எரிபொருள் விலை உயர்வு.. மத்திய அரசின் நீண்ட கால திட்டம் வேண்டும்.. பெ.சண்முகம் வலியுறுத்தல்!
Marxist Secretary Shanmugam : இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் எரிவாயு விலை உயர்வை கட்டுப்படுத்துவதற்காக நீண்ட கால திட்டத்தை மத்திய அரசு அறிவிக்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் தெரிவித்தார் .
மத்திய கிழக்கு நாடுகளில் ஏற்பட்டுள்ள போர் நெருக்கடிகள் காரணமாக உலகின் பல்வேறு பகுதிகளில் சமையல் எரிவாயு வினியோகம் பெருமளவு பாதிப்பை எதிர்கொண்டுள்ளது. இதன் தாக்கம் இந்தியாவிலும் எதிரொலித்துள்ளது. இதன் காரணமாகவே, வணிக சிலிண்டர்களின் விலை கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன், வீட்டு உபயோக சிலிண்டர்கள் முன்பதிவு செய்யும் நாட்களி சுமார் 40- ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த நிலையில், வணிக சிலிண்டர் விலை ஏற்றத்தை கண்டித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் பெ. சண்முகம் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு மற்றும் வேலையின்மை, வருமான பற்றாக்குறை ஆகியவற்றால் மக்கள் பெரும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகின்றனர். இந்த நிலையில், வணிக பயன்பாட்டுக்கான எரிவாயு உருளைகளின் விலை ரூ. ஆயிரமும், 5 கிலோ சிலிண்டர் விலை ரூ.261 ஆக மத்திய அரசு மீண்டும் உயர்த்தி உள்ளது.
பொதுமக்களின் வாழ்வாதாரம் நேரடி பாதிப்பு
இது மக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு கடுமையான சுமை ஆகும். இதனால் தேநீர் கடைகள், உணவகங்கள், சாலையோர வியாபாரிகள் உள்ளிட்டோரின் வாழ்வாதாரம் நேரடியாக பாதிப்பை சந்தித்துள்ளது. மேலும், உணவு பொருள்களின் விலை உயர்ந்து பொதுமக்களின் அன்றாட வாழ்க்கையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுடன் புலம் பெயர் தொழிலாளர்களும் சொல்ல முடியாத துயரத்தை எதிர்கொண்டுள்ளனர். இவர்களின் பொது நலனை கருத்தில் கொள்ளாமல், நிறுவனங்களின் லாபத்தை முன்னிறுத்தும் பொருளாதாரக் கொள்கைகளை மத்திய அரசு தொடர்ந்து செயல்படுத்தி வருகிறது.
மேலும் படிக்க: சிலிண்டர் விலை உயர்வு.. மக்களின் துயரை எண்ணி தீர்வை காண வேண்டும் – முதல்வர் ஸ்டாலின்




மக்கள் மீது விலை உயர்வை சுமத்துவது சரியல்ல
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மிக குறைவாக இருந்த நிலையில், அதற்கு ஈடாக இந்தியாவில் விலைகள் குறைக்கப்படவில்லை. சர்வதேச சந்தையில் விலைகள் குறைந்த போதும், எண்ணெய் நிறுவனங்கள் அதிக அளவிலான லாபம் ஈட்டியதுடன் விலை உயர்ந்த போது மட்டும் அதனை மக்கள் தலையில் சுமத்துவது ஏற்புடையது அல்ல. எதிர்பாராத நெருக்கடிகளை எதிர்கொள்ளும் விதத்தில் அரசு போதுமான அளவுக்கு இயற்கை எரிவாயுவை கையிருப்பு வைப்பதற்கான ஏற்பாடுகள் எதையும் அரசு மேற்கொள்ளவில்லை.
எரிபொருள் விலயை கட்டுப்படுத்த நீண்ட கால திட்டம்
இதன் விளைவாகவே தற்போது நாட்டு மக்கள் அனைவர் மீதும் அரசு விலை உயர்வை சுமத்தி உள்ளது. இதன் காரணமாகவே அத்தியாவசிய பொருட்களையும் மக்கள் அதிக விலை கொடுத்து வாங்கும் கட்டாயத்தில் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, வணிக மற்றும் சிறிய அளவிலான எரிவாயு உருளைகள் விலை உயர்வை உடனடியாக திரும்பப் பெற வேண்டும். மேலும், பொதுமக்கள் மற்றும் சிறு வணிகர்களுக்கு மானியத்தை மீண்டும் வழங்க வேண்டும். எரிபொருள் விலைகளை கட்டுப்படுத்தும் நீண்டகால திட்டத்தை அரசு செயல்படுத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: “வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”.. முகவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்