ஹெல்மெட் அணிந்து வந்தால் கட்டா குஸ்தி 2 டிக்கெட் – தஞ்சாவீரில் வாகன ஓட்டிகளுக்கு இன்ப அதிர்ச்சி
ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, தொண்டு நிறுவனம் ஒன்று விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள கட்டா குஸ்தி 2 படத்துக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது . அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
தஞ்சாவூர், ஜூலை 5 : ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு, தொண்டு நிறுவனம் ஒன்று விஷ்ணு விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியுள்ள கட்டா குஸ்தி 2 படத்துக்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளது. சாலை விபத்துகளினால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுக்கவும், விபத்தில்லா மாநிலமாக தமிழகத்தை மாற்றவும் தஞ்சாவூர் போக்குவரத்து காவல்துறையினர் மற்றும் தனியார் தொண்டு நிறுவனத்துடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
தஞ்சாவூரில் ஹெல்மெட் அணிந்து வந்தால் கட்டா குஸ்தி 2 டிக்கெட்
இந்த நிலையில் தஞ்சாவூரில் உள்ள தனியார் தொண்டு நிறுவனம் ஒன்று, ஹெல்மெட் அணிந்து வந்த வாகன ஓட்டிகளுக்கு கட்டா குஸ்தி 2 படத்தின் டிக்கெட்டுகளை வழங்கி இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளனர். அதாவது, விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா லட்சுமி நடிப்பில் வெளியாகி வெற்றிகரமாக திரையில் ஓடிக் கொண்டிருக்கும், ‘கட்டா குஸ்தி-2’ திரைப்படத்தை குடும்பத்தில் உள்ள 4 பேர் பார்ப்பதற்கான டிக்கெட்டுகளை இலவசமாக வழங்கினர். அதனை சற்றும் எதிர்பாராத வாகன ஓட்டிகள் மகிழ்ச்சியில் மூழ்கினர்.
இதையும் படிக்க : தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை




இதுகுறித்து தொண்டு நிறுவனத்தினர் கூறுகையில், “ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனம் ஓட்டுவதால் விபத்துகள் ஏற்படுகிறது. இதனால் உயிரிழப்புகளும், பொருளாதார இழப்பும் ஏற்படுகிறது. எனவே, தஞ்சாவூரில் போக்குவரத்து காவல்துறையினருடன் இணைந்து பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு, பொதுமக்களுக்கு அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறோம்.
அதேபோன்று, ‘தலைக்கவசம் உயிர்க்கவசம்’ என்பார்கள், எனவே ஹெல்மெட் அணிந்தால் பாதுகாப்பு அதிகம். கலகலப்பாய் குடும்பத்துடன் பாருங்க கட்டா குஸ்தி, என்று ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு குடும்பத்துடன் சென்று திரைப்படம் பார்க்க இலவசமாக டிக்கெட் கொடுத்து அவர்களை இன்ப அதிர்ச்சியில் ஆழ்த்தினோம். சுமார் 50 நபர்களுக்கு இந்த டிக்கெட் வழங்கப்பட்டது” என்று கூறினர்.
இதையும் படிக்க : கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!
அதேபோல, தஞ்சாவூரில் 100 சதவீதம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தி தன்னார்வ தொண்டு நிறுவனம் மூலம் வாகன ஓட்டிகளுக்கு ஐஸ்கிரீம், தக்காளி, வெங்காயம், மாம்பழம், சினிமா டிக்கெட், பட்டுப் புடவை, பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. இதேபோன்று, கடந்த வாரம் காரில் ‘சீட் பெல்ட்’ அணிந்து வந்தவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல், டீசல் மற்றும் ஐஸ்கிரீம் வழங்கி போக்குவரத்து காவல்துறையினர் நூதன முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.