CMDA விதிகளில் அதிரடி மாற்றம்.. ஒரே மாதத்தில் 17 உயரமான கட்டடங்களுக்கு அனுமதி!!
CMDA New Rules Approval Speed Up: CMDA-வில் அமைச்சரின் ஒப்புதல் தேவையில்லை என்ற புதிய அரசாணை அமலுக்கு வந்த ஒரே மாதத்தில், 17 உயரமான கட்டடத் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. இது கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதற்கும் வழங்கப்பட்ட மொத்த ஒப்புதல்களின் எண்ணிக்கைக்குச் சமமானது என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை, ஜூலை 27: சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் (CMDA) கட்டட ஒப்புதல் முறைகளில் கொண்டு வரப்பட்ட அதிரடி மாற்றங்களைத் தொடர்ந்து, கடந்த ஒரு மாத காலத்தில் மட்டும் 17 உயரமான கட்டடத் திட்டங்களுக்கு CMDA நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது. இது, கடந்த 2024-ஆம் ஆண்டு முழுவதற்கும் வழங்கப்பட்ட மொத்த ஒப்புதல்களின் எண்ணிக்கைக்குச் சமம் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிக்க: அதிமுக EX MLA-க்கள் தகுதி நீக்க விவகாரம்.. எடப்பாடி பழனிசாமிக்கு பறந்த பரபரப்பு கடிதம்!
கடந்த ஆண்டுகளின் புள்ளிவிவரம்:
கடந்த சில ஆண்டுகளாகச் சென்னையில் உயரமான கட்டட திட்டங்களுக்கான ஒப்புதல் அளிப்பதில் பெரும் தொய்வு நிலவி வந்தது. CMDA வெளியிட்ட அதிகாரப்பூர்வத் தரவுகளின்படி, 2021ல் 66 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2022ல் 58 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2023ல் 30 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2024ல் 17 கட்டடங்களுக்கு ஒப்புதல், 2025ல் வெறும் 9 கட்டடங்களுக்கு மட்டுமே ஒப்புதல் பல விண்ணப்பங்கள் எவ்வித முடிவும் எடுக்கப்படாமல் கடந்த 3 ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் வைக்கப்பட்டு ஒப்புதலுக்காகக் காத்திருந்தன.
முந்தைய நடைமுறையும் ‘பார்ட்டி ஃபண்ட்’ புகார்களும்:
முந்தைய நடைமுறையின்படி, 18.3 மீட்டருக்கு மேல் உயரமுள்ள கட்டடத் திட்டங்கள் CMDA உறுப்பினர் செயலர் தலைமையிலான குழுவால் முதலில் பரிசீலிக்கப்படும். அதன்பின்னர், இறுதி ஒப்புதலுக்காக CMDA தலைவரான வீட்டுவசதித் துறை அமைச்சரின் ஒப்புதலுக்குக் கோப்புகள் அனுப்பி வைக்கப்பட்டன.
அரசு மட்டத்தில் அமைச்சரின் ஒப்புதல் பெறப் பொதுவாகக் குறைந்தபட்சம் 2 மாதங்கள் வரை தாமதமாகும். மேலும், இந்த ஒப்புதலைப் பெறுவதற்காக “பார்ட்டி ஃபண்ட்” என்ற பெயரில் மறைமுகமாக நிதி செலுத்த வற்புறுத்தப்பட்டதால் தான் நூற்றுக்கணக்கான கோப்புகள் முடக்கப்பட்டு நிலுவையில் இருந்ததாக ரியல் எஸ்டேட் மற்றும் கட்டுமானத் துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினர் குற்றம் சாட்டி வந்தனர்.
ஜூன் 15 அரசாணை: வேகம் எடுத்த CMDA கோப்புகள்!
இப்பிரச்சனைக்குத் தீர்வு காணும் வகையில், கடந்த ஜூன் 15-ஆம் தேதி தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறையால் புதிய அரசாணை ஒன்று வெளியிடப்பட்டது. அந்த அரசாணையின்படி, உயரமான கட்டடத் திட்டங்களுக்கு இனி அமைச்சரின் இறுதி ஒப்புதல் தேவையில்லை என்றும், அதிகாரம் பரவலாக்கப்பட்டுத் துறை அளவிலேயே முடிவெடுக்கலாம் என்றும் மாற்றங்கள் செய்யப்பட்டன.
இதையும் படிக்க: சோகத்தில் முடிந்த ஜாலி ரைடு.. கடலில் எஞ்சின் பழுதானதால் துயரம்.. அலையில் அடித்துச் செல்லப்பட்ட 2 சிறுவர்கள் பலி!
இந்தத் திருத்தப்பட்ட நடைமுறை அமலுக்கு வந்த ஒரே மாதத்திற்குள், பல ஆண்டுகளாக முடங்கிக் கிடந்த விண்ணப்பங்கள் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, 17 உயரமான கட்டடத் திட்டங்களுக்கு உடனடியாக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அமைச்சரின் ஒப்புதல் கட்டாயம் என்ற விதி நீக்கப்பட்டதால், தடையின்றி விரைவாக ஒப்புதல்கள் வழங்கி வருவதாக CMDA அதிகாரிகள் வட்டாரத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் புதிய கட்டடத் திட்டங்களும் ரியல் எஸ்டேட் வளர்ச்சியும் மீண்டும் வேகம் பிடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.