“வாக்கு எண்ணிக்கையின் போது விழிப்புடன் பணியாற்ற வேண்டும்”.. முகவர்களுக்கு அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இருகட்டங்களைவிட வருகிற 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் 3ம் கட்டம்தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்குத்தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்துகொள்ளமுடிந்தது.
தேர்தல் முடிவு தமிழ்நாட்டின் தலைவிதியை தீர்மானிக்கப் போவதாகவும், பாமக – கூட்டணி கட்சிகளின் முகவர்கள் கவனமாகவும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். தமிழ்நாடு, கேரளம், மேற்குவங்காளம், அசாம் மற்றும் புதுச்சேரி ஆகிய 5 மாநில தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. இதையடுத்து இந்த 5 மாநிலங்களில் ஆட்சியை பிடிப்பது யார் என்பது குறித்து பல்வேறு நிறுவனங்கள் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளை வெளியிட்டன. இதில், பெரும்பான்மையான கருத்துக்கணிப்புகளில் தமிழகத்தில் மீண்டும் திமுக ஆட்சி அமைய வாய்ப்பு உள்ளதாகவும், அதிமுக கணிசமான இடங்களை பெறும் என்றும், தவெகவுக்கு இரட்டை இலக்க தொகுதிகள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளன. அதேநேரம், அதிமுக முன்னிலை பெறுவதாக சில கருத்து கணிப்புகளும், தவெக ஆட்சி அமையும் என்று ஒரு கருத்து கணிப்பும் கூறுகிறது. அதன்படி, இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் ஒரு குழப்பான முடிவையே தந்துள்ளன.
மேலும் படிக்க: திருச்சி அருகே தவெக அலுவலகம் மர்ம நபர்களால் தீவைத்து எரிப்பு.. நடந்தது என்ன?
கூட்டணி கட்சிகளிடையே பிணைப்பு:
இந்நிலையில், தமிழகத்தில் மே.4ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. இதையொட்டி, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியதாவது, தமிழ்நாடு சட்டசபை தேர்தலுக்காக மார்ச் மாத மத்தியில் தொடங்கி ஏப்ரல் 21ம் தேதி வரை நடைபெற்ற பரப்புரையின்போது தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களின் வெற்றிக்காக இரவு-பகல் பாராமலும், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமலும் உழைத்ததற்கும், ஏப்ரல் 23ம் தேதி நடைபெற்ற வாக்குப்பதிவின்போது தேனீக்களைப் போல பணியாற்றி அனைத்து வாக்காளர்களையும் வாக்குச்சாவடிகளுக்கு கொண்டு சென்று வாக்களிக்கச் செய்ததிலும் அதிமுக, பாமக பாஜக, அமமுக, தமாகா, ஐஜேகே, புதிய நீதிக்கட்சி, புரட்சிபாரதம் உள்ளிட்ட கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே காணப்பட்ட ஒரு பிணைப்பு வியப்பையும், மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியது.
சட்டப்பேரவைத் தேர்தலில் பரப்புரை, வாக்குப்பதிவு என இதுவரை நாம் கடந்து வந்த இருகட்டங்களைவிட வருகிற 4ம் தேதி நடைபெறவுள்ள வாக்கு எண்ணிக்கை எனும் 3ம் கட்டம்தான் மிகவும் முக்கியமாகும். இந்தத் தேர்தலில் வெற்றி நமக்குத்தான் என்பதை தேர்தல் பரப்புரையின் போதே நன்றாக அறிந்துகொள்ளமுடிந்தது.
விழிப்புடன் பணியாற்ற வேண்டும்:
வாக்குப்பதிவு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்கு முன்பாகவே அஞ்சல் வாக்குகள் எண்ணி முடிக்கப்படுவதை உறுதிசெய்ய வேண்டும். அதிகபட்சமாக கடைசி இருசுற்றுகளின் வாக்கு எண்ணிக்கை தொடங்குவதற்கு முன்பாக அஞ்சல் வாக்கு எண்ணிக்கையின் முடிவுகள் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதை பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் உறுதிசெய்ய வேண்டும். வாக்கு எண்ணிக்கையின் எந்த சூழலிலும் முகவர்கள் அவர்களின் கடமையிலிருந்து விலகக்கூடாது.
மேலும் படிக்க: “200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி உறுதி; இது கருத்துக்கணிப்பு அல்ல, கருத்துத் திணிப்பு”.. செல்வப்பெருந்தகை காட்டம்!
தமிழ்நாட்டின் தலைவிதியைத் தீர்மானிக்கப்போவது இந்த தேர்தலின் முடிவுதான். அதில் எந்த மோசடிகளுக்கும், முறைகேடுகளுக்கும் இடம் கொடுக்காமல் அதிமுக, பாமக மற்றும் கூட்டணி கட்சிகளின் முகவர்கள் கவனத்துடனும், விழிப்புடனும் பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.