைகளை பயன்படுத்தவில்லை. ஜனநாயக முறைப்படி நடைபெறும் சட்டமன்ற கூட்டத் தொடரில் அனைவருக்கும் மான கேள்விக்கு பதில் அளிக்கப்பட்டு, சில வார்த்தைகள் இருந்தால் அதை நீக்குவது மரபாகும்.
ஜனநாயக முறைப்படி சட்டப் பேரவை நடக்க வேண்டும்
கடந்த திராவிட முன்னேற்ற கழக ஆட்சியில் ஜனநாயகத்திற்கு இடமில்லை என்பது அனைவருக்கும் தெரியும். அதனால் இந்த வார்த்தைகளை கேட்டிருக்க மாட்டார்கள். சட்டப்பேரவை தலைவர் ஜே. சி. டி. பிரபாகர் அவரது பணியை சிறப்பாக செய்து வருகிறார். ஜனநாயக முறைப்படி சட்டப்பேரவை நடைபெற வேண்டும் என்பதே உங்களது ஒரே நோக்கமாகும்.
மேலும் படிக்க: காங்கிரஸ் இல்லையெனில் தவெக கதை முடிந்திருக்கும்.. மாணிக்கம் தாகூர் ஆவேசம்!