தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு – வானிலை மையம் எச்சரிக்கை
தமிழகத்தில் ஜூலை 6, 2026 நாளை முதல் ஜூலை 11, 2026 வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கிட்டத்தட்ட அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பெய்யவிருப்பதால் மக்கள் அதற்கு தயாராக வேண்டியது அவசியம்.
சென்னை, ஜூலை 5 : தமிழகத்தில் ஜூலை 6, 2026 நாளை முதல் ஜூலை 11, 2026 வரை 5 நாட்களுக்கு ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: வடமேற்கு வங்கக்கடல் பகுதிகள் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளது. இது வடக்கு ஒடிசா கடலோரத்தில் சந்த்பாலி மற்றும் பாலசோர்க்கு இடையே திகாவிர்க்கு அருகில் ஜூலை 6, 2026 கரையை கடக்கக்கூடும்.
தமிழ்நாட்டில் அடுத்த ஒரு வாரத்துக்கு மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் ஜூலை 6, 2026 நாளையும், ஜலை 7, 2026 நாளை மறுதினமும் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் பலத்த காற்றுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிக்க : கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!




அதனைத் தொடர்ந்து ஜூலை 8, 2026 புதன்கிழமை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழையும், இதர தமிழகத்தில் லேசானது முதல் மிதமான மழையும் என்றும் ஜூலை 9 , 2026 முதல் ஜூலை 11, 2026 தேதி வரை 3 நாட்கள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் ஜூலை 6, 2026 நாளை வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 100 டிகிரி, குறைந்தபட்ச வெப்பநிலை 84 டிகிரி ஃபாரன்ஹீட் அளவை ஒட்டி இருக்கக்கூடும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே தமிழகத்தில் ஜூலை 5, 2026 இன்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிகபட்சமாக நீலகிரி மாவட்டம் அவலாஞ்சி, திருநெல்வேலி மாவட்டம் நாலுமுக்கில் தலா 8 செமீ, ஊத்தில் 6 செமீ, நீலகிரி மாவட்டம் மேல் பவானி, திருநெல்வேலி மாவட்டம் காக்காச்சி, கன்னியாகுமரி மாவட்டம் முள்ளங்கினாவிளை, கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் தலா 4 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிக்க : விவசாய பணிகளில் களமிறங்கிய வடமாநில தொழிலாளர்கள்.. சம்பளமும் குறைவாக வாங்குகின்றனராம்.. என்ன நடக்கிறது தஞ்சாவூரில்!
அடுத்த ஒரு வாரம் மழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் பள்ளி, கல்லூரி செல்பவர்கள், வேலைக்கு செல்பவர்கள் குடை, ரெயின்கோட் எடுத்து செல்வது என அதற்கேற்ப தயாராவது நல்லது. பெற்றோர்களும் குழந்தைகள் குறித்து அவர்களுக்கு வழங்கும் உணவுகளில் எச்சரிக்கையாக இருப்பது அவசியம்.