அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா தொகுதிகளில் தேர்தலுக்கு தடை… தேர்தல் ஆணையத்தில் இன்பதுரை புகார் மனு!
Inbadurai Complaint To EC: அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்த சட்டமன்ற தொகுதிகளில் இடைத் தேர்தல் நடத்தக்கூடாது என்று அந்தக் கட்சியை சேர்ந்த இன்பதுரை எம்பி தலைமை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் அதிமுகவை சேர்ந்த எம்எல்ஏக்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ள நிலையில், அந்த தொகுதிகளில் இடைத்தேர்தல் நடத்தக்கூடாது என்று அந்த கட்சியின் எம்பி-யான இன்பதுரை தேர்தல் ஆணையத்தில் புகார் மனு அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: அதிமுகவின் எம்எல்ஏக்களை முதல்வர் விஜய் நேரில் சந்தித்து குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளார். இதனால், அதிமுக கொறடா பேச்சை மீறி 25 எம்எல்ஏக்கள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில், 21 பேர் தங்களது முடிவை எண்ணி வருந்தி அதிமுக பொதுச் செயலாளரிடம் மன்னிப்பு கடிதம் அளித்தனர். மீதமுள்ள 4 எம்எல்ஏக்கள் மன்னிப்பு கோராமல், அதிமுகவிலிருந்து விலகி தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இந்த முறையும், அவர்களது ராஜினாமா கடிதத்தை பேரவை தலைவர் ஏற்றதும் தவறாகும்.
தவெகவில் இணைந்த முன்னாள் அமைச்சர்கள்
இந்த நிலையில், மன்னிக்கப்பட்டவர்களில் சி. விஜயபாஸ்கர், எம். ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் அரசியலமைப்பின் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தமிழக வெற்றி கழகத்தில் இணைந்துள்ளனர். இதன் காரணமாக தமிழகத்தில் 6 தொகுதிகள் காலியாகி உள்ளன. இந்த தொகுதிகளுக்கு 6 மாதங்களுக்குள் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும் என்பது சட்ட விதியாகும். அப்படி நடத்தப்பட்டால் இந்த தொகுதிகளில் ஏற்கனவே ராஜினாமா செய்தவர்கள் போட்டியிடுவார்கள் இல்லையெனில் தவெக சார்பில் வேட்பாளர்கள் நிறுத்தப்படுவார்கள்.
மேலும் படிக்க: மக்களே நோட் பண்ணுங்க.. திருநெல்வேலி மாவட்டத்தில் மின் நிறுத்தம்.. எப்போது தெரியுமா?




அரசியலமைப்பு சட்டத்தின் 10- ஆவது அட்டவணை
அப்படி என்றால் அரசியல் அமைப்பு சட்டத்தின் 10- ஆவது அட்டவணை எதற்காக உள்ளது. அப்போது அது காலியான தொகுதி அல்ல. எம்எல்ஏக்கள் உயிரிழந்தாலோ, தகுதியின்மை உள்ளிட்ட காரணங்களால் தான் இடைத்தேர்தல் நடத்தப்பட வேண்டும். சர்ச்சைக்குரிய வகையில் காலியான தொகுதிகளில் தேர்தல் நடத்தப்படக்கூடாது என்பதுதான் அதிமுகவின் நிலைப்பாடாகும். இது தொடர்பாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கு வருகிற ஜூலை 13- ஆம் தேதி விசாரணைக்கு வருகிறது.
தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில்
சட்ட முறைப்படி காலியான தொகுதியாக இல்லையெனில் அங்கு தேர்தல் நடத்தக் கூடாது என்பது சட்டம் இருக்கிறது என கேள்வி எழும். அதற்கு உதாரணங்களும் உள்ளன. வழக்கு நிலுவையில் இருந்தால் தேர்தல் நடத்த மாட்டோம் என தேர்தல் ஆணையம் உச்சநீதிமன்றத்தில் கூறிய வழக்குகள் எல்லாம் உள்ளது. எங்கு சட்டம் இல்லையோ அங்கு நீதிமன்ற தீர்ப்புகள் பேசும். எனவே, நீதிமன்ற தீர்ப்புகளின் படி அங்கு தேர்தல் நடத்தக் கூடாது என புகாரில் குறிப்பிட்டுள்ளோம். மேலும், அரசியலமைப்புக்கு எதிராக விஜயபாஸ்கர்கள் செயல்பட்டதால் அவர்களுக்கு எதிராக, தனியாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: உருவானது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி – நாளை இந்த மாவட்டங்களில் கனமழை வாய்ப்பு