சென்னையில் இந்த வழித்தடத்தில் மின்சார ரயில்கள் ரத்து.. கூடுதல் 50 பேருந்துகள் இயக்கம்!
Electric Trains Cancelled Between Chennai Beach Station To Tambaram | சென்னையின் முக்கிய போக்குவரத்து அம்சமாக மின்சார ரயில்கள் உள்ளன. இந்த நிலையில், சென்னை கடற்கரை முதல் தாம்பர வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
சென்னை, ஜூலை 05 : சென்னையில் (Chennai), கடற்கரை – தாம்பரம் வழித்தடத்தில் மின்சார ரயில்கள் இன்று (ஜூலை 05, 2026) ரத்து செய்யப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 50 பேருந்துகள் இயக்கப்படுகிறது. பராமரிப்பு பணிகள் காரணமாக இன்றும், ஜூலை 12, 2026 அன்றும் ரயில்கள் ரத்து செய்யப்படும் நிலையில், இந்த இரண்டு நாட்களும் கூடுதலாக 50 பேருந்துகளை இயக்க திட்டமிட்டப்பட்டுள்ளது. இது குறித்து விரிவாக பார்க்கலாம்.
இந்த வழித்தடத்தில் மாலை 3.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து
இது தொடர்பாக சென்னை மாநகர போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது, சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே மின்சார ரயில் வழித்தடத்தில் இன்று (ஜூலை 05, 2026) மற்றும் ஜூலை 12, 2026 ஆகிய நாட்களில் ரயில் தண்டவாள பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே இரு மார்க்கமும் காலை 10.30 மணி முதல் மாலை 3.30 மணி வரை மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.
இதையும் படிங்க : முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ்? பரபரப்பு தகவல்
கூடுதலாக 50 பேருந்துகளை இயக்கும் மாநகர் போக்குவரத்து கழகம்
தெற்கு ரயில்வேயின் இந்த அறிவிப்பால் பொது போக்குவரத்து பாதிக்கப்படும் சூழல் உள்ளது. இந்த நிலையில் தான், ரயில்கள் ரத்து செய்யப்படும் இந்த இரண்டு நாட்களும் கூடுதலாக 50 பேருந்துகளை இயக்க மாநகர் போக்குவரத்து கழகம் திட்டமிட்டுள்ளது. அதாவது, இன்று (ஜுலை 05, 2026) மற்றும் ஜூலை 12, 2026 ஆகிய தேதிகளில் பயணிகள் போக்குவரத்து வசதிக்காக சென்னை கடற்கரை ரயில் நிலையம் முதல் தாம்பரம் வழித்தடத்தில் கூடுதலாக 50 பேருந்துகளை இயக்க உள்ளதாக கூறியுள்ளது.
இதையும் படிங்க : இவர் தான் என் குழந்தைக்கு அப்பா – சிறுமியின் பொய் குற்றச்சாட்டு – 2 ஆண்டுகள் போராடி வெளியே வந்த சேலம் இளைஞர்
போக்குவரத்தை சீராக வைத்திருக்க 50 கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது மட்டுமன்றி, முக்கிய பேருந்து நிலையங்களில் அலுவலர்களை நியமித்து பேருந்துகளின் இயக்கத்தை கண்காணிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் இதற்கு ஏற்ப தங்களது பயணங்களை திட்டமிடுவது சரியானதாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.



