சிங்கப்பெண் சிறப்பு அதிரடி படைக்கு புதிய கோட்டை.. சென்னையில் அமைகிறது பிரம்மாண்ட தலைமையகம்!
Singappen Special Task Force Headquarters: தமிழகத்தில் பெண்கள், பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றச்சம்பவங்களை தடுக்க செயல்பட்டு வரும் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு சென்னையில் தலைமை அலுவலகம் அமைக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இது தொடர்பான முழு விவரத்தை பார்க்கலாம்.
தமிழகத்தில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றம் சம்பவங்களை தடுக்கும் வகையில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்பட்டுள்ளது. இந்த படைக்கு பவானீஸ்வரி ஐபிஎஸ் ஐஜியாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இந்த சிங்கப்பெண் சிறப்பு படையை தமிழக முதல்வர் ஜோசப் விஜய் கடந்த ஜூன் 9- ஆம் தேதி முறைப்படி தொடங்கி வைத்தார். இந்த படை தொடங்கி வைக்கப்பட்டு சுமார் ஒரு மாதம் ஆகும் நிலையில் பல்வேறு இடங்களில் பெண்களுக்கு எதிராக நடைபெற்ற பாலியல் குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர்களை அதிரடியாக கைது செய்துள்ளது. மேலும், பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இவ்வாறு முக்கிய போலீஸ் படையாக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை செயல்பட்டு வரும் நிலையில், இந்த படைக்கு தலைமை அலுவலகம் அமைக்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
சிங்கப்பெண் அதிரடிப்படைக்கு தலைமை அலுவலகம்
அதன்படி, சென்னை மாவட்டத்தில் அசோக் நகர் பகுதியில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படைக்கு தலைமை அலுவலகம் தொடங்கப்பட உள்ளது. அத்துடன், தமிழகம் முழுவதும் செயல்படும் 70 சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படையில் புதிதாக 2,545 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர். இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று கூறப்படுகிறது. தமிழகத்தில் தற்போது பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் சம்பவங்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்யும் நடவடிக்கையில் இந்த படை தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
மேலும் படிக்க: சட்டசபையில் ஓட்டம் பிடித்தது யார்?.. “எங்க அப்பா பீரோக்குள்ள இல்ல!”.. கரூரில் திமுகவை வெளுத்து வாங்கிய முதல்வர் விஜய்!!




ஒரு மாதத்தில் 120 மீது சட்ட நடவடிக்கை
அதன்படி, தமிழகம் முழுவதும் பெண்களுக்கு எதிராக குற்றச்சம்பழங்களில் ஈடுபட்ட சுமார் 120 பேர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அத்துடன், காணாமல் போன 36 குழந்தைகள் மீட்கப்பட்டு அவர்களின் பெற்றோரிடம் பாதுகாப்பாக ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், பல்வேறு இடங்களில் நடைபெற இருந்த 16 குழந்தை திருமணங்கள் தக்க நேரத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த படைக்காக தனியாக அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு மையமும் பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. சிங்கப்பெண் படையை தொடர்பு கொள்வதற்காக 1091 என்ற அவசர உதவி எண் அறிவிக்கப்பட்டுள்ளது.
தினந்தோறும் 1,500-க்கும் அதிகமான அழைப்புகள்
இந்த எண்ணில் தினந்தோறும் சுமார் 1,500- க்கும் அதிகமான அழைப்புகள் வந்து கொண்டிருக்கின்றன. இதன் மூலம் சிங்கப்பண் சிறப்பு அதிரடிப்படை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று குற்றங்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதில், கைது செய்யப்படும் நபர்களை சம்பந்தப்பட்ட எல்லைக்குட்பட்ட காவல் நிலையங்களில் ஒப்படைத்து வருகின்றனர். தமிழக முதல்வர் விஜய் பொறுப்பேற்ற முதல் நாளில் இந்த படைக்கான கோப்பில் கையெழுத்து இட்டது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: “ஓடு ஓடு ஓடு.. வரான் பாரு வேட்டைக்காரன்!”.. பாட்டு பாடி திமுகவை வறுத்தெடுத்த முதல்வர் விஜய்!!