இந்திய எல்லைக்குள் நுழைந்த இலங்கை மீனவர்கள்… இருவரை கைது செய்த கடலோர காவல் படை!
Sri Lankan Fishermen Arrest : இந்திய எல்லை பகுதியில் மீன் பிடித்ததாக கூறி இலங்கையைச் சேர்ந்த 2 மீனவர்களை இந்திய கடலோற காவல் படை போலீசார் கைது செய்தனர். அவர்கள் பயன்படுத்திய படகு, மீன்பிடி உபகரங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
தமிழகத்தில் ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதி வழியாக அண்டை நாடான இலங்கைக்கு பீடி இலை, மஞ்சள் பொருட்கள், தங்கம், வெள்ளி மற்றும் மருந்து பொருட்கள் உள்ளிட்ட ஏராளமான பொருள்கள் சட்ட விரோதமாக கடத்தப்பட்டு வருகிறது. இதே போல, இலங்கை கடல் பகுதியில் இருந்து ராமநாதபுரம் மாவட்டம் வழியாக பல்வேறு பொருட்கள் சட்டவிரோதமாக அவ்வப்போது கடத்தப்பட்டு வருகிறது. இதனை தடுக்கும் விதமாக இந்திய கடலோர காவல் படை போலீசார் கடல் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபடுவது வழக்கமாகும். அந்த வகையில், இன்று வியாழக்கிழமை ( மார்ச் 5) ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் கடலோர காவல் படை போலீஸார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, அரியமான் கடற்கரை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் ஒரு படகு நின்று கொண்டிருந்தது. இதை பார்த்த இந்திய கடலோர காவல் படை போலீசார் அந்தப் படகின் அருகே சென்றனர்.
இலங்கை மீனவர்கள் இருவரை கைது செய்த போலீசார்
அப்போது, அந்தப் படகில் 2 மீனவர்கள் மீன்பிடித்துக் கொண்டிருந்தனர். அவர்களிடம், கடலோர காவல் படை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதில், அந்த 2 மீனவர்களும் இலங்கை மாநிலம், யாழ்ப்பாணத்தை சேர்ந்த அமல்ராஜ் மற்றும் ராஜ்குமார் என்பது தெரியவந்தது. இதை தொடர்ந்து, எல்லை தாண்டி மீன்பிடித்ததாக அவர்கள் இருவரையும் இந்திய கடலோர காவல் படை போலீசார் கைது செய்து அழைத்து வந்தனர். அப்போது, அவர்கள் பயன்படுத்திய படகு மற்றும் மீன்பிடி வலை உள்ளிட்ட உபகரணங்கள் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
மேலும் படிக்க: தமிழகத்தில் தனியார் பள்ளிகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்




கடலோர காவல் படை அதிகாரிகள் விசாரணை
பின்னர், அவர்களை ராமநாதபுரம் மண்டபம் பகுதியில் உள்ள கடலோர காவல் படை முகாமுக்கு அழைத்து சென்றனர். அங்கு, அவர்களிடம் கடலோர காவல் படையின் உயர் அதிகாரிகள் தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதைத் தொடர்ந்து, அவர்களை கியூ பிரிவு போலீசாரிடம் கடலோர காவல் படை போலீசார் ஒப்படைத்தனர். க்யூ பிரிவு போலீசாரும் அந்த மீனவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.இதில், எல்லை தாண்டி வந்து மீன் பிடித்தது எதற்காக, உண்மையிலேயே இவர்கள் மீனவர்கள் தானா என்பன உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டனர்.
சிறையில் அடைக்கப்படும் மீனவர்கள்
மேலும், அவர்களது படகின் உரிமம், ஆவணங்கள் உள்ளிட்டவற்றை போலீசார் ஆய்வு செய்தனர். இதை தொடர்ந்து இன்று மாலைக்குள் அந்த மீனவர்கள் ராமேஸ்வரம் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்படுவார்கள் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல, தமிழகத்தை சேர்ந்த சுமார் 45 மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்துள்ளது. இவர்களை விடுவிக்க கோரி தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ். ஜெய்சங்கருக்கு கடிதம் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.
மேலும் படிக்க: சிசிடிவியில் சிக்குவார்களா கொள்ளையர்கள்? வியாபாரிடம் 3 கிலோ தங்கம் வழிபறி