AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..

காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு.. ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் திமுக ஆர்ப்பாட்டம் – மு.க ஸ்டாலின் அறிவிப்பு..
கோப்பு புகைப்படம்
Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 30 Jul 2026 13:29 PM IST

ஜூலை 30, 2026: விவசாயிகளின் கோரிக்கைகளை நிறைவேற்றத் தவறியதாக தமிழக வெற்றிக் கழக அரசை குற்றம்சாட்டி, வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி தஞ்சாவூரில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், நாட்டின் முதுகெலும்பாக விளங்கும் விவசாயிகளை வீதிகளில் போராடும் நிலைக்கு தள்ளிவிட்டு, தமிழக அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதாக குற்றம்சாட்டியுள்ளார்.

விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு:

தேர்தலுக்கு முன்பு, 5 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ள விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற பயிர்க்கடன்கள் முழுமையாக தள்ளுபடி செய்யப்படும் என்றும், 5 ஏக்கருக்கு மேல் நிலம் வைத்துள்ள விவசாயிகளின் பயிர்க்கடனில் 50 சதவீதம் தள்ளுபடி செய்யப்படும் என்றும் வாக்குறுதி அளிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆனால், ஆட்சிக்கு வந்த பிறகு முதலில் ரூ. 50 ஆயிரம் வரை மட்டுமே கடன் தள்ளுபடி அறிவிக்கப்பட்டதாகவும், விவசாயிகள் போராட்டம் நடத்தியதைத் தொடர்ந்து ரூ. 75 ஆயிரம் வரை உயர்த்தப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

மேகதாது அணை – அரசின் நடவடிக்கை என்ன?


மேகதாது அணை விவகாரத்தில் தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பிறகு, கர்நாடக அரசு மேகதாது அணைத் திட்டத்தை முன்னெடுப்பதில் தீவிரம் காட்டி வருவதாகவும், ஒன்றிய அரசின் பல்வேறு அமைச்சர்களை கர்நாடக முதல்வர் நேரில் சந்தித்து திட்டத்திற்கு ஒப்புதல் மற்றும் நிதியுதவி கோரியுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

அதேநேரத்தில், தமிழ்நாடு முதலமைச்சர் பிரதமருக்கு கடிதம் எழுதியதுடன் தனது கடமையை முடித்துக் கொண்டதாகவும், அதன்பிறகு இந்த விவகாரத்தில் மவுனம் காத்து வருவதாகவும் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.

மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் கர்நாடகா சென்று பேச்சுவார்த்தை நடத்தவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ள நிலையில், காவிரி நீர் ஒழுங்குமுறைக் குழு தமிழ்நாட்டுக்கு உரிய நீரை திறந்துவிட உத்தரவிட்டும், கர்நாடக அரசு அதனை ஏற்க மறுத்துள்ள விவகாரத்தில் தமிழக அரசின் நிலைப்பாடு குறித்து தெளிவு இல்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து கட்சி கூட்டம் கூட்ட வேண்டும்:

மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தீர்ப்பாயம் அமைக்க வேண்டும் என்று சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட நிலையில், கர்நாடக பயணம் அந்த கோரிக்கையை நீர்த்துப் போகச் செய்யுமா என்ற கேள்வியும் எழுப்பியுள்ளார்.

அனைத்துக் கட்சிக் கூட்டம் மற்றும் விவசாயச் சங்கங்களின் கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சிகளும், விவசாய அமைப்புகளும் கோரிக்கை விடுத்தும், தமிழக அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

மேலும் படிக்க: டாஸ்மாக் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி முன்ஜாமீன் மனு தள்ளுபடி.. எந்த நேரத்திலும் கைதாக வாய்ப்பு?

குறுவை சாகுபடி பாதிப்பு தொடர்பாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார். கடந்த ஆண்டு 6.5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி நடைபெற்ற நிலையில், இந்த ஆண்டு மேட்டூர் அணை திறக்கப்படாததால் வெறும் 1.5 லட்சம் ஏக்கரில் மட்டுமே சாகுபடி நடைபெற்று வருவதாகவும், இதனால் சுமார் ரூ. 2,500 கோடி இழப்பு ஏற்பட்டு 14 லட்சம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வேண்டும்:

பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ. 25 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும், பயிர்க் காப்பீட்டு பிரீமியத்தை அரசே செலுத்த வேண்டும், சம்பா சாகுபடிக்குத் தேவையான விதைகள், உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளை மானியத்தில் வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும் படிக்க: சென்னையில் 2ஆம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள்.. விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு முதல்வர் விஜய் உத்தரவு..

இந்தக் கோரிக்கைகளை வலியுறுத்தியும், காவிரி உரிமையை நிலைநாட்டுவதில் தமிழக வெற்றிக் கழக அரசின் செயல்பாடுகளை கண்டித்தும், வரும் ஆகஸ்ட் 3-ஆம் தேதி காலை 10 மணிக்கு தஞ்சாவூர் பனகல் கட்டடம் அருகே, திமுக இளைஞரணி செயலாளரும் சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவருமான உதயநிதி ஸ்டாலின் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆகஸ்ட் 3ஆம் தேதி தஞ்சையில் போராட்டம்:

இந்தப் போராட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த திமுக நிர்வாகிகள், சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், விவசாயச் சங்கங்கள் மற்றும் ஒரே கருத்துடைய அரசியல் கட்சிகள் திரளாக பங்கேற்று விவசாயிகளுக்காக குரல் கொடுக்க வேண்டும் என்று மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார்.

மேலும், இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் கோரிக்கைகளில் தமிழக அரசின் கவனத்தை ஈர்க்கும் முதல்கட்ட நடவடிக்கை மட்டுமே என்றும், அரசின் தற்போதைய அணுகுமுறை தொடர்ந்தால் அதைவிட பெரிய அளவிலான போராட்டங்களை திமுக முன்னெடுக்கும் என்றும் தனது அறிக்கையில் மு.க. ஸ்டாலின் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Follow Us