திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும்.. விசிக கூட்டத்தில் சிறப்பு தீர்மானம்!
VCK Meeting Special Resolution | விடுதலை சிறுத்தைகள் கட்சியின் செயற்குழு கூட்டம் சேலம் மாவட்டம் ஓமலூரில் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அந்த கட்சியின் தலைவர் திருமாவளவனை துணை முதலமைச்சராக்க வேண்டும் என சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அது குறித்து விரிவாக பார்க்கலாம்.
சேலம், ஜூலை 05 : சேலத்தில் (Salem) நடைபெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சி (VCK – Viduthalai Chiruthaigal Katchi) கூட்டத்தில், அக்கட்சியின் தலைவர் திருமாவளவனை துணை முதலமைச்சராக்குவதற்கு சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவையில், விடுதலை சிறுத்தைகள் கட்சி பங்கு பெற்றுள்ள நிலையில் தற்போது இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த நிலையில், விசிக கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் குறித்து விரிவாக பார்க்கலாம்.
தவெக அரசில் அங்கம் வகிக்கிம் விடுதலை சிறுத்தைகள்
2026 சட்டமன்ற தேர்தலில் திமுக, அதிமுக ஆகிய இரண்டு பெரும் கட்சிகளும் மிக குறைவான இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், தமிழக வெற்றிக் கழகம் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. தவெக ஆட்சி அமைக்க, கூடுதல் இடங்கள் தேவைப்பட்ட நிலையில் விசிக, காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் ஆதரவு கொடுத்தன. இதன் மூலம் தவெக தமிழகத்தில் ஆட்சி அமைத்தது.
இதையும் படிங்க : தவெகவில் இணைந்த திமுக எம்பி ஜெகத்ரட்சகனின் மகன் சந்தீப் ஆனந்த் – தமிழக அரசியலில் பரபரப்பு
தேர்தல் முடிவுக்கு பிறகு கட்சிகளின் கூட்டணியில் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டது. குறிப்பாக, திமுக கூட்டணியில் இருந்து விலகிய காங்கிரஸ், தவெகவுடன் கூட்டணி அமைத்தது. ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதை உண்மையாக்கும் வகையில் கூட்டணி கட்சிகளுக்கு முதலமைச்சர் விஜய் அமைச்சரவையில் இடம் அளித்தார். அந்த வகையில் விசிகவும் தமிழக அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளது.
திருமாவளவனை துணை முதலமைச்சராக்க தீர்மானம்
இந்த நிலையில், சேலம் மாவட்டம் ஓமலூரில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சிறப்பு செயற்குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் திருச்சி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் கட்சியின் தலைவர் திருமாவளவன் போட்டியிட்டு வெற்றி பெற்று, எளிய மக்களுக்கும் அதிகாரம் கிடைக்கும் வகையில் துணைமுதலமைச்சராக வேண்டும் என்று சிறப்பு தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இதையும் படிங்க : இனி சென்னை டு திருச்சி 3 மணிநேரத்தில் போகலாம் – ரூ.20,000 கோடி செலவில் பசுமைவழிச் சாலை பணிகளை தொடக்கம்
முன்னதாக திருச்சி கிழக்கு இடைத்தேர்தலில் திருமாவளவன் போட்டியிட உள்ளதாக தகவல் வெளியானது. ஆனால், அதற்கு பதில் அளித்த அவர் போட்டியிடவில்லை என முற்றுப்புள்ளி வைத்தார். இந்த நிலையில் தற்போது மீண்டும் திருமாவளவன் திருச்சி கிழக்கில் போட்டியிட்டு வெற்றி பெற்று துணை முதலமைச்சராக வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.