கர்நாடகாவில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி தொடக்கம்? பெரும் பரபரப்பு!
Mekedatu Dam Construction Survey Work: கர்நாடகா மாநிலத்தில் மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான அளவீட்டு பணிகளை அந்த மாநில அரசு தொடங்கி உள்ளதாக தமிழக விவசாயிகள் சங்கம் குற்றம் சாட்டி உள்ளது. மேலும், அந்த இடத்தில் ஆய்வு மேற்கொண்டு வீடியோ வெளியிட்டுள்ளது.
கர்நாடக மாநிலத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே அமைந்துள்ள மேகதாது என்ற பகுதியில் அணை கட்டுவதற்கு அந்த மாநில அரசு பல்வேறு முயற்சிகளை முன்னெடுத்து வருகிறது. இதில் அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிப்பு மற்றும் நில அளவீட்டு பணிகளை அரசு தீவிரப்படுத்தி உள்ளது. பெங்களூருவின் குடிநீர் தேவைக்காக ரூ.9,000 கோடியில் 67 டி எம் சி கொள்ளளவில் இந்த அணை கட்ட திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அணை கட்டப்பட்டால் தமிழகத்தின் டெல்டா மாவட்டங்களில் விவசாய பாசனத்துக்கு ஆபத்தானது என்று தமிழக அரசு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. தற்போது, இந்த திட்டமானது உச்ச நீதிமன்றத்தின் ஒப்புதலோடு காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் பரிசீலனையில் இருந்து வருகிறது. இந்த நிலையில், மேகதாது பகுதியில் அணை கட்டுவதற்கான அளவீட்டு பணிகளை கர்நாடக அரசு தொடங்கியதாக கூறப்படுகிறது.
மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணி
அதன்படி, மேகதாது பகுதியில் தமிழக விவசாயிகள் சங்கத்தை சேர்ந்த விவசாயிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, அணை கட்டுவதற்கான அளவீட்டு பணிகள் உள்ளிட்ட அடிப்படை பணிகள் அங்கு மேற்கொள்ளப்பட்டதை கண்டறிந்ததாக தெரிகிறது. இதில், மலையில் இருந்து ஆற்றுப் பகுதிக்கு செல்வதற்கு ஏதுவாக கம்பிகள் மற்றும் படிக்கட்டுகள் அமைக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பாக விவசாயிகள் வீடியோக்களை பதிவு செய்து வெளியிட்டுள்ளனர். இதனால், தமிழக அரசின் எதிர்ப்பை மீறி கர்நாடக மாநிலத்தில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணிகளை அந்த அரசு தொடங்கியுள்ளதாகவே தெரிகிறது. இந்த விவகாரம் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மேலும் படிக்க: சென்னையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் 50 பேருந்துகள் இயக்கம்!




விவசாயிகள் எதிர்ப்பை மீறி
இது தொடர்பாக தமிழ்நாடு விவசாயிகள் அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி. ஆர். பாண்டியன் கூறுகையில், மேகதாது பகுதியில் சுற்றுலா பயணிகள் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது அங்கு இறங்கி செல்வதற்கு ஏதுவாக படிக்கட்டுகள் மற்றும் கம்பிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது, விவசாயிகள் எதிர்ப்பை நியாயப்படுத்தும் வகையில் பொதுமக்களை அந்த பகுதியில் பார்வையிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அணை கட்டுவதற்கான கட்டுமான பணிகள்
அங்கு, அமைக்கப்பட்டுள்ள கம்பிகளை பார்க்கும்போது கர்நாடகா அரசு அணை கட்டுமான பணிகளை தொடங்குவதற்கான தீவிரமான பணிகளை தொடங்கி இருப்பதாக தெரிய வருகிறது. எனவே, மத்திய அரசு இதற்கு அனுமதி அளிக்க கூடாது. மேலும், சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை இதனை தடுத்து நிறுத்த முன் வர வேண்டும்.
காவிரி உபரி நீரை தடுக்கும் வகையில்
தமிழகத்தில் குறுவையை இழந்துள்ளோம். சம்பாவையும் இழக்கும் நிலையில் உள்ளோம். குறுவைக்கு தண்ணீர் கிடைக்காத நிலையில், எதிர்காலத்தில் சம்பாவுக்கும் தண்ணீர் கிடைக்குமா என்ற அச்சம் இருந்துள்ளது. இந்த நிலையில், உபரி நீரை மட்டும் தமிழகத்துக்கு திறந்து விடும் கர்நாடக அரசு அந்த உபரி நீரையும் தடுக்கும் வகையில் மேகதாது அணை கட்டுவதற்கான அளவீட்டு பணிகளை தொடங்கியுள்ளது என்று தெரிவித்தார்.
மேலும் படிக்க: விவசாயிகளுக்கு குட் நியூஸ்.. வெங்காயத்தின் கொள்முதல் விலையை உயர்த்திய மத்திய அரசு!