இவர் தான் என் குழந்தைக்கு அப்பா – சிறுமியின் பொய் குற்றச்சாட்டு – 2 ஆண்டுகள் போராடி வெளியே வந்த சேலம் இளைஞர்
தனது கர்ப்பத்துக்கு இவர் தான் காரணம் என 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேட்டூர் மகளிர் போலீசார் கார்த்தி என்ற இளைஞரை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். இந்த வழக்கில் டிஎன்ஏ பரிசோதனை அடிப்படையில் கார்த்தியை நீதிமன்றம் விடுதலை செய்தது.
சேலம் மாவட்டம் மேச்சேரி அருகேயுள்ள எம்.காளிப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கார்த்தி. ஐடிஐ படித்துவிட்டுத் தன் எதிர்காலக் கனவுகளோடு உழைத்து வந்த இவருடைய வாழ்க்கை, கடந்த 2024ஆம் ஆண்டு தலைகீழாக மாறியது. 17 வயது சிறுமி ஒருவர் கொடுத்த புகாரின் அடிப்படையில், மேட்டூர் மகளிர் போலீசார் கார்த்தியை போக்சோ சட்டத்தின் கீழ் அதிரடியாகக் கைது செய்தனர். அந்த சிறுமி கருவுற்று இருப்பதாகவும் அதற்கு இவர்தான் காரணம் என்றும் புகார் கொடுத்திருந்தார். கார்த்தி போலீசாரிடம் தான் எந்தத் தவறும் செய்யவில்லை என்று எவ்வளவோ எடுத்துரைத்தும், அவருடைய வார்த்தைகள் செவிமடுக்கப்படவில்லை. அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
சிறைக்குச் சென்ற பலரும் எப்படியாவது ஜாமீனில் வெளியே வந்துவிட வேண்டும் என்றே துடிப்பார்கள். ஆனால், கார்த்தி முற்றிலும் வித்தியாசமான ஒரு முடிவை எடுத்தார். தன் மீது சுமத்தப்பட்டது அப்பட்டமான பொய் வழக்கு என்பதால், அவர் சார்பில் ஜாமீன் மனு தாக்கல் செய்ய யாருக்கும் அனுமதி தரவில்லை. “என் மீது பொய்யான வழக்கு பதிவு செய்துள்ளனர். கெட்ட பெயரோடு நான் ஜாமீனில் வெளியே வரமாட்டேன். நான் குற்றமற்றவன், நிரபராதி என்று இந்த நீதிமன்றம் மூலம் நிரூபித்த பின்னரே என் கால்கள் இந்தச் சிறையை விட்டு வெளியேறும்ய அதுவரை நான் உள்ளேயே இருக்கிறேன்!” என்று இரும்பு மனிதனாகச் சிறைக்குள் வைராக்கியத்துடன் காத்திருந்தார். நாட்கள் வாரங்களாகி, வாரங்கள் மாதங்களாகி இரண்டு ஆண்டுகள் ஓடிவிட்டன. கார்த்தி தன் சபதத்தில் இருந்து பின்வாங்கவே இல்லை.
திருப்புமுனையை ஏற்படுத்திய டிஎன்ஏ சோதனை
இந்த வழக்கு சேலம் போக்சோ நீதிமன்றத்தில் தொடர்ந்து நடைபெற்று வந்தது. இதற்கிடையில், பாதிக்கப்பட்டதாகக் கூறப்பட்ட அந்தச் சிறுமிக்குக் குழந்தை பிறந்தது. வழக்கின் உண்மைத்தன்மையைக் கண்டறிய, நீதிமன்ற உத்தரவின்படி சிறுமி, குழந்தை மற்றும் குற்றம் சாட்டப்பட்ட கார்த்தி ஆகிய மூன்று பேருக்கும் மரபணு (DNA) சோதனை நடத்தப்பட்டது.
அறிவியல் ஒருபோதும் பொய் சொல்லாது என்பதற்கு இணங்க, அந்த டிஎன்ஏ சோதனையின் முடிவுகள் வந்தன. சோதனையில், சிறுமிக்குப் பிறந்த குழந்தைக்குக் கார்த்தி தந்தை இல்லை என்பது 100 சதவிகிதம் உறுதியானது. அதாவது, கார்த்திக்கும் இந்த விவகாரத்திற்கும் எந்தவித சம்பந்தமும் இல்லை என்ற உண்மை வெட்டவெளிச்சமானது. அந்த சிறுமி வேறொரு நபரை காப்பாற்றுவதற்காக கார்த்தி மீது பழி போட்டது தெரிய வந்தது.
நீதிபதி வழங்கிய அதிரடி தீர்ப்பு
இந்த வழக்கு நேற்று மீண்டும் சேலம் போக்சோ நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. டிஎன்ஏ சோதனை அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதி மீனாட்சி, கார்த்தி மீதான குற்றம் நிரூபிக்கப்படாததால், அவரை அனைத்துக் குற்றச்சாட்டுகளிலிருந்தும் முழுமையாக விடுதலை செய்து அதிரடி உத்தரவிட்டார்.
விடுதலையான கார்த்தியின் உருக்கமான பேட்டி, நீதிமன்றத்தால் குற்றமற்றவர் என அறிவிக்கப்பட்டு, இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு சிறையிலிருந்து கம்பீரமாக வெளியே வந்த கார்த்தி கண்கலங்கியபடி பேசுகையில், “நான் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது என் மனசாட்சிக்குத் தெரியும். கெட்ட பெயரோடு ஊருக்குள் போய் தலைகுனிந்து நிற்பதை விட, நான் குற்றமற்றவன் என்பதை சட்டப்பூர்வமாக நிரூபித்துவிட்டுத்தான் மறுபடி என் மண்ணை மிதிப்பேன் என்று உறுதியாக இருந்தேன். அதனால்தான் ஜாமீன் கூடக் கேட்காமல் இரண்டு வருடம் சிறையிலேயே இருந்தேன். போலீசாரிடம் ஆரம்பத்திலேயே நான் கெஞ்சினேன், அவர்கள் கேட்கவில்லை. இன்று உண்மை ஜெயித்துவிட்டது, என் சபதத்தை முடித்துவிட்டு இப்போது நிம்மதியாக என் ஊருக்குச் செல்கிறேன்” என்றார்
சிந்திக்க வேண்டிய கேள்வி, அறிவியல் பூர்வமாக கார்த்தி நிரபராதி என்று நிரூபிக்கப்பட்டுவிட்டாலும், செய்யாத குற்றத்திற்காக ஒரு வாலிபர் தனது வாழ்வின் விலைமதிப்பற்ற இரண்டு ஆண்டுகளைச் சிறைக்குள் கழித்திருப்பதும், அவர் சந்தித்த மன உளைச்சலும் எவராலும் ஈடு செய்ய முடியாத ஒன்று. சட்டம் குற்றவாளிகளைத் தண்டிப்பதோடு மட்டுமில்லாமல், அவசர அவசரமாகப் போடப்படும் பொய் வழக்குகளில் இருந்து கார்த்தி போன்ற சாமானியர்களின் வாழ்வை ஆரம்பத்திலேயே பாதுகாக்க இன்னும் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.