சென்னையில் பரிதாபம்.. போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்திய 24 வயது இளைஞர் துடிதுடித்து பலி!
24-Year-Old Youth Dies: சென்னையில் போதை மாத்திரையைத் தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் நேரடியாக நரம்பில் செலுத்திக் கொண்ட 24 வயது இளைஞர் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த ஆகாஷ் என்ற அந்த இளைஞருக்கு மனைவியும் ஒரு வயதுக் குழந்தையும் உள்ளனர்.
சென்னை, ஆகஸ்ட் 08: சென்னையில் அதிக போதைக்காக மாத்திரையைத் தண்ணீரில் கரைத்து ஊசி மூலம் உடலில் செலுத்திக் கொண்ட 24 வயது இளைஞர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மேலும் படிக்க: விருத்தாசலம் தனி மாவட்டம் ஆகிறதா? சட்டப்பேரவையில் பிரேமலதா விஜயகாந்த் வலியுறுத்தல்!
சம்பவத்தின் பின்னணி:
சென்னை பழைய வண்ணாரப்பேட்டை பகுதியைச் சேர்ந்தவர் ஆகாஷ் (24). இவருக்குச் சங்கீதா (20) என்ற மனைவியும், ஒரு வயதில் ஒரு குழந்தையும் உள்ளனர். ஆகாஷ் ஏற்கனவே மது மற்றும் கஞ்சா போன்ற போதைப் பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், வழக்கமாக உட்கொள்ளும் மது மற்றும் கஞ்சாவினால் போதை போதாததால், மாத்திரைகளை வாய்வழியாக உட்கொண்டு வந்துள்ளார்.
நண்பர்களின் தவறான வழிகாட்டுதல்:
போதை மாத்திரையை உட்கொண்டாலும் போதை நீண்ட நேரம் நீடிக்கவில்லை எனக் கூறிய ஆகாஷிடம், அவருடைய நண்பர்கள் சிலர் ஆபத்தான யோசனை ஒன்றைக் கூறியுள்ளனர். போதை மாத்திரையைத் தண்ணீரில் நன்றாகக் கரைத்து, இன்ஜெக்ஷன் மூலம் நரம்பில் நேரடியாகச் செலுத்தினால் அதிக நேரத்திற்குப் போதை இருக்கும் என்று நண்பர்கள் தெரிவித்துள்ளனர். நண்பர்களின் பேச்சைக் கேட்டு, நேற்று மதியம் ஆகாஷ் தனது வீட்டில் வைத்துப் போதை மாத்திரையைக் கரைத்து ஊசி மூலம் நரம்பில் செலுத்தியுள்ளார். ஊசி செலுத்திய சில நிமிடங்களிலேயே அவர் கட்டிலில் மயங்கி விழுந்துள்ளார்.
மருத்துவமனை பரிசோதனையில் அதிர்ச்சி:
வீட்டில் மயங்கிக்கிடந்த ஆகாஷை அவரது மனைவி சங்கீதாவும், தாயாரும் மீட்டு உடனடியாக சென்னை அரசு ஸ்டான்லி மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு அவரைப் பரிசோதித்த மருத்துவர்கள், உடல் முழுவதும் நரம்புத் தளர்ச்சி ஏற்பட்டு அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.
மேலும் படிக்க: அவையில் அப்பாவை காணோம் என கூறிய அமைச்சர்.. கொதித்தெழுந்த திமுகவினர்!
காவல்துறையின் எச்சரிக்கை:
இச்சம்பவம் குறித்து வண்ணாரப்பேட்டை காவல் துறையினர் முதற்கட்ட விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இளம் தலைமுறையினர் அதிக போதைக்கு ஆசைப்பட்டு இதுபோன்று ஆபத்தான முறைகளைக் கையாண்டு உயிரை மாய்த்துக் கொள்ளக் கூடாது என்றும், சட்டவிரோத போதைப்பொருள் விற்பனை மற்றும் நடமாட்டம் குறித்துத் தெரியவந்தால் பொதுமக்கள் உடனடியாகக் காவல்துறைக்குத் தகவல் தெரிவிக்க வேண்டும் என்றும் காவல் துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.