முதல்வர் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிவிட்டார்.. அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கும் அந்த இருவர் யார்? வில்சன் எம்பி ஆவேசம்!
DMK MP Wilson Accused CM Vijay : தமிழக முதல் அமைச்சர் ஜோசப் விஜய் ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டதாகவும், அரசு உயர்மட்ட கூட்டத்தில் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவிடும் அந்த இரு நபர்கள் யார் என்பதை தெரிவிக்க வேண்டும் என்றார் வில்சன் எம்.பி.
தமிழகத்தின் முதல்வரான ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டம், ஆய்வு கூட்டங்கள் உள்ளிட்ட அரசு ஆலோசனை கூட்டங்களில் அவரின் அரசியல் ஆலோசகரான ஜான் ஆரோக்கியசாமி மற்றும் அவரது நண்பரான விஷ்ணு ரெட்டி ஆகியோர் பங்கேற்று வருவதாக அரசியல் கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர். இதனால், முதல்வர் ஜோசப் விஜய் பதவி பிரமாணம் செய்த போது எடுத்த ரகசிய காப்பு பிரமாணத்தை மீறி விட்டதாக திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாநிலங்களவை உறுப்பினரும், வழக்கறிஞருமான வில்சன் குற்றம் சாட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: தமிழக முதல்வர் சி. ஜோசப் விஜய் தலைமையில் நடைபெறும் அமைச்சரவை கூட்டங்கள், அரசு ஆலோசனை கூட்டங்கள் மற்றும் ஆய்வு கூட்டங்கள் உள்ளிட்டவற்றில் ஜான் ஆரோக்கியசாமி, விஷ்ணு ரெட்டி ஆகியோர் தொடர்ந்து பங்கேற்று வருகின்றனர். இது தொடர்பாக தீவிர கேள்விகள் எழுந்துள்ளன.
அரசில் என்ன அதிகாரப்பூர்வ பதவிகளை வகிக்கின்றனர்
ஆந்திர மாநிலத்தை சேர்ந்த ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் தமிழக முதல்வர் ஜோசப் விஜயின் நெருங்கிய உதவியாளர்கள் மற்றும் நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரியும். இருந்தாலும், இவர்கள் அரசில் என்ன அதிகாரப்பூர்வ பதவிகளை வகித்து வருகிறார்கள் என்ற விவரம் தெளிவாக தெரியவில்லை. இப்படி இருக்கும் சூழ்நிலையில் தலைமைச் செயலகத்தில் முதல் அமைச்சர் விஜய் அறைக்கு அருகிலேயே அவர்களுக்கு தனியாக அறைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.




மேலும் படிக்க: கல்யாண வீட்டில் ஸ்டாப்.. விருந்தில் பங்கேற்க சென்ற அரசு பேருந்து ஓட்டுநர்-நடத்துனர்.. பின்னாடியே வந்த ஆப்பு!
ரகசிய காப்பு பிரமாணத்தை மீறிய முதல்வர் விஜய்
ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகிய இருவரும் அரசு ஊழியர்கள் இல்லை என்றால், ரகசிய ஆவணங்கள் பரிமாறப்படும் மிக ரகசியமான கூட்டங்களில் அவர்கள் எதன் அடிப்படையில் பங்கேற்கிறார்கள். தமிழகத்தின் முதல்வராக ஜோசப் விஜய் பதவி ஏற்கும் போது, ரகசிய காப்பு பிரமாணம் எடுத்துக் கொண்டார். இத்தகைய நபர்களை அரசின் உயர்மட்ட ஆலோசனை கூட்டங்களில் ஈடுபடுத்துவது அரசியலமைப்பு நெறிமுறைகள், அலுவல் விதிகள் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் ஆகியவற்றை பின்பற்றுவது குறித்து தீவிர கவலைகளை எழுப்பி வருகிறது.
CM Vijay breaches his oath of secrecy!
Serious questions emerge concerning the presence of Thiru John Arockiasamy and Thiru Vishnu Reddy at Cabinet meetings, review sessions, and other high-level Government deliberations held by Hon. Chief Minister Thiru C. Joseph Vijay.… pic.twitter.com/B84ASttASQ
— P. Wilson -தமிழ்நாட்டை தலைகுனிய விட மாட்டேன் (@PWilsonDMK) June 27, 2026
ஜான் ஆரோக்கிய சாமி- விஷ்ணு ரெட்டி யார்
எனவே, ஜான் ஆரோக்கியசாமி மற்றும் விஷ்ணு ரெட்டி ஆகியோரின் அதிகாரப்பூர்வ பதவிகளை முதல் அமைச்சர் ஜோசப் விஜய் பகிரங்கமாக தெரிவிக்க வேண்டும். அது மட்டும் இன்றி எந்த அதிகாரத்தின் கீழ் அவர்கள் அமைச்சரவை கூட்டங்களில் பங்கேற்று அதிகாரிகளுக்கு உத்தரவு பிறப்பிக்கிறார்கள் என்பதை விளக்க வேண்டும் என்று வில்சன் எம். பி. தெரிவித்துள்ளார்.
மேலும் படிக்க: பெண் அமைச்சரின் நள்ளிரவு ரெய்டு.. “சீல்” உடைத்து இயங்கிய 2 ஆலைகள்.. கலகலத்துபோன உரிமையாளர்கள்!