சதுரங்க வேட்டை பட பாணியில் நில மோசடி.. போலி ஆவணத்தால் ரூ.4 கோடிக்கு விற்பனை.. கம்பி எண்ணும் மூவர்!
Ramanathapuram Land Forged 3 Arrested : ராமநாதபுரத்தில் போலி பவர் பத்திரம் மூலமாக ரூ. 4 கோடி மதிப்புடையதாக கூறப்படும் நிலத்தை விற்றவர் மற்றும் அந்த நிலத்தை வாங்கியவர்கள் என மொத்தம் 3 பேரை நிலத்தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்தனர்.
ராமநாதபுரம் மாவட்டம், வாணி கிராமத்தில் உசேனியா தெருவை சேர்ந்தவர் பக்ருதீன். இவரது மனைவி ஹாஜரா பானு. இவர்களுக்கு சொந்தமாக வாணி கிராமத்தில் ஒரு நிலம் உள்ளது. இந்த நிலத்தின் மதிப்பு ரூ.4 கோடி என கூறப்படுகிறது. இந்த நிலையில், ராமநாதபுரம், வெளிப்பட்டினம், தர்ப்பசயனம் சாலை பகுதியை சேர்ந்த ஜாபர் அலி ( 58 வயது) என்பவர் போலியாக பவர் பத்திரம் தயார் செய்ததாக கூறப்படுகிறது. மேலும், அந்த பத்திரத்தின் மூலம் பக்ருதீனின் நிலத்தின் ஒரு பகுதியை ராமேஸ்வரம், பேய்க்கரும்பு பகுதியை சேர்ந்த கோபாலகிருஷ்ணன் என்பவரின் மகன்களான சந்திரகுமார் ( 47 வயது) மற்றும் செந்தில்குமார் ( 49 வயது) ஆகியோருக்கு தனித்தனியாக விற்பனை செய்ததாக கூறப்படுகிறது. அதன்படி, தான் வாங்கிய நிலத்துக்கு செந்தில்குமார் வேலி அமைத்துள்ளார்.
பெண்ணின் நிலைத்தில் வேலி அமைத்த இருவர்
இந்த நிலையில், ஹாஜரா பானு தற்செயலாக தனது நிலத்தின் வழியாக சென்றுள்ளார். அப்போது, அந்த நிலத்தின் ஒரு பகுதியில் வேலி அமைக்கப்பட்டு இருப்பதை பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்தார். இது தொடர்பாக அக்கம் பக்கத்தில் விசாரித்த போது இந்த இடத்தை பேய் கரும்பை சேர்ந்த செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் வாங்கியதாக தெரிவித்துள்ளனர். இதை கேட்டு மேலும் அதிர்ச்சி அடைந்த பானு சம்பந்தப்பட்ட நபர்களை தொடர்பு கொண்டு பேசியுள்ளார்.
மேலும் படிக்க: கம்யூனிஸ்ட் கட்சிக்கு எதிரான சுற்றறிக்கை: கல்வி இணை இயக்குனர்- வட்டாட்சியருக்கு நோட்டீஸ்!




நிலத்தடுப்புப் பிரிவு போலீசாரிடம் புகார்
அவர்கள், ஜாபர் அலி என்பவரின் மூலமாக இந்த நிலத்தை பணம் கொடுத்து வாங்கியதாகவும், அதன் அடிப்படையில், அந்த நிலத்தில் வேலி அமைத்து இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இது தவிர வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என்று செந்தில்குமார் மற்றும் அவரது சகோதரர் ஆகியோர் தெரிவித்துள்ளனர். பின்னர், இது தொடர்பாக ஜாபர் அலியிடம், பக்ருதீன் மற்றும் அவரது மனைவி ஹாஜரா பானு தட்டி கேட்டுள்ளனர். இதற்கு, அவர் முறையான பதில் அளிக்கவில்லை என்று கூறப்படுகிறது. இதனால், அவர்களுக்குள் கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டதாக தெரிகிறது.
நிலத்தை விற்றவர் உள்பட மூவர் கைது
பின்னர், இந்த சம்பவம் தொடர்பாக பக்ருதீன் மற்றும் அவரது மனைவி ஹாஜரா பானு ஆகியோர் ராமநாதபுரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சந்தீஷிடம் புகார் அளித்தார். அந்த புகாரின் அடிப்படையில், ராமநாதபுரம் நில மோசடி தடுப்பு பிரிவு காவல் ஆய்வாளர் பொன் தேவி வழக்கு பதிவு செய்து சந்திரகுமார், ஜாபர் அலி மற்றும் செந்தில்குமார் ஆகிய 3 பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: அதிவேகமாக வந்த லாரி மோதல்.. சாலையில் இழுத்து செல்லப்பட்ட கார்.. அடுத்தடுத்து பலியான 2 இளைஞர்கள்.. கிருஷ்ணகிரியில் சோகம்!