தவெகவில் அடுத்த அதிரடி.. மாவட்ட செயலாளர்களாக களமிறங்கும் 4 எம்எல்ஏக்கள்.. தலைமை அறிவிப்பு!
Tamizhaga Vettri Kazhagam: தமிழக வெற்றிக் கழகத்தில் 4 எம்எல்ஏக்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை கட்சியின் பொதுச் செயலாளர் என். ஆனந்த் வெளியிட்டுள்ளார். மா.செ.க்களாக யார் நியமிக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்த முழு விவரங்களை இந்தப் பதிவில் விரிவாக பார்க்கலாம்.
தமிழக அரசியல் களத்தில் புதிய வரவான தமிழக வெற்றி கழகம் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. இந்தக் கட்சியில் அமைப்பு ரீதியாக மொத்தம் 120 மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ள கட்சி ரீதியான மாவட்டங்களோடு சேர்த்து மேலும் 5 மாவட்டங்கள் உருவாக்கப்படுவதாக தமிழக வெற்றி கழகத்தின் தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, 4 எம்எல்ஏக்களை மாவட்ட செயலாளர்களாக நியமித்து கட்சி தலைமை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக, தமிழக வெற்றிக் கழக தலைமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை மேலும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில் கட்சி அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில், நிர்வாக வசதிகளுக்காக கட்சி மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழ்நாட்டுக்கு இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையத்தின் புதிய அறிவிப்பால் அதிர்ச்சி




தவெகவில் 4 எம்எல்ஏக்களுக்கு மா.செ. பதவி
அதன்படி, ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மாவட்டங்களோடு சேர்த்து மேலும் மாவட்டங்கள் பிரிக்கப்பட்டுள்ளன. இதில்,
- காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளராக உத்திரமேரூர் முனிரத்தினம் எம்எல்ஏ.
- திருநெல்வேலி தென்கிழக்கு மாவட்ட செயலாளராக நாங்குனேரி ரெட்டியார்பட்டி நாராயணன்.
- திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளராக பாளையங்கோட்டை மரியஜான் எம்எல்ஏ.
- திருநெல்வேலி வடக்கு மாவட்ட செயலாளராக நெல்லை ஆர். எஸ். முருகன் எம்எல்ஏ.
- திருவண்ணாமலை வடமேற்கு மாவட்ட செயலாளராக போளூர் அபிஷேக் எம்எல்ஏ. என 5 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு, அதற்கான மாவட்ட செயலாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக வெற்றிக் கழகத்தை மேலும் பலப்படுத்துவதற்காக
தமிழக வெற்றிக் கழகத்தை மேலும் பலப்படுத்தும் விதமாகவும், கட்சியில் புதிதாக இணைந்து எம்எல்ஏக்களாக வெற்றி பெற்றவர்கள் தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வேண்டும் என்று மாவட்ட செயலாளர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் கோரிக்கை வைத்திருந்தனர். இதில், விருப்பம் உள்ளவர்களுக்கு அவர்களது தொகுதியில் மாவட்ட செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கட்சி தலைமை தெரிவித்திருந்தது.
தமிழக வெற்றிக் கழகத்தில் கழகப் பணிகளை இன்னும் சிறப்பாக மேற்கொள்ளும் வகையில், கழக அமைப்பானது சட்டமன்ற தொகுதிகளை உள்ளடக்கிய மாவட்டங்களாக ஏற்கனவே பிரிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் நிர்வாக வசதிகளுக்காக கழக மாவட்டங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளன.
அதன்படி ஏற்கனவே…
— TVK Vijay (@TVKVijayHQ) July 2, 2026
மாவட்ட செயலர் பதவி கேட்கும் 20 பேர்
பாளையங்கோட்டை தொகுதி எம்எல்ஏ மரிய ஜான் என்பவர் தமிழக வெற்றி கழகத்தில் மாவட்ட இணை செயலாளர் பொறுப்பில் இருந்து வந்தார். தற்போது, அவருக்கு திருநெல்வேலி மத்திய மாவட்ட செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. தமிழக வெற்றி கழகத்தில் சுமார் 20 பேர் தங்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்க வேண்டும் என்று கட்சி தலைமையை தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அந்த வகையில், தற்போது 4 எம். எல். ஏ.க்களுக்கு மாவட்ட செயலாளர் பதவி வழங்கி கட்சி தலைமை உத்தரவிட்டுள்ளது.
மேலும் படிக்க: முதல்வர் விஜய்க்கு எதிராக போட்டியிட்டவர்… தவெகவில் ஐக்கியம்